உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 31 March 2019 5:00 AM GMT (Updated: 30 March 2019 8:20 AM GMT)

அவர் ஏழைக்குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தவர். அவருக்கு மூன்று தங்கைகள். பெற்றோர் முதுமையாலும், நோயாலும் பாதிக்கப்பட்டவர்கள்.

அதனால் தங்கைகளை படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு இருந்தது. தனது படிப்பை நிறுத்திவிட்டு, சரக்கு வேன் ஓட்டும் வேலைக்கு சென்று தங்கைகளை படிக்கவைத்தார். பின்பு அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமணமும் செய்துவைத்தார்.

‘தங்கைகள் மூவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டோம்!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட நேரத்தில் அவர் 40 வயதை தொட்டிருந்தார். வயதை காரணங்காட்டி அவருக்கு பெண்கொடுக்க பலரும் தயங்கினார்கள். அதனால் விதவை ஒருவருக்கு வாழ்க்கை கொடுக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு உருவானது. அதற்காக அந்த பகுதியில் உள்ள நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்தார்.

விளம்பரத்தை பார்த்துவிட்டு, ஐம்பது வயதைக் கடந்த ஆண் ஒருவர் வீடு தேடிவந்தார். அவர், ‘எனது தங்கை அரசுத்துறை சார்ந்த நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கிறாள். திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாத நிலையில் கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார். நீங்கள் விரும்பினால் அவளை திருமணம் செய்து வைக்கிறேன்.’ என்றார். அவர், தங்கை மீது தான் பெருமளவு பாசம் வைத் திருப்பதாக உருக்கமாக எடுத்துச் சொன்னார். இவரும் தங்கைகளுக்காகவே வாழ்ந்தவர் என்பதால் அவரது பேச்சில் உருகிவிட்டார்.

அடுத்து வெளி இடம் ஒன்றில் தனது தங்கையை தனியாக சந்தித்துபேசும்படி கூறினார். இவரும் சந்தி்த்தார். அந்த பெண் ஒப்பனை ஏதும் இன்றி இயல்பாக இருந்தாள். மரணமடைந்த தன் கணவர் மீது உயிரையே வைத்திருந்ததாக கதைகதையாக சொன்னாள். தொடர்ந்து சில நாட்கள் பேசிப்பேசியே அவர் மனதில் இடம்பிடித்து விட்டாள்.

அடுத்த சில வாரங்களிலே அவள் சொல்வதற்கெல்லாம் இவர் ஆமாம் போடத் தொடங்கி விட்டார். குறிப்பிட்ட கோவில் ஒன்றில்வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், பெயரளவுக்கு நாலைந்துபேர் கலந்து கொண்டால் போதும் என்றும், திருமணம் முடிந்த கையோடு அருகில் உள்ள இன்னொரு ஊருக்கு தனிக்குடித்தனம் போய்விடவேண்டும் என்றும் சொன்னாள். அதற்கும் அவர் சம்மதித்தார்.

திருமணத்தில் ஏழெட்டு பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். திட்டமிட்டபடி தனிக்குடித்தனமும் சென்றார்கள். திருமணத்தன்றே, ‘தான் இதுவரை வேலைபார்த்து கிடைத்த சம்பளத்தில் நிறைய தங்க நகைகள் வாங்கி வைத்திருப்பதாக’ கூறி ஒரு பொட்டலத்தை புதுமாப்பிள்ளையான அவரது கையில் கொடுத்தாள். அவருக்கு அவள் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. இவரும் மனைவியை மகிழ்விப்பதற்காக ஐந்து பவுனில் புதிய நகை வாங்கிக்கொடுத்தார். அவரது தங்கைகளும், அண்ணனுக்கு திருமண பரிசாக சில தங்க நகைகளை வாங்கிக்கொடுத்தார்கள். அதுவும் அவள் கைக்கு போனது. திருமணத்திற்கு பின்பு ஜோடியாக போட்டோ எடுக்க வற்புறுத்தியபோது, சென்டிமென்ட்டாக ஏதேதோ காரணங்களைகூறி தவிர்த்து விட்டாள்.

தினமும் காலையில் வேலைக்கு கிளம்பிச்செல்கிறவள், இரவு எட்டு மணிவாக்கில்தான் திரும்பி வருவாள். அவர் சரக்கு வேனை ஓட்டுவதால் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டது. தனது கணவரை எல்லா விதத்திலும் அவள் திருப்திபடுத்தி மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாள்.

இந்த நிலையில் அவரது பால்ய நண்பர்கள் சிலர், அவர் விதவைக்கு வாழ்வு கொடுத்திருப்பது தெரிந்ததும், வாழ்த்து தெரிவிப்பதற்காக வீடு தேடி சென்றார்கள். அன்று புதுமாப்பிள்ளையான அவர் மட்டுமே வீட்டில் இருந்தார். அவள் வேலைக்கு சென்றிருந்தாள். நண்பரை பார்த்து திருமண வாழ்த்து சொன்னவர்கள், ‘மனைவியின் போட்டோவை காட்டு’ என்றார்கள். ‘அவள் ஜோடியாக போட்டோ எதுவும் எடுத்துக்கொள்ள ஆசைப்படவில்லை’ என்ற அவர், அவளது அண்ணனாக அறிமுகமானவர் முதன் முதலில் வழங்கிய அவளது போட்டோவை வைத்த இடத்தில் தேடினார். அந்த போட்டோவையும் காணவில்லை.

நண்பர்களுக்கு அது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ‘உன் மனைவி அலுவலகம் முடிந்து இரவில் வந்த பின்பு நாங்கள் பார்த்துவிட்டு செல்கிறோம்’ என்று வீட்டிலே உட்கார்ந்து விட்டார்கள்.

அவள் அன்று வழக்கத்தைவிட தாமதமாக வீடு திரும்பினாள். வீட்டில் நாலைந்து பேர் இருப்பதை பார்த்ததும், பதற்றமானாள். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவர்களை உபசரித்தாள். அவளை குறிப்பிட்ட ஊர் ஒன்றில் பார்த்த ஞாபகம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அவளிடம் பேசியபோது, அந்த ஊருக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி இன்னொரு ஊரின் பெயரை சொன்னாள். வேலை செய்யும் அலுவலக முகவரியை கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினாள்.

இரவில் நண்பர்கள் அங்கிருந்து திரும்பினார்கள். அவள் யார் என்பதையும், அவளது அண்ணனாக அறிமுகமானவன் அவளது கணவன் என்பதையும் ஆதாரப்பூர்வமாக கண்டறிந்துவிட்டு, அவர்கள் இரண்டொரு நாட்களில் நண்பனைத் தேடி செல்லவும், அதற்குள் யூகித்துவிட்ட அவள், அங்கிருந்து எப்படியோ தப்பிவிட்டாள். அவள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி சொன்ன நகை பொட்டலத்தை திறந்து பார்த்தார்கள். அனைத்துமே தங்க முலாம் பூசப்பட்டவை.

விதவை என்ற பெயரில் அவ்வப்போது திருமணம் செய்து கொண்டு ஆண்களை ஏமாற்றும் அவள் இப்போது போலீஸ் பிடியில் சிக்கியிருக்கிறாள்!

- உஷாரு வரும்.

Next Story