ஒரு அப்பாவும்.. 3 வாடகைத்தாய் குழந்தைகளும்..!


ஒரு அப்பாவும்.. 3 வாடகைத்தாய் குழந்தைகளும்..!
x
தினத்தந்தி 24 March 2019 9:27 AM GMT (Updated: 24 March 2019 9:27 AM GMT)

இங்கிலாந்தை சேர்ந்த இயான், வாடகைத் தாய் மூலம் 3 குழந்தைகளை பெற்று தந்தையாகி இருக்கிறார். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது இப்போது அதிகரித்து வருகிறது.

ங்கிலாந்தை சேர்ந்த இயான், வாடகைத் தாய் மூலம் 3 குழந்தைகளை பெற்று தந்தையாகி இருக்கிறார். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது இப்போது அதிகரித்து வருகிறது. ஆனால் 2000-ம் ஆண்டுகளில் அந்த அளவுக்கு வரவேற்பினை பெறவில்லை. அந்த காலகட்டத்தில்தான் இயான், தன்னுடைய வாரிசுகளை வாடகைதாய் மூலம் பெற்றுக்கொண்டார்.

இயானுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை. அதனால் வாடகைத்தாய் மூலம் வாரிசுகளை பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கியுள்ளார். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட அனுபவத்தையும், குழந்தைகளை தனி ஆளாக வளர்த்த சுவாரசியத்தையும் அவர் விவரிக்கிறார்.

‘‘எனக்கு திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. அந்த பந்தத்தின் மூலம் கிடைக்கும் மனைவி என்ற உறவை, காலம் முழுக்க முதுகில் சுமக்கும் ஆர்வமும் இல்லை. ஏனெனில் காதலும், குடும்பமும் குறிப்பிட்டகாலம் வரைதான் சுவையாக இருக்கும். ஒருமுறை கசந்துவிட்டால், ஒட்டுமொத்த வாழ்க்கையும் கசப்பானதாக மாறிவிடும் என்பது என் எண்ணம். அதனால் குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். இருப்பினும் என்னுடைய வம்சத்தின் அடுத்த வாரிசு யார்? என்ற கேள்வி என் ஆழ்மனதில் அடிக்கடி தோன்றி மறைந்தது. அதற்கான பதிலாக வாடகைத்தாயை தேர்ந்தெடுத்தேன்’ என்பவர், அன்றைய காலகட்டத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் இருந்துவந்த நெருக்கடிகளையும் நினைவுக்கூர்ந்தார்.

‘‘2000-ம் ஆண்டுகளில் வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறினார்கள். ஆனாலும் நான் தைரியமாக களத்தில் இறங்கினேன். ஏனெனில் வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் எனக்கான வேலை மிக குறைவு. முதலில் கருமுட்டையை தானம் பெறுவதற்காக சில பெண்களை அணுகினேன். 30-க்கும் மேற்பட்டவர்களை தொடர்பு கொண்டேன். யாரும் சம்மதிக்கவில்லை. இறுதியில் மெலிசா என்ற 27 வயது பெண், தனது கருமுட்டைகளை தானமாக தர சம்மதித்தார். அவரது தோழியான டினா பிரைஸை வாடகை தாயாக தேர்ந்தெடுக்க பரிந்துரைத்தார். மெலிசாவின் கருமுட்டைகளுடன், என்னுடைய விந்தணுக்கள் சேர்க்கப்பட்டு, வாடகைத் தாய் டினா பிரைஸின் வயிற்றில் கரு உருவானது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், நான் ஒரே ஒரு வாரிசைதான் எதிர்பார்த்தேன். ஆனால் மூன்று கருக்கள் உருவாகி ஒரே சமயத்தில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர்’’ என்றவர், மூன்று குழந்தைகளையும் தனி ஆளாக வளர்த்த கதையை கூறுகிறார்.

‘‘ஒரு குழந்தையை சமாளிப்பதற்கு, ஒரு குடும்பமே போராட வேண்டியிருக்கும் என்பார்கள். நானோ மூன்று குழந்தைகளையும் தனி ஒருவனாக சமாளிக்க வேண்டி இருந்தது. மூன்று குழந்தைகள் என்பதால் வாடகைத் தாயின் கரிசனம், ஒப்பந்ததை தாண்டி ஒருசில மாதங்கள் தொடர்ந்தது. அதற்குபின் முழுநேர தந்தையாக பொறுப்பேற்றுக்கொண்டேன். குழந்தைகள் பிறந்தது முதல் ஒன்றரை ஆண்டுகள் குழந்தைகளின் படுக்கை அறையில்தான் என்னுடைய பொழுதுகள் கழிந்தன. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக, உணவு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடன் இருந்து கவனித்து மருந்து கொடுப்பது என எல்லா நாட்களிலும் பரபரப்பாக செயல்பட்டேன்.

மூன்று குழந்தைகளை வளர்க்க நான் சிரமப்படுவதை பார்த்து ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு வைத்துக்கொள்ளுமாறு அக்கம் பக்கத்தினர் சொன்னார்கள். பெண் துணை இன்றி வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருந்ததால் பணிப்பெண்ணின் உதவியை நாடவில்லை. ஆனால் அதற்கான பலனை வெகுவிரைவிலேயே அனுபவித்தேன். ஒரு குழந்தை தூங்கினால், மற்றொரு குழந்தை அழ ஆரம்பித்துவிடும். அதை சமாதானப்படுத்துவதற்குள் அடுத்த குழந்தையும் அழுகையை தொடங்கிவிடும். மூவரையும் சமாதானப்படுத்தி உறங்க வைப்பதற்குள் படாதபாடு படவேண்டியிருந்தது.

ஒரு கட்டத்தில் என்னுடைய வைராக்கிய கொள்கைகளை மறுபரிசீலனை செய்யலாமா? என்ற எண்ணமும் மேலிட்டது. அதேசமயம் குழந்தைகளால் எவ்வளவு கஷ்டப்பட்டேனோ, அதைவிட அதிகமாகவே அவர்களால் மகிழ்ச்சியை அனுபவித்தேன். இன்று என்னுடைய மகன்களுக்கு 16 வயதாகிறது. அவர்களுக்கு லார்ஸ், பியர்ஸ், இயான் என்று பெயரிட்டிருக்கிறேன். ஒரு குழந்தைக்கு என் பெயரையே சூட்டிவிட்டேன். மூன்றுபேரும் ஓரளவு உலக விஷயங்களை புரிந்து கொள்ளும் வயதை எட்டிவிட்டதால் அவர்களிடம் வாடகைத் தாயின் மூலம் பெற்றெடுத்த கதையை தெரிவித்தேன். அவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ‘அம்மா எங்கே?’ என்று அவர்கள் மனதில் எழுந்த வெகுநாள் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்’’ என்கிறார், இயான்.

‘‘அம்மா பற்றிய விஷயங்களை, அப்பாவிடம் கேட்டு நச்சரிப்பது அவருக்கு எரிச்சலாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் பொறுமை காத்து, எங்களால் புரிந்து கொள்ளும் வயதில் பக்குவமாக பதிலளித்தார். அப்பாவை நல்லபடியாக பார்த்து கொள்வது எங்களது கடமையாக இருந்தாலும், வாழ்க்கையில் ஒருமுறையாவது அம்மாவை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. காலம்தான் எங்களது ஆசையை நிறைவேற்ற வேண்டும்’’ என்கிறார், ஜூனியர் இயான்.

மூன்று குழந்தைகளின் தந்தையான இயான் குழந்தைகளுக்கான பராமரிப்பு மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Next Story