சிறப்புக் கட்டுரைகள்

‘சிசேரியனை’ குறைப்பதில் வெற்றி பெற்ற சீனா + "||" + In reducing the cesarean China won

‘சிசேரியனை’ குறைப்பதில் வெற்றி பெற்ற சீனா

‘சிசேரியனை’ குறைப்பதில் வெற்றி பெற்ற சீனா
சீன பெண்கள் கர்ப்பகாலத்தில் அதிக விழிப்புடன் செயல்படுகிறார்கள். சுகப்பிரசவமாக முடியக்கூடியதையும் ‘சிசேரியனாக’ மாற்றிவிடுகிறார்கள் என்று பல மருத்துவமனைகள் மீது இங்கு தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
சீன பெண்கள் கர்ப்பகாலத்தில் அதிக விழிப்புடன் செயல்படுகிறார்கள்.
சுகப்பிரசவமாக முடியக்கூடியதையும் ‘சிசேரியனாக’ மாற்றிவிடுகிறார்கள் என்று பல மருத்துவமனைகள் மீது இங்கு தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் ‘சிசேரியன்’ எனப்படும் அறுவைசிகிச்சை முறையிலான பிரசவங்களைக் குறைப்பதில் சீனா பெருமளவு வெற்றி கண்டிருக்கிறது. கண்டிப்பான நடவடிக்கைகளால்தான் இதை அந்நாடு சாதித்திருக்கிறது.

உலகம் முழுவதும் சிசேரியன் முறை யிலான பிரசவம் அபாயகரமான விகிதத்தில் அதிகரித்து வருவதாக மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் பல காலமாக எச்சரித்து வருகின்றனர். அப்படி சிசேரியன் பிரசவம் அதிகம் இருந்து, அதனை குறைக்க முயன்று, வெற்றிகரமாக மாற்றத்தைக் கொண்டு வந்த ஒரே நாடாக சீனா திகழ்கிறது.

இந்த முயற்சியில் சீனா எப்படி வெற்றி பெற்றது என்பது, மற்ற நாடுகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும். ஆனால் அது பின்பற்றக் கடினமானதும் கூட.

பத்தாண்டுக்கும் குறைவான ஆண்டு களுக்கு முன்பு வரை சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக சீனா இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அங்கு மாற்றங்கள் மிக விரைவாக நடைபெற்றன.

ஸ்காண்டிநேவிய நாடுகள் எனப்படும் வடக்கு ஐரோப்பிய நாடுகளின் சிசேரியன் விகிதத்தை விட சீனாவின் விகிதம் தற்போதும் இரண்டு மடங்காக உள்ளதுடன், மேலும் அதிகரித்தும் வருகிறது. ஆனால், அதிகரிப்பு விகிதம் குறைந்து வருகிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சுசன் ஹெல்லேர்ஸ்டீன், பெய்ஜிங் பல்கலைக் கழக ஆய்வாளர்களுடன் இணைந்து, சீனாவில் 100 மில்லியன் குழந்தை பிறப்புகள் குறித்து நடத்திய ஆய்வில், சிசேரியன் பிரசவ வளர்ச்சி விகிதத்தைக் குறைப்பதில் பிரேசில் போன்ற நாடுகள் கொண்டுவர முடியாத மாற்றத்தை சீனா கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சீன நகரங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில், மகப்பேறு பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான கலாசாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படக் கவனம் செலுத்தியதே, இந்த வெற்றியின் முக்கிய முதலீடாக இருந்துள்ளது.

ஆனால், தண்டனை அச்சுறுத்தல் இருப்பதால், பெண்கள், சுகப் பிரசவத்தை தவிர தாங்கள் விரும்பினால்கூட சிசேரியன் முறையைத் தேர்வு செய்ய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர் எய்லீன் வாங் என்பவர், 2016-ல் மேற்கொண்ட ஓர் ஆய்வில், செவிலியர் ஒருவரிடம், சிசேரியன் பிரசவத்துக்கு கெஞ்சும் ஒரு சீனத் தாயின் உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், செவிலியர் அந்தத் தாயிடம், ‘‘உங்களுக்கு, சுகப்பிரசவத்துக்கு முதல் நிலையான அடிவயிற்றுப் பிடிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அதோடு, உங்கள் கருப்பை வாய் 4 செ.மீ. வரை விரிந்திருக்கிறது. இந்நிலையில், உங்களுக்கு சிசேரியன் முறை பின்பற்றப்படமட்டாது. அத்துடன், சிசேரியன் முறை உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் நல்லதல்ல’’ என்று கூறியுள்ளார்.

ஆனால், 2017-ல், 1.7 கோடி பிறப்புக்களை பதிவு செய்துள்ள ஒரு நாடு, சிசேரியனை தவிர்த்து மாற்றத்தை விளைவித்திருப்பது, வேறெந்த நாட்டிலும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று என பலரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

சிசேரியன் முறையில் குழந்தை பெற்றடுப்பதில் என்ன தவறு? பல தருணங்களில் அது உயிர்காக்கும் முறையாக உள்ளபோதும், ஆபத்தானது. அறுவைசிகிச்சை என்பதால், குணமடைய எடுத்துக்கொள்ளும் நேரமும் அதிகம்.

எனவே, மருத்துவரீதியாக தேவைப்படும் நேரங்களை தவிர, சிசேரியன் முறையை பின்பற்ற வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

ஸ்காண்டிநேவிய நாடுகள் போன்ற சில இடங்களில் சிசேரியன் விகிதம் எப்போதுமே குறைந்த அளவில் உள்ளது. அதற்குக் காரணம், அங்கு நிலவும் கலாசாரம்தான்.

ஆனால், சிசேரியன் பிரசவ விகிதம் உயர்ந்து காணப்படும் பிரேசில் போன்ற நாடுகளில் மாற்றத்தைக் கொண்டு வருவது கடினம் என்பது நிரூபணமாகியுள்ளது. எனினும், அதற்கு தலைகீழாக சீனாவில் ஒரு தலைமுறை காலத்துக்குள்ளேயே மாற்றம் நிகழ்ந்துள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனை விவரிப்பதற்காக, ஆரோக்கிய கலாசார எழுச்சி தொடங்கி, ஒரு குழந்தை திட்டத்தின் தாக்கம் வரையிலான எல்லா குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்களையும் நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர். ஆனால், ஒரு காரணி மட்டும் தெளிவாக தனித்து நிற்கிறது. அது ஒருவரின் மனவலிமையின் சக்தி.

2001-ல் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று, சீனாவில் சிசேரியன் முறை பிரசவங்கள் 46 சதவீதம் எனக் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்துதான், சீனா, சுகாதாரத்துறை நடவடிக்கை மூலம், தேசிய சுகாதார மற்றும் குடும்ப திட்டமிடல் ஆணையத்தின் பத்தாண்டு திட்டத்தில், சிசேரியன் முறை பிரசவங்களின் விகிதத்தை குறைக்க முன்னுரிமை வழங்கியது.

பிரசவிக்க இருக்கும் தாய்மார்களுக்கு, சுகப்பிரசவம் மற்றும் தாய்ப்பாலூட்டும் முறை குறித்த வகுப்புகளும், மருத்துவர்களின் மகப்பேறு திறமைகளை வலுப்படுத்துவதற்காக மருத்துவப் பயிற்சி மையங்களும், தற்பொழுது சீனாவில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சீனாவின் அணுகுமுறையில் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு, சிசேரியன் முறை பிரசவங்களுக்கு மருத்துவமனைகள்தான் பொறுப்பு என்று அவர்களை கண்டிப்புடன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான்.

சீனாவில் பிரசவ மருத்துவமனைகளை, பிராந்திய வாரியாக ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு, சிசேரியன் முறையை குறைக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டாவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது.

சிசேரியன் பிரசவங்களின் விகிதங்களோடு மாநிலங்களின் மானியங்களை இணைப்பதும், மருத்துவமனைகளின் உரிமங்களை திரும்பபெறு வதும், அங்கு பின்பற்றப்படும் மற்ற அபராதங்களாகும். இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் சீனாவில் சிசேரியன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதை இந்தியா போன்ற நாடுகளும் பின்பற்றலாம்.