சென்ற வார பங்கு வர்த்தகத்தில் நிகர அடிப்படையில் சென்செக்ஸ் 140.29 புள்ளிகள் அதிகரித்தது நிப்டி 30.05 புள்ளிகள் முன்னேற்றம்


சென்ற வார பங்கு வர்த்தகத்தில் நிகர அடிப்படையில் சென்செக்ஸ் 140.29 புள்ளிகள் அதிகரித்தது நிப்டி 30.05 புள்ளிகள் முன்னேற்றம்
x
தினத்தந்தி 24 March 2019 6:52 AM GMT (Updated: 24 March 2019 6:52 AM GMT)

சென்றவார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 140.29 புள்ளிகள் அதிகரித்து 38,164.61 புள்ளிகளில் முடிவுற்றது.

மும்பை

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 30.05 புள்ளிகள் முன்னேறி 11,456.90 புள்ளிகளாக இருந்தது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி அன்று (வியாழக்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. எனவே சென்ற வாரத்தில் நான்கு தினங்கள் மட்டுமே பங்கு வியாபாரம் நடைபெற்றது.

அந்த நான்கு தினங்களில் ஏற்றுமதி-இறக்குமதி புள்ளிவிவரங்களும், சர்வதேச நிலவரங்களும் பங்குச்சந்தைகளில் தாக்கம் ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். அதற்கேற்ப வர்த்தகம் நடைபெற்றது.

முதல் வர்த்தக தினம்

வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று பங்கு வர்த்தகம் தொடர்ந்து ஆறாவது நாளாக நன்றாக இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 960 கோடி டாலராக குறைந்து இருக்கிறது. அது முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அத்துடன் ரூபாய் மதிப்பு ஒரு கட்டத்தில் உயர்ந்ததும், அன்னிய முதலீடு அதிகரித்ததும் வர்த்தகத்திற்கு வலுச்சேர்த்தன.

மேலும் மற்ற ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியது போன்றவையும் இந்திய பங்குச்சந்தைகளுக்கு ஊக்கம் அளித்தது. வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 70.75 புள்ளிகள் அதிகரித்தது. நிப்டி 35.35 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

ஏழாவது நாளாக விறுவிறுப்பு

செவ்வாய்க்கிழமை அன்று தொடர்ந்து ஏழாவது நாளாக பங்கு வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது. அன்னிய முதலீட்டு நிலவரம் திருப்திகரமாக இருந்து வந்த நிலையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலை பெற்று வந்ததால் பங்கு வர்த்தகம் மேலும் முன்னேற்றம் கண்டது. மேலும் பல ஆசிய நாடுகளில் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டது, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பங்கு வியாபாரம் நன்றாக இருந்தது இந்திய பங்கு வர்த்தகத்திற்கு வலுச்சேர்த்தது. இறுதியில் சென்செக்ஸ் 268.40 புள்ளிகள் உயர்ந்தது. நிப்டி 70.20 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

லாப நோக்கம்

சர்வதேச நிலவரங்கள் எதிரொலியாக புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் ஏற்ற தாழ்வுகளை சந்தித்தது.

பெரும்பாலான ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சுணங்கியது. ஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின. உலக நிலவரங்களால் இங்கு பங்கு வர்த்தகம் ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டது. மேலும் லாப நோக்கத்தில் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டன.

எனவே சென்செக்ஸ் அதிக ஏற்றம் காணவில்லை. அதே சமயம் நிப்டி லேசான சரிவை சந்தித்தது. வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 23.28 புள்ளிகள் அதிகரித்தது. அதே சமயம் நிப்டி 11.35 புள்ளிகள் குறைந்தது.

தொடர் ஏற்றம்

வாரத்தின் இறுதி வர்த்தக தினமாக வெள்ளிக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.

சென்செக்ஸ் எட்டு தினங்கள் தொடர் ஏற்றம் கண்டிருந்த நிலையில் பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலை நன்கு அதிகரித்து இருந்தது. எனவே அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பலரும் லாப நோக்கத்துடன் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். அதனால் சந்தைகள் சரிவு கண்டன.

வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 222.14 புள்ளிகள் இறங்கி 38,164.61 புள்ளிகளில் நிலைகொண்டது. நிப்டி 64.15 புள்ளிகள் குறைந்து 11,456.90 புள்ளிகளில் முடிவுற்றது.


Next Story