2018-ஆம் ஆண்டில் சீனா உடனான வர்த்தக பற்றாக்குறை 5,800 கோடி டாலரை தாண்டியது


2018-ஆம் ஆண்டில் சீனா உடனான வர்த்தக பற்றாக்குறை 5,800 கோடி டாலரை தாண்டியது
x
தினத்தந்தி 22 March 2019 5:58 AM GMT (Updated: 22 March 2019 5:58 AM GMT)

கடந்த 2018-ஆம் ஆண்டில் சீனா உடனான வர்த்தக பற்றாக்குறை 5,800 கோடி டாலரை தாண்டி உள்ளது.

புதுடெல்லி

நம் நாட்டின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக சீனா இருந்து வருகிறது. அங்கிருந்து நம் நாடு அதிகமாக இறக்குமதி செய்வதால் அந்நாட்டுடன் நமக்கு வர்த்தக பற்றாக்குறை (இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம்) அதிகமாக இருக்கிறது. சீனாவில் ஏற்றுமதி அதிகம் என்பதால் அங்கு பொதுவாக வர்த்தக உபரி (ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையே உள்ள வித்தியாசம்) நிலவுகிறது.

2017-ஆம் ஆண்டில், நம் நாட்டில் இருந்து சீனாவிற்கு 1,634 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி ஆகி இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 40 சதவீத வளர்ச்சியாக இருந்தது. இதே காலத்தில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி 15 சதவீதம் உயர்ந்து 6,810 கோடி டாலராக அதிகரித்தது. எனவே சீனா உடனான வர்த்தகத்தில் நம் நாட்டிற்கு 5,176 கோடி டாலர் அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்நிலையில், சென்ற ஆண்டில் (2018) சீனா உடனான பரஸ்பர வர்த்தகத்தில் இந்தியாவிற்கு பற்றாக்குறை 5,800 கோடி டாலருக்கு மேல் அதிகரித்து இருக்கிறது.

நடப்பு 2018-19-ஆம் நிதி ஆண்டில், டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் சீனாவிற்கு 1,270 கோடி டாலர் அளவிற்கு சரக்குகள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. இது ஏறக்குறைய சென்ற நிதி ஆண்டின் அளவை (1,333 கோடி டாலர்) நெருங்கி உள்ளது. எனவே நடப்பு ஆண்டில் அந்நாட்டுக்கான ஏற்றுமதி இந்த அளவையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கீட்டுக் காலத்தில் சீனாவிற்கு கடல் உணவுப் பொருள்கள், இயற்கை ரசாயனங்கள், பிளாஸ்டிக், பெட்ரோலியம், திராட்சை மற்றும் அரிசி ஆகிய பொருள்கள் அதிக அளவில் ஏற்றுமதி ஆகி இருக்கின்றன.

நடவடிக்கைகள்

சீனா உடனான வர்த்தகத்தில் நமக்கு அதிக அளவில் பற்றாக்குறை இருப்பதால் மத்திய அரசு கவலை கொண்டுள்ளது. எனவே அதன் உடனான வர்த்தகத்தில் பற்றாக்குறையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Next Story