மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் முன்...


மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் முன்...
x
தினத்தந்தி 23 March 2019 10:21 AM GMT (Updated: 23 March 2019 10:21 AM GMT)

பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? அதற்குமுன், சில விஷயங்களில் தெளிவு பெறுவது அவசியம்.

நிதி முதலீடுகள் செய்யும்போது வரும் லாப, நஷ்டங்கள் தனிமனிதனின் பொருளாதாரத் தளங்களில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை. எனவே அது தொடர்பான அச்சமும் முதலீட்டாளர்களுக்கு இருக்கவே செய்யும். மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் பல்வேறு பரிணாமங்களில் கிடைப்பதால் அவற்றை லாவகமாகத் தேர்வு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

நாம் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களாகக் கருதுபவர்களும்கூட தமது முந்தைய தவறுகளில் இருந்துதான் பாடம் கற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் ஒன்றையொன்று ஒப்பிடுவதில் ஏற்படும் தடுமாற்றங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனாலும் சரியான மியூச்சுவல் பண்ட் திட்டத்தைப் பிரித்தெடுக்கச் சில அளவுகோல்கள் உள்ளன.

மியூச்சுவல் பண்டில் பண்ட் மானேஜரின் பின்புலம் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். பண்ட் மானேஜரின் கடந்த காலச் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும். அவர்கள் நிர்வகித்த பண்ட்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளதா என்பதையும், பெஞ்ச் மார்க் என்கிற நிலைக்குறிகளை அடைந்துள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். எத்தனை விதமான முதலீட்டுத் திட்டங்களைக் கையாண்டுள்ளார் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

மியூச்சுவல் பண்ட்டில் ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் உண்டு. வளர்ச்சி, விலை உள்ளிட்டவை குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘வேல்யூ இன்வெஸ்டிங்’ எனப்படும் மதிப்பு முதலீடு, ‘குரோத் ஸ்டிராட்டர்ஜி’ எனப்படும் வளர்ச்சி வழி மற்றும் ‘பிளெண்டட் ஸ்டிராட்டர்ஜி’ எனப்படும் கலப்பு உபாயம் போன்ற நுட்பங்கள் முதலீட்டுத் திட்டங்களில் உள்ளன.

நாம் தேர்வு செய்யும் மியூச்சுவல் பண்ட் கடந்த காலத்தில் வருவாயை ஈட்டுவதில் சரியாகச் செயல்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதேநேரம், கடந்த காலத்தில் வெற்றிகரமாகச் செயல்படாத ஒரு பண்ட், எதிர்காலத்திலும் அதேபோல் நீடிக்கும் என்ற முடிவுக்கு வரக்கூடாது. ஆக, மியூச்சுவல் பண்டில் எப்போதும் ஒரே அளவுகோலைப் பயன்படுத்தக்கூடாது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மியூச்சுவல் பண்ட் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ‘ஸ்டாண்டர்டு டீவியேஷன்’ எனப்படுகிறது. இதைப்போல பல பிரத்யேக பதங்கள் உள்ளன. அவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.

பல்வேறு முகமைகள் வழங்கும் தரவரிசைகளைச் சரியான அளவுகோலுடன் ஆராய்ந்து ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம். கொடுக்கப்பட்ட மதிப்பீடுகள், தர வரிசைகளை ஆராய்ந்து, ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

Next Story