பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகள்...!


பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகள்...!
x
தினத்தந்தி 28 March 2019 2:13 AM GMT (Updated: 28 March 2019 2:13 AM GMT)

பழந்தமிழர்கள் அறிவு நுணுக்கமும், பட்டறிவும் கொண்டு சிறப்புற்று வாழ்ந்திருந்தார்கள்.

தமிழர்களின் நுண்ணறிவு வியக்கத்தக்க ஒன்றாக அமைகிறது. இன்று வளர்ந்துள்ள பல அறிவியல் துறைகளின் வித்துக்கள் அன்றே இருந்தமைக்கான பல்வேறு சான்றுகளை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

வானியல், மண்ணியல், இயற்பியல், உயிரியல், பயிரியல், மருத்துவவியல், கட்டிடவியல் என பல துறைகளின் செய்திகளை எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கம். தமிழர்கள் வானியல் அறிவு பெற்றிருந்தார்கள் இந்த உலகம் ஒன்றையொன்று சார்ந்து இயங்குகிறது. நிலம் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளது, நிலம் ஏந்திய விசும்பும், வான் என்ற விசும்பைச் சுற்றிய காற்று, காற்றை பரப்பும் தீயும், தீக்கு எதிரான நீரும் என ஐம்பூதங்களாய் கலந்தது என்ற வரையறையின் வழி புறநானூற்று பாடல்களிலேயே பஞ்சபூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம் எனக் கூறுகிறது. இதனுள் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைச் சிந்தனைக் கூறுகள் இருப்பதைக் காணலாம். ஆண்டினை கார்காலம், கூதிர்காலம், இளவேனில், முதுவேனில், முன்பனி, பின்பனி என ஆறு வகையாக பிரித்தனர். நாளினை யாமம், வைகறை, விடியல், காலை, ஏற்பாடு, மாலை என ஆறு வகையாக பிரித்தனர். இவை பழந்தமிழரின் காலம் பற்றிய கூர்மையான அறிவு பற்றிய வெளிப்பாடாகும். மேலும் வானில் உலவும் கோள்கள் பற்றியும் குறித்துள்ளனர். கதிரவன் பற்றியும், சூரியன் பற்றியும், செம்மீன் என்ற செவ்வாய் கோள் பற்றியும் செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன.

அமாவாசை, பவுர்ணமி என இன்று குறிக்கப்படுவதினை தமிழர்கள் அன்று வெள்உவா என்றால் பவுர்ணமி என்றும் கார்உவா என்றால் அமாவாசை என்றும் குறித்தனர். இவையெல்லாம் பழந்தமிழரின் வானியல் நுட்பத்தினை எடுத்துரைக்கிறது. மேலும் நிலம் பற்றியும், நீர் பற்றியும், அதன் இன்றியமையாமை பற்றியும் பழந்தமிழ் நூல்கள் செப்புகின்றன. நிலம், நீர் இணைவே உணவு, உணவே உயிர்களின் அடிப்படை என்ற உயரிய தத்துவம் குடபுலவியனார் என்ற புலவர் புறநானூற்றில் கூறுகிறார்.

மேலும் செம்மண்ணிலே வீழ்ந்த தண்ணீர் எவ்வாறு சிவப்பான நிறத்தை பெறுகிறதோ, அதைப்போல காதலரும் நானும் இணைந்தோம் என்ற புகழ் பெற்ற சங்கப்பாடலில் தண்ணீர் நிறமற்றது அதை எந்த மண்ணைச் சார்கிறதோ அந்த நிறம் பெறும் என்ற அறிவியல் உண்மையை காதல் பாடல் வழி எடுத்துரைத்துள்ளனர். உலகத்தின் இயல்புகளை தமிழர்கள் அறிந்திருந்தனர். இன்றைய இயற்பியலில் குவாண்டம் என்ற கொள்கை நவீன இயற்பியல் கொள்கை அறிஞர் நலங்கிள்ளி என்ற அறிஞர் மெக்கானிக்க்ல் யுனிவர்ஸ் என்ற நூலினை இயந்திர அண்டம் என மொழிப்பெயர்த்துள்ளார். குவாண்டம் என்ற சொல்லுக்கு ‘அக்குவம்’ என தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். அக்கு அக்காக ஒளி உமிழப்படுவதை அக்குவம் எனக் கூறியுள்ளார். குவாண்டம் என்ற சொல்லை விடவும் கூட அறிவியல் துல்லியம் வாய்ந்தது இச்சொல் என தமிழரின் அறிவினை வியக்கிறார்.

வானியல் அண்டவியல் அறிவு இருந்தமைக்கான பல சான்றுகள் கிடைக்கின்றன. அண்டப்பெருவெளியில் உருண்டைப் பெருக்கம் அளப்பெரும் தன்மை வளப்பெறும் காட்சி என திருநாவுக்கரசர் செப்புகிறார். அண்டம் என்ற பெருவெளியில் உருண்டையான கோள்களின் காட்சி அளவிட முடியாத வளமான காட்சியாக விளங்குகிறது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. பழந்தமிழரின் அறிவியலில் உயிரியல் பற்றி மிகச் சிறப்பாக அறிந்திருந்தனர். தொல்காப்பியர் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நான்கறிவுயிர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் எனப் பாகுபாடு செய்திருப்பது இன்றைய தாவரவியல் சிந்தனைகளுக்கு முன்னோடியாக அமைந்துள்ளன.

ஓரறிவுயிர் தொடுதல் உணர்வுடையவை தொட்டாச்சிணுங்கி, புல் போன்றன. இரண்டு அறிவு தொடுதல் உணர்வுடன் நாவினால் சுவைத்தல் உடையவை. அவை கிளிஞ்சல்கள், சங்கு, நத்தை, சிப்பி, போன்றன. மூன்றாவது அறிவுடையவை தொடுதல் நாவினால் உண்டாகும் சுவையுடன், மூக்கினால் மோந்து பார்த்தல் இவை செல், ஈசல், பட்டுப்பூச்சி, போன்றன. இவை ஓசையிட்டாலும் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லையே ஏனென்றால் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் அதற்கு செவியில்லை என விளக்கம் தருவது அவரின் நுண்ணறிவினைக் காட்டுகிறது. நாலறிவுயிர் தொடுதல், நாவின்சுவை, மூக்கால் உணர்தல் கண்ணால் காணுதல் வண்டு, குளவி போன்ற இனங்களைக் குறிக்கின்றார். ஐந்தறிவுயிர் மேலே கூறிய நான்கு உணர்வுடன் செவிஉணர்வு சேருவது இவை விலங்குகள் பறவைகள், மீன், முதலை, ஆமை போன்றவை. மேற்சொன்ன இந்த ஐந்தும் சேர்ந்து மனம் என ஒன்றுபட்டு சிந்திக்கின்ற அறிவு பெற்றவர்களையே தொல்காப்பியர், ஆறறிவுடையவர் மாந்தர் என வகைப்படுத்துகிறார். தொல்காப்பியரின் அறிவியல் பார்வை அறிவியல் அடிப்படையில் உயிரினங்களை ஆறாகப் பிரித்திருப்பது வியக்கத்தக்கதாகும்.

மேலும் தாவரங்களை வகைப்படுத்தும் போது வயிரம் பாய்ந்த வன்மையான தாவரங்கள், வயிரம் பாயாத வன்மையான தாவரங்கள் என வகைப்படுத்துகின்றார். மூங்கில், வாழை, தென்னை, பப்பாளி, ஈச்சம் போன்ற மரங்கள் வேர்கள் அதிகம் பரவாமல் உள்வெளி வெற்றிடமாக இருக்கும் என்பதை விளக்குகின்றார். வேம்பு, மா, பலா, அரசு, ஆல் போன்ற மரங்கள் உள்ளே வயிரம் பாய்ந்த மரங்கள் எனப்பிரிக்கிறார். இதையே அகக்கால் புறக்கால் என விளக்குவது பழந்தமிழரின் அறிவியல் அறிவினைச் செப்புகிறது. மேலும் ஊர்வன, பறப்பன, ஆண்பால் பெயர் பெறும் விலங்குகள், பெண்பால் பெயர் பெறும் விலங்குகள் என விளக்குவது அறிவியல் திறன் சார்ந்ததாக அமைகின்றது.

பழந்தமிழரின் மருத்துவவியல் வியக்கத்தக்க ஒன்றாக இன்றும் அறியப்படுகிறது. இன்றைய அறுவைசிகிச்சைக்கான குறிப்பு அன்றே குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறிப் புதைக்கும் வழக்கம் தமிழரிடையே இருந்துள்ளது. மேலும் தமிழர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என வாழ்ந்தார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் சக்கரம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். சக்கரங்களைக் கொண்டு மட்பாண்டங்களை வளைந்த குயவனின் சிறப்பை கலங்களை உருவாக்குகின்ற குயவனே என புறநானூற்றில் ஒரு மன்னனை அடக்கம் செய்யும் தாழியினை அளவு தொடர்பான செய்தி கூறப்பட்டுள்ளது. தச்சுத்தொழிலும், மட்பாண்டத்தொழிலும் தமிழரிடையே சிறந்திருந்தது. கட்டிடவியல், சிற்பக்கலை போன்றவற்றில் தமிழரின் அறிவியல் கூறுகளை காணலாம்.

முனைவர் வா.மு.சே. ஆண்டவர், தமிழ்ப்பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

Next Story