நீர்வளம் பெருக்குவோம்...!


நீர்வளம் பெருக்குவோம்...!
x
தினத்தந்தி 22 March 2019 5:57 AM GMT (Updated: 22 March 2019 5:57 AM GMT)

இன்று (மார்ச் 22-ந்தேதி) உலக தண்ணீர் தினம்


பூமியில் உயிர்களின் தோற்றத்திற்கும், அதன் நிலைத்தன்மைக்கும் தண்ணீர் மிக அவசியமாகும். இதனால் தான் நீரை திரவ தங்கம் என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் இன்று நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

நம் முன்னோர்கள் நீர் கொடுக்கும் மழையை பெருக்க இயற்கையை அழகாய் பாதுகாத்தனர். இல்லங்கள் மட்டுமின்றி தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் மரங்களை நட்டு வளர்த்தனர். நீர் மேலாண்மை செய்வதில் அதி புத்திசாலிகளாக திகழ்ந்தனர். ஊரைச்சுற்றி குளம், குட்டை, ஏரி, கண்மாய், ஊருணி போன்றவற்றை அமைத்து ஊருக்கு வளம் சேர்க்கும் நீர் ஆதாரங்களைப் பெருக்கினர். இன்று மரங்களை வெட்டும் அளவிற்கு நடுவது குறைந்து விட்டது. அப்படியே நட்டாலும் நீரூற்றி வளர்ப்பது இல்லை. இன்று பெரும்பாலும் மரம் நடும்விழா ஒரு சடங்காகவே பல இடங்களில் நடைபெறுகிறது.

‘வரப்பு உயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்‘ என்பது அவர்களது சீரிய வாழ்க்கை நெறியாக இருந்தது. இன்றோ பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நீராதாரங்களைப் பெருக்குவதை விடுத்து குளங்கள், ஏரிகள், கண்மாய்களை அழித்து கட்டிடங்களை அமைத்து வருகிறோம். இயற்கை தன்னளவில் சிதைந்து முறையற்ற பருவநிலைக்குள் சிக்கித் தவிக்கிறது இதனால் மழை ஒரேயடியாக இல்லாமல் போகிறது.

நீரை சேமிப்பது, நீர் நிலைகளைப் பாதுகாப்பது, அதனை புனரமைப்பது போன்ற செயல்களில் இன்னும் அலட்சியமாகவே இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. இன்று அவற்றில் பாதிக்குமேல் அழிந்து விட்டன இவைபோன்று ஆயிரக்கணக்கான ஏரிகள் இருந்தனர். தமிழகத்தில் செங்கல்பட்டு ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்ற பெருமையை பெற்றிருந்தது. ஆனால் இன்று உயிருடன் எத்தனை ஏரிகள் இருக்கின்றன என்பது கேள்விக் குறியே.

ஆடியில் ஓடிவரும் காவிரியை வரவேற்க ஆடிப்பெருக்குவிழா கண்டு நீருக்கு விழா எடுத்தவன் தமிழன். இன்று அவரவர் வீட்டு குழாய் அடிகளில் செம்பில் நீர் நிரைத்து வழிபடும் அவலநிலை உள்ளது. நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து அசிங்கப்படுத்தி விட்டோம். முறையாக மழைபெரும் நிலையை சிதைத்துவிட்டோம். அப்படியே பெய்தாலும் அதனை பாதுகாக்க, பழைய ஏரி, குளங்களை பாதுகாத்து வைக்கவில்லை. புதிய நீர் ஆதாரங்களை ஏற்படுத்தவும் இல்லை. ஒவ்வொருவரும் பணம் தேடி அலைவதில் குறியாக இருக்கிறோம். இப்படியே நம் போக்கு நீடித்தால் பணம் இருக்கும் குடிக்கத் தண்ணீர் இருக்காது. உணவின்றி பல நாட்கள் உயிருடன் இருக்கலாம் குடிக்க தண்ணீரின்றி ஓரிரு நாட்கள் உயிருடன் இருப்பதே அரிதென்பது நாம் அறிந்ததே.

கார்ப்பரேட் நிறுவனங்களின் பாட்டில் நீர் விற்பனை எத்தனை ஆண்டுகளுக்கு கைகொடுக்கும். தொடரும் தண்ணீர் பற்றாக்குறை அவதியினால் ஒவ்வொரு தனி மனிதனும் தண்ணீருக்காக தன் வருமானத்தில் 10 சதவீதத்தை செலவிட நேரிடும். இந்தக் கொடுமை மனிதனுக்கு ஆனால் இவ்வுலகில் ;மனிதன் மட்டும் வாழவில்லை. பிற உயிர்களும் வாழ்கின்றன. அவைகளுக்கு நீர் தேவை உண்டு. அவைகளுக்கு எந்த கார்ப்பரேட் நிறுவனத்தால் நீர் வழங்கிட முடியும். தண்ணீரின் பற்றாக்குறையினால் திறந்தவெளியில் நீரற்று போனதனால் உலகில் மற்ற உயிரினங்கள் தண்ணீருக்காக நெடுந்தூரம் பயணிக்கின்றன. அப்படி பயணித்தும் அவைகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் அவ்வுயிரினங்களும் அழிவின் விளிம்புக்கு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளப்பட்டு வருகின்றன.

தண்ணீரைப் பாதுகாப்பது பற்றி போதிய விழிப்புணர்வு இன்மையால் கிராமங்களை விட்டு பிழைப்புக்காக நகரம் நோக்கிச் செல்லும் அவல நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இதனால் வளங்கள் நிறைந்த கிராமங்கள் அழிந்து வருகின்றன. ஒவ்வொரு தனிமனிதனும் தன்பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுப்பதிலும், வேலையை அமைத்துக் கொடுப்பதிலும், நல்ல துணையை அமைத்துக் கொடுப்பதிலும், நிறைய பொருள்களை சேமித்துக் கொடுப்பதிலும் எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ அவ்வளவு கவனமாக இந்த பூமியை அவர்களுக்கு பத்திரமாகக் கொடுக்கவேண்டும் என்பதில் உறுதி கொள்ள வேண்டும்.

காவிரி தன்னளவில் பொய்த்தது பாலாறு, பாழானது எண்ணற்ற சிற்றாறுகளை புதருக்குள் தேடும் அவலம் ஏற்பட்டுள்ளது. பல ஆறுகளில் மணல் சூறையாடப்பட்டு கருவேலம் மண்டிக்கிடப்பதை காணும்போது கண்களில் நீர் வழிகிறது. வற்றாது வளம் சேர்த்த நதிகளை இழந்து வருகிறோம். தொடர்ந்து இந்நிலை நீடிக்குமானால் எத்தியோப்பியா, நைஜீரியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தண்ணீர், தேடி காடுகளுக்குள் வெகுதூரம் பயணிக்கின்றனர். அப்படியே பயணித்து கிடைக்கும் தண்ணீரும்; சுகாதாரமானதாய் இல்லை, கடும் நீர் பஞ்சத்தில் தவிக்கும் இந்நாடுகளைப்போல் நாமும் தவிக்கும் சூழல் உருவாகும். பசி பசி என்று அலைவதைவிட மிக கொடுமையாக தண்ணீர், தண்ணீர் என்று அலையும் சூழல் உருவாகி விடும்.

நீர் ஆதாரங்களை பெருக்கி பாதுகாப்போம்.


பு.இந்திராகாந்தி உதவிப்பேராசிரியர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி தஞ்சாவூர்.

Next Story