சிறப்புக் கட்டுரைகள்

பாதுகாப்பான பிரசவம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்....! + "||" + Safe delivery: problems and solutions

பாதுகாப்பான பிரசவம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்....!

பாதுகாப்பான பிரசவம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்....!
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே கூவத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் பொம்மி என்ற பெண் பிரசவ வலியுடன் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை. மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டாகியுள்ளது. குழந்தையின் தலையற்ற உடல் கருப்பையிலேயே தங்கியுள்ளது. அதை பிரசவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியில் எடுக்கவும் செவிலியர்களால் இயலவில்லை. இதன் காரணமாக ஆபத்தான நிலையில் அந்த பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையின் தலையில்லாத உடல் அகற்றப்பட்டுள்ளது. தற்போது தாயின் உயிருக்கு ஆபத்தில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் குழந்தை இறந்துவிட்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பையிலேயே குழந்தை இறந்து இருந்ததும், குழந்தையின் எடை 5.5 கிலோ கிராம் இருந்ததுமே இதற்குக் காரணம் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. குழந்தை கருப்பையிலேயே இறந்து இருந்தால் இது போன்று நடைபெறலாம். குழந்தை தலை வெளிவந்த பிறகு , உடல் வெளிவராத நிலையில் ஆயுதம் மூலம் குழந்தையை வெளியே எடுக்க கூடுதல், பலப்பிரயோகம் செய்தாலும் இது போன்று நிகழ வாய்ப்புண்டு. இவை மிக மிக அரிதாக நிகழக் கூடியவை. நேர்மையான விசாரணை இருந்தால் நடந்தது என்ன என்பது, வெளிவரும். காரணம் எதுவாக இருப்பினும் இந்த சோக நிகழ்வு நம்மை பதை பதைக்க வைத்துள்ளது.

மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள மாட்டோம். மருத்துவரையும், நவீன அறிவியல் மருத்துவத்தையும் நாடமாட்டோம். மருத்துவமனைகளையும், தடுப்பூசிகளையும் பயன்படுத்த மாட்டோம். இயற்கை முறையில் பிரசவம் பார்த்துக் கொள்வோம் என்ற முயற்சியில் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் போது திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண் சில மாதங்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தார். கணவர் மற்றும் அவரது நண்பர்கள் ‘யூ டியூப்’ மூலம் பிரசவம் பார்த்ததால் இக்கொடுமை நிகழ்ந்தது. பிரசவத்திற்கு பிந்தைய அதிக அளவிலான ரத்தப் போக்கால் அப்பெண் இறந்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள், சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் அவருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டது. அந்த ரத்தத்தை தானம் செய்த இளைஞரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த துயரங்கள் எல்லாம், நமது மருத்துவக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதனால் தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. பல்வேறு நன்மைகள் இருப்பதால் உலக நல நிறுவனம் மருத்துவமனை பிரசவத்தை தான் பரிந்துரைக்கிறது. இந்தியாவில் பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களில் 38 சதவீதத்தினர் பிரசவத்திற்குப் பிந்தைய ரத்த போக்கால்தான் இறக்கின்றனர். 1990-ம் ஆண்டில், உயிரோடு குழந்தை பிறந்த 1 லட்சம் பிரசவங்களில் 516 தாய்மார்கள் இறந்தனர். அந்த இறப்பு விகிதம் 2016-ம் ஆண்டில் 130 ஆக குறைந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் முறை அதிகரித்ததே. பிரசவத்தில், தாய் உயிர் பிழைத்தாலும் அவளின் ஏராளமான குழந்தைகள் இறந்தன. உதாரணத்திற்கு 16 குழந்தைகள் பிறந்தால் அதில் 8 குழந்தைகள் வரை இறந்தன. இவற்றில் எல்லாம் இன்றையை அறிவியல் தொழில் நுட்பம் மாற்றி உள்ளது. சமூகப் பொருளாதார வளர்ச்சியும் இம்மாற்றம் உருவாக காரணமாகியுள்ளது.

கருப்பையில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் சில குறைபாட்டை கூட அறுவைசிகிச்சைகள் மூலம் கருப்பையிலேயே சரிசெய்ய முடியும். குறை பிரசவக் குழந்தைகள், எடைகுறைவான குழந்தைகளைக் கூட காப்பாற்றிவிடும் ஆற்றல் பெற்றுள்ளோம். நவீன கருவிகள், சிறப்பு மருத்துவர்கள், புதிய மருந்துகள், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை நிபுணத்துவம் இதை சாத்தியப்படுத்தியுள்ளது. பெண் உறுப்பு வழியாக குழந்தை பிறப்பில் திடீரென சிக்கல் ஏற்பட்டாலோ, குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, நல்ல மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, தாய்-சேய் இருவரையும் காப்பாற்ற முடியும். பிரசவத்திற்குப் பிறகு சிக்கல்கள் ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை வழங்கி காப்பாற்ற முடியும்.

பிறக்கும் போது குழந்தைகளின் கழுத்தைச் நச்சுக் கொடி சுற்றியிருந்தாலோ, தலைக்கு பதில் கால் முதலில் வந்தாலோ, குறுக்கு வாக்கில் குழந்தை இடுப்பெலும்புக்குள் சிக்கிக் கொண்டாலோ, நஞ்சுக்கொடி முன் கூட்டியே கருப்பையில் இருந்து பிரிந்தாலோ, பிரசவத்திற்கு முந்தைய ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, அடிப்படை கட்டமைப்புகள் உள்ள மருத்துவமனையில் பிரசவம் நடந்தால் காப்பாற்றிவிடலாம். வசதிகள் இல்லாத மருத்துவமனைகளில் காப்பாற்ற முடியாது. ஆனால், நமது மருத்துவமனைகளின் தரம் குறைவாக உள்ளது. இது கூவத்தூர் போன்ற சம்பவங்களை உருவாக்குகிறது. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசியமான மருத்துவர்கள் இல்லை. செவிலியர்கள் இல்லை. 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குறைந்த பட்சம் 6 செவிலியர்கள் தேவை. ஆனால் தமிழகத்தில் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு செவிலியரோ அல்லது இரு செவிலியரோ மட்டுமே உள்ளனர்.

பாதுகாப்பான பிரசவத்திற்கு, பிரசவம் பார்க்கப்படும் மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர், மயக்க மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் இருந்திட வேண்டும். எப்போதும் தயார் நிலையில் உள்ள அறுவை அரங்கம் இருக்க வேண்டும். ரத்த வங்கியோ அல்லது ரத்த சேமிப்பு வங்கியோ நிச்சயம் தேவை. அல்ட்ராசவுண்டு ஸ்கேனும், சி.டி.ஜி (குழந்தையின் இதய துடிப்பை கண்டு பிடிப்பது) கருவி மிகவும் அவசியம். இவை இல்லாமல் பிரசவம் பார்க்கும் நிலையில், பிரசவத்தின் போது திடீர் சிக்கல்கள் ஏற்பட்டால், தாயையும் சேயையும் காப்பாற்ற முடியாது.

எந்த பிரசவமும், எந்த நேரத்திலும் சிக்கலாக மாற வாய்ப்புண்டு. தாய் சேய் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே, எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க கட்டாயப்படுத்தக்கூடாது. இவ்வாறு கட்டாயப்படுத்துவதே கூவத்தூர் போன்ற கொடுமைகளுக்குக் காரணம். பிரசவம் பார்ப்பதற்கும், அறுவை சிகிச்சை செய்வதற்கும் தேவையான அவசியக் கட்டமைப்பு உள்ள மருத்துவ நிலையங்களில் மட்டுமே பிரசவம் பார்க்க வேண்டும். வட்டாரம் தோறும் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று அல்லது நான்கு மையங்களை உருவாக்கிட வேண்டும். அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இதுவே கூவத்தூர் போன்ற நிகழ்வுகளை தடுத்திடும்.

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் தாய்-குழந்தை சாவு
ஏர்வாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் தாய்-குழந்தை உயிரிழந்தனர். இதனால் பிரசவம் பார்த்த செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை