சிறப்புக் கட்டுரைகள்

இளம்பெண்களுக்கு சமூக வலைதளங்களால் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறதா? + "||" + For younger women through social web sites inferiority complex

இளம்பெண்களுக்கு சமூக வலைதளங்களால் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறதா?

இளம்பெண்களுக்கு சமூக வலைதளங்களால் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறதா?
இணைய சமூக வலைதளங்களில் உலவுவதை இளம்பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். இதனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டாகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அழகானவர்களின் புகைப்படங்களை, காணொளிகளைப் பார்க்கும்போது அல்லது நட்சத்திரங்களின் மிகைப்படுத்தப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது பெண்களுக்குள் தாங்கள் அழகற்றவர் என்பது போன்ற எண்ணம் ஏற்படுகிறதா?

காலம் காலமாக பள்ளியில், கல்லூரியில், அலுவலகங்களில், வெளியிடங்களில் பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் வெளித்தோற்றத்தை வைத்துச் செய்யப்படும் கேலி, கிண்டல்கள் பாதிக்கின்றன. தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களும், பயனர்களுக்கு அவர்களது தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் இடமாக மாறி வருகின்றன.

அதாவது, சமூக இணையதளங்களின் தொடக்க காலத்தில் அவை மக்கள் தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களுடன் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் தளமாக விளங்கின. ஆனால், காலம் செல்லச் செல்ல தொலைக்காட்சி, ஊடகம் போன்றவற்றைப் போல சமூக வலைதளங்களிலும் பிரபலங்களின், குறிப்பாக திரை நட்சத்திரங்களின் ஆதிக்கம் மேலோங்கத் தொடங்கியது.

எனவே, இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை, சமூக ஊடகங்கள் முகம் தெரியாதவர்களுடனான உறவுக்கான அடித்தளமாக விளங்கும் அதேநேரம், பலரது தோற்றத்தையும், செயல்பாட்டையும் பார்த்து தங்களது தோற்றம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் தாழ்வு மனப்பான்மையையும், ஒருவித மன அழுத்தத்தையும் அடையச் செய்வதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளில், ஒருவர் தனது உடல் தோற்றம் குறித்து கவலை அடைவதற்கான காரணங்களுள் ஒன்றாக சமூக ஊடகங்கள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.

‘‘இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் பலரது புகைப்படங் களைப் பார்ப்பவர்கள், அவர்களுடன் தங்களது தோற்றத்தை ஒப்பிடுகின்றனர்’’ என்று கூறுகிறார், ஆஸ்திரேலியாவின் மாக்கியூரி பல் கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் ஜாஸ்மின் பர்டெலி.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் 227 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், சமூக ஊடகங்களில் பெண்கள் தங்களது தோற்றத்தை திரை நட்சத்திரங்களுடனும், பிரபலங் களுடன் அதிகளவில் ஒப்பிடுவதும், தங்களது குடும்பத்தினருடன் பொருத்திப் பார்ப்பதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை பெண்கள், தங்களைப் பற்றிய நேர்மறையான தகவல்களை மட்டும்தான் பதிவு செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை குறித்த மற்றொரு பகுதியை அறியாதவர்கள், தங்களது வாழ்க்கையின் மோசமான நினைவுகளுடன் ஒப்பிடுகின்றனர். இதுவே பிரச்சினையின் தொடக்கமாக அமைகிறது என்று கூறுகிறார் ஜாஸ்மின்.

வெஸ்ட் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான ஏமி ஸ்லேட்டர், 2017-ம் ஆண்டு வெளியிட்ட தனது ஆய்வுக் கட்டுரைக்காக இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் 160 மாணவிகளைச் சந்தித்தார். அதில், உடற்பயிற்சி சார்ந்த காணொளிகளை மட்டும் பார்க்கும் மாணவிகள், தங்களது உடல்நலம் குறித்து மிகவும் தாழ்வாக உணர்ந்ததாகவும், சுயமுன்னேற்றம் குறித்த வாசகங்களைப் படிப்பவர்கள் உற்சாகமாகக் காணப்பட்டதாகவும், காணொளி, சுயமுன்னேற்றம் ஆகிய இரண்டையுமே பார்த்தவர்களுக்கு வாழ்க்கைப்போக்கில் நல்ல பலன்களை அளித்ததை உணர்ந்ததாகவும் ஏமி கூறுகிறார்.

அதேபோன்று கனடாவின் டொராண்டோவில் உள்ள யார்க் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் இரு வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவினர் ஐபாட் மூலம் செல்பி எடுத்து அதை பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யவும், மற்றொரு குழுவினர் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படத்தை மெருகூட்டும் செயலியில் செல்பி எடுத்து அதேபோன்று பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆச்சரியமளிக்கும் வகையில், இரு குழுக்களைச் சேர்ந்த மாணவிகளுமே தங்களது செல்பி குறித்த நேர்மறையான எண்ணங்களை விட எதிர்மறையான எண்ணங்களையே அதிகம் கொண்டிருந்தனர். அதாவது, செல்பியில் தன்னை வேறுவகையில் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்றும், தன்னுடைய படத்துக்கு எத்தனை ‘லைக்’குகள் கிடைத்திருக்கும் என்பதைப் பார்ப்பதற்கும் அவர்கள் ஆவலோடு காத்திருந்ததாகவும் அந்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம்பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிகளாக நிபுணர்கள் கூறியுள்ளவை...

பெண்கள் தங்களை யாருடனும் ஒப்பிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்துக்கு ஸ்மார்ட்போன்தான் முக்கியக் காரணம் என்று நீங்கள் நினைத்தால், சிறிது காலத்துக்கு அவசியமான விஷயங்கள் தவிர மற்றவற்றுக்கு அதை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் நல்ல பதிவுகளை மட்டும் பார்க்க வேண்டுமென்று விரும்பினால், அதற்கேற்றாற்போல் தகவமைப்பு செய்ய வேண்டும்.

சமூக வலைதளங்களில் நேர்மறையான எண்ணத்தை உண்டாக்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தெரிவுகளை இளம்பெண்கள் மாற்றி அமைக்கலாம்.

இந்த அறிவுறுத்தல்கள் எல்லாம், இளம்பெண்களுக்கு மட்டுமல்ல, ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்தும் அனைவருக்கும்தான்.