சிறப்புக் கட்டுரைகள்

ஆந்திராவில் மகுடம் சூடப்போவது யார்? + "||" + In Andhra Pradesh Who is going to win

ஆந்திராவில் மகுடம் சூடப்போவது யார்?

ஆந்திராவில் மகுடம் சூடப்போவது யார்?
அண்டை மாநிலமான ஆந்திராவில் கோடை வெயிலின் அனல் காற்றை விட தேர்தலின் அனல் காற்று அதிகமாகவே வீசுகிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலுடன், 175 இடங்களை கொண்ட சட்டசபைக்கும் ஏப்ரல் 11-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
மோடி அலையில் ஜொலித்த நாயுடு

கடந்த 2014 தேர்தலிலும் இப்படித்தான் நாடாளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் ஒன்றாகத்தான் நடந்தது. என்ன, அப்போது தெலுங்குதேசம் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது அந்த கூட்டணிக்கு சரியான போட்டியாக அமைந்தது ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மட்டும்தான்.

அப்போது அங்கு எழுந்த கேள்வி, ஆந்திராவை ஆளப்போவது சந்திரபாபு நாயுடுவா, ஜெகன்மோகன் ரெட்டியா என்பதுதான். இந்தக் கேள்வி ஒரு பக்கம் எதிரொலித்தாலும் நாடு முழுவதும் வீசிய நரேந்திர மோடி அலை, சந்திரபாபு நாயுடுவை எளிதாக கரை சேர்த்தது.

அபார வெற்றி

88 இடங்களைப் பிடித்தால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு 103 இடங்கள் கிடைத்தன. பாரதீய ஜனதாவுக்கு 4 இடங்கள் கிடைத்தன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியோ, ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் கூட 66 இடங்களைப்பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக வந்தது.

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில் மொத்தம் உள்ள 25 இடங்களில் தெலுங்குதேசம் கட்சிக்கு 15, பாரதீய ஜனதாவுக்கு 2, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 8 இடங்கள் கிடைத்தன.

காட்சிகள் மாறின...

அங்கு கடந்த 5 ஆண்டுகளில் காட்சிகள் மாறி விட்டன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்ற காரணத்துக்காக பாரதீய ஜனதா கூட்டணியை விட்டு தெலுங்குதேசம் வெளியேறியது.

இந்த முறை தெலுங்குதேசம் அங்கு தனித்து களம் இறங்குகிறது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் தனித்தே களம் காண்கிறது.

இவர்களுக்கு இடையே மூன்றாவது நபராக களத்தில் இருப்பவர் ஒருவர் உண்டு. அவர்தான் நடிகர் பவன்கல்யாண். அண்ணன் சிரஞ்சீவி பிரஜாராஜ்யம் கட்சி தொடங்கி போணியாகாத நிலையில், தம்பி பவன்கல்யாண் கண்டுள்ள ஜனசேனா கட்சி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வளர்ந்திருக்கிறார் ரெட்டி

கடந்த 5 ஆண்டு காலத்தில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தனது கட்சியை வளர்த்திருக்கிறார். அவரும் வளர்ந்திருக்கிறார். கட்சியின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. அவரது தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சேர்த்து தந்து விட்டு சென்றிருக்கிற நல்ல பெயர், தனயனுக்கு உதவி வருகிறது.

இளைஞர் என்பதால் அவர் நவீன அரசியலுக்கு ஒத்து போகிறார்.  கட்சித்தலைவர்கள், தொண்டர்களுடன் இணக்கமான நல்லுறவைப் பராமரித்து வருகிறார். ஆளும் தெலுங்குதேசம் கட்சியில் நெல்லூர் (ஊரகம்) சட்டசபை தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் மந்திரி ஆடலபிரபாகர ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் சேர்ந்திருக்கிறார். மாநில நீர்ப்பாசன துறை மந்திரி உமா மகேஸ்வரராவின் சகோதரர் தேவினேனி சந்திரசேகர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவி உள்ளார். காமெடி நடிகர் அலி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்காக பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.

பெரிய தலைகள்...

இப்படி பல பெரிய தலைகள், அந்தக் கட்சிக்கு படையெடுத்து இருக்கின்றன. இது பலம் சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சந்திரபாபு நாயுடுவை குறிவைத்தே ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் அமைந்திருக்கிறது. தேர்தலையொட்டியே அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். 59 லட்சம் போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்திருப்பதாகவும் சொல்கிறார். சந்திரபாபு நாயுடு சைபர் கிரிமினல் என சாடுகிறார். அவரது பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.

தெலுங்குதேசத்துக்கு பின்னடைவு

அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடு பலம் இழந்தே காணப்படுகிறார். கடந்த முறை எளிதாக ஆட்சியைப் பிடித்த அவர், நினைத்ததை சாதித்துக் காட்ட முடியவில்லை. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை அவர் பெற்றுத்தரவில்லை என்பது பின்னடைவாக காணப்படுகிறது. அத்துடன் பாரதீய ஜனதா கட்சியின் தயவின்றி தனியொருவனாகத்தான் அவர் களத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது.

சொல்லிக்கொள்ளும் படியாக எதையும் 5 ஆண்டுகளில் அவர் செய்துவிடவில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியைத்தான் இவர் குறி வைக்கிறார். சமீபத்தில் அவரது சித்தப்பா, ஒய்.எஸ். விவேகானந்தா ரெட்டி கொலையில் உண்மை குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என்று சொல்கிறார். தனது அரசுக்கு எதிராக பாரதீய ஜனதா கூட்டணியுடனும், தெலுங்கானா ராஷ்டீர சமிதியுடனும் கூட்டு சேர்ந்து ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சதி செய்கிறார் என்றெல்லாம் சாடுகிறார்.

‘பவர்ஸ்டார்’ பவன் கல்யாண்

இன்னொரு பக்கம் பவர்ஸ்டார் பவன் கல்யாண் என்று அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிற பவன் கல்யாணும் பம்பரமாக சுழன்று வருகிறார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பலமாக அமைந்து இருக்கிறது. பூத் வாரியாக கணக்கு போட்டு இந்த கூட்டணி களப்பணியாற்றுவதாக சொல்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், வேலைஇல்லா திண்டாட்டம், ஊழல், பெண்கள் பாதுகாப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக நாங்கள் போர் தொடுத்து இருக்கிறோம் என்று அவர் அறிவித்து, மக்களை சந்திப்பது கவனத்தை கவர்வதாக அமைந்திருக்கிறது.

யார் கனவு பலிக்கும்?

ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற சந்திரபாபு நாயுடுவின் கனவு பலிக்குமா, தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி விட்டுச்சென்ற இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் கனவு நிறைவேறுமா, அண்ணனால் முடியாததை தம்பியாக நான் வென்றெடுத்து காட்ட வேண்டும் என்று களமிறங்கியுள்ள பவன் கல்யாண் கனவு பலிக்குமா என்ற கேள்வி ஆந்திராவெங்கும் எதிரொலிக்கிறது.

வழக்கம்போல குப்பம் சட்டசபை தொகுதியில் சந்திரபாபு நாயுடுவும், புலிவேந்துலா தொகுதியில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியும் போட்டியிடுகிறார்கள்.

பவன்கல்யாண் பாதுகாப்பு உணர்வுடன் ஒன்றுக்கு இரண்டாக கஜூவாகா, பீமாவரம் ஆகிய தொகுதிகளில் நிற்கிறார்.

தேசிய கட்சிகள்

அது சரி, இரு பெரும் தேசிய கட்சிகளைப் பற்றி சொல்லவே இல்லையே என்று கேட்கத்தோன்றலாம். ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி 2009-ம் ஆண்டு மறைந்தபோதே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கும் அங்கு மறையத்தொடங்கியது. வட மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமாக இருந்தபோது, கைகொடுத்த தென் மாநிலங்களில் ஆந்திராவுக்கு முக்கிய பங்கு உண்டு. இப்போது அது பழைய கதை ஆகி விட்டது. தெலுங்கு தேசம் கூட கை கோர்த்து போட்டியிட மேற்கொண்ட முயற்சிகூட கை கொடுக்கவில்லை.

பாரதீய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் அதற்கு தென்மாநிலங்கள் கை கொடுப்பதே இல்லை. குறிப்பாக ஆந்திராவில் அந்தக் கட்சிக்கு பலம் இல்லை.

எனவே இவ்விரு கட்சிகளும் அங்கு “உள்ளேன் ஐயா” என்று சொல்லிக்கொள்கிற நிலையில் மட்டுமே இருக்கின்றனவே தவிர களத்தில் மல்லு கட்டுகிற நிலை இல்லை.

கரை சேரப்போவது யார்?

கடைசியில் அங்கு கரை சேரப்போவது யார்? மத்தியில் புதிய ஆட்சி அமைய பங்களிப்பு செய்யப்போவது யார்?

ஆந்திர மக்கள் 11-ந்தேதி மின்னணு வாக்கு எந்திரங்கள் வாயிலாக பதில் சொல்ல, அவர்கள் சொன்ன பதில் என்ன என்பதை மே மாதம் 23-ந்தேதி நாடு அறிந்துகொள்ளப்போகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை