சிறப்புக் கட்டுரைகள்

உலகை ஒரே குடையில் ஒன்றுபடுத்தும் வானிலை சேவை...! + "||" + World Meteorological Organization is the company that improves and integrates the quality of weather services.

உலகை ஒரே குடையில் ஒன்றுபடுத்தும் வானிலை சேவை...!

உலகை ஒரே குடையில் ஒன்றுபடுத்தும் வானிலை சேவை...!
உலக அனைத்து நாடுகளின் வானிலை சேவைகளின் தரத்தை மேம்படுத்தி ஒருங்கிணைந்து செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் தான் உலக வானிலை கழகம்.

இன்று (மார்ச்23-ந் தேதி) உலக வானியல் தினம்.

வானிலைக்கு எல்லை இல்லை. எல்லா நாடுகளின் வானிலை தரவுகள் பரிமாற்றம், எல்லா நாடுகளிலும் உள்ள கணினி சார் கணிப்புகளின் பரிமாற்றம், வெப்ப மண்டல புயல்களுக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள சிறப்பு மையத்திலிருந்து அறிக்கைகள் மற்ற நாடுகளில் உள்ள தரவுகள் மற்றும் அறிக்கைகள் பரிமாற்றம் என்று வானிலை அறிக்கை உலகை ஒரே குடையில் ஒன்றுபடுத்தி செல்கிறது.

இந்த உலக வானிலை கழகம் தொடங்கப்பட்ட நாள் மார்ச் மாதம் 23-ந் தேதியாகும். இந்த தினத்தை கொண்டாடப்படும் இந்த வருடத்திற்கான மைய கருத்து சூரியன் பூமி மற்றும் வானிலை என்பதே. இந்த உலகில் நடைபெறும் வானிலை நிகழ்வுகள், கடல் நீரோட்டம் மற்றும் நீரியல் சுழற்சிக்கு சூரியனே காரணம். நமது பொங்கல் பண்டிகையும் நமது வாழ்விற்கு ஆதரமாக உள்ள சூரியனை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது.

கோடைக்காலம், குளிர்காலம் என்று ஏன் மாறி, மாறி வருகிறது? பூமியானது 23½ டிகிரி கோணத்தில் சாய்ந்திருப்பதால் அது சூரியனை வலம் வரும்போது, சூரியனின் நேர்கிரணங்கள் நமது பகுதியின் மீது விழுகிறது. அதை கோடைகாலம் என்கிறோம். பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் உள்ளது. 4 ஆயிரத்து 500 கோடி வருடங்களுக்கு முன் சூரியன் தோன்றியதாக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒளிரும் அயனிகளை கொண்ட இந்த வெப்ப பந்தை வானிலை மற்றும் கால நிலையை உருவாக்கி நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக அமைகிறது. கடந்த 30 வருடங்களாக செயற்கைகோள் பதிவு செய்த அளவீடுகளை பார்க்கும்போது சூரியனிடம் இருந்து பூமி பெற்ற சக்தி என்பதில் பெரும் மாற்றம் எதுவும் இல்லை. சமீப காலங்களில் பூமி வெப்பமடைவதற்கு மனிதனின் நடவடிக்கைகளே காரணம்.

பூமியானது வெப்பமடைவதற்கு சூரியனின் கிரணங்கள் காரணம் அல்ல. அதை பூமியானது கிரகித்து கொண்டு வெளிவரும் நீண்ட அலை கதிர்களை பூமியில் உள்ள நீராவி, கார்பன்-டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள் கிரகிப்பதால் தான் வெப்பமடைகிறது. இதன் காரணமாக பூமியின் சராசரி வெப்பம் என்பது 15 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. இதையே பசுமை குடில் விளைவு என்கிறோம்.

மனிதனுடைய நடவடிக்கையின் காரணமாக, தொழில் புரட்சிக்கு பிறகு பூமியின் வெப்பம் அதிகரித்துள்ளது. கார்பன்-டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் இதுவரை இல்லாத புதிய வாயுக்கள் குறிப்பாக சி.எப்.சி. எனப்படும் கார்பன் வாயு உருவாகி உள்ளன. இந்த பசுமை குடில் விளைவு இல்லாது இருந்திருந்தால் பூமியின் சராசரி வெப்பம் என்பது மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்திருக்கும். இப்போது இருப்பதை விட 21 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும். உலகம் வெப்பமடைகிறது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மை.

இதில் கார்பன்-டை ஆக்சைடு பங்கு என்பது 82 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மனித நடவடிக்கைகளின் காரணமாக இந்த பசுமை குடில் வாயுக்கள் என்பது அதிகமாகும் என்பது தெரிந்ததே. இந்த நூற்றாண்டு முடிவதற்குள் பூமியின் சராசரி வெப்பம் என்பது மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. ஐக்கிய நாடுகளின் காலநிலை மாறுபாட்டிற்கான கட்டமைப்பு பாரீஸ் நகரில் ஏற்பட்ட உடன்படிக்கை இந்த வெப்ப உயர்வை 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த கால நிலை மாற்றம் என்பது கடும் வெப்ப நிலை நிகழ்வுகளை தோற்றுவிப்பதற்கான காரணமாகிறது. இந்த வெப்ப உயர்வு என்பது உள்ளூர் வானிலை வெப்ப பதிவுகளில், வட்டார, தேசிய மற்றும் உலக அளவுகளில் அதிகமாவதை காண்கிறோம். சில இடங்களில் வெப்ப நிலை நிகழ்வுகள் சீக்கிரமாக உருவாவதையும், பல மாதங்கள் நீடிப்பதையும் காண முடிகிறது.

காலநிலையை கணிக்கும் கணினி சார் வெளியீடுகள் சராசரி வெப்பத்தின் அளவு நிலம் மற்றும் கடல் பகுதிகளில் அதிகமாகும் என்றும் சில பகுதிகளில் கடும் மழைஇருக்கும். சில பகுதிகளில் மழையின் அளவு குறைந்து வறட்சி நிலையும் ஏற்படும் என்பதை காண்பிக்கின்றன: காலநிலை தொடர்பான தாக்கத்தால் உடல் நலம், வாழ்வாதாரம், உணவு மற்றும் குடிநீர் தேவை, பொருளாதார வளர்ச்சி பாதிப்படைவதை காணலாம். சூரியன் என்பது புதுப்பிக்கவல்ல எரிசக்திக்கான ஆதாரம் என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இப்போது சூரிய சக்தி என்பது உலகெங்கிலும் பிரபலமாகி வருகிறது. சூரிய சக்தியை மின்சாரம் தயாரிப்பிலும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களிலும் பயன்படுத்துவதை காண்கிறோம்.

வானிலை மற்றும் காலநிலை நிகழ்வுகளில் சூரியனின் தாக்கத்தை பற்றி ஒரு புரிதல் ஏற்படுவதன் மூலம் உலக வானிலை கழகம் இயற்கை சீற்றங்களிலிருந்து உலகை காப்பாற்றி கொள்ளும் சமுதாயத்தை உருவாக்குவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த பூமிக்கான அமைப்பை உருவாக்குவதில் உலக வானிலை கழகம் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி வானிலை மைய சேவையின் தரத்தையும் வானிலை, காலநிலை, நீரியல் துறைகளில் உயர்த்தி, கடல் மற்றும் ஆற்று சூழல் பாதுகாப்பிலும் அர்ப்பணித்து கொள்வதில் முயற்சியை மேற்கொள்கிறது.

வானம் தெள்ள தெளிவாக மேகமே இல்லாத சூழ்நிலையில் சூரியனின் கிரணங்கள் தங்கு தடையில்லாமல் பூமியை வந்து சேரும். மேகம் இருந்தால் அதை தடுக்கும். இதுவே மார்ச் போன்ற மாதங்களின் வெப்பம் அதிகமாக உணருவதற்கு காரணம். மே மாதத்தில் தெற்கு அரை கோளத்தில் வீசும் கீழ்திசை காற்றானது, பூமத்திய ரேகையை கடந்து பூமியின் சுழற்சி காரணமாக மேற்கு திசை காற்றாக மாறுகிறது. மேற்கு திசை காற்று என்றால் சூடான நில பகுதியிலிருந்து வரும் காற்று ஆகும். இந்த திசை மாற்றம் தென்மேற்கு பருவ மழை காலம் வரப்போவதை குறிக்கிறது. கடலோர பகுதிகள் குளிர்வடைய வேண்டும் என்றால் கடல் காற்று வீச வேண்டும். கடல் காற்றானது காலை 10.30 மணிக்கு முன் வீசத்தொடங்கினால், வெப்பநிலை இயல்பு நிலையில் இருக்கும். நில காற்றானது கடல் காற்றை தடுத்தால், அன்று உயர்ந்தபட்ச வெப்பநிலை இயல்புநிலையை காட்டிலும் அதிகமாக இருக்கும். கடல் காற்று வீசாவிட்டால் அன்று உயர்ந்த பட்ச வெப்ப நிலை நிலவும்.

எஸ்.ஆர்.ரமணன், முன்னாள் இயக்குனர், புயல் எச்சரிக்கை மையம், சென்னை.