தினம் ஒரு தகவல் : தாவரங்களின் பெயர்கள்

நம்முடைய தாவரங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் மொழி சார்ந்தவை மட்டுமல்ல, சூழலியல் அறிவும் கொண்டவை.
ஒரு தாவரத்தின் பண்பு, தோற்றம், நிலத்தில் வளரும் பண்பு எனப் பல அம்சங்களைக் கொண்டு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அறிவியல்பூர்வமாக உள்ளதும் குறிப்பிடத்தக்க அம்சம். இதற்கு எடுத்துக்காட்டு புளி, கொடுக்காய்ப்புளி.
இதில் கொடுக்காய்ப் புளி பார்ப்பதற்கு, புளியைப் போல் இருக்கும், கொடுக்கு போல வளைந்தும் இருக்கும். இது காரணப் பெயர் மட்டுமல்ல, அந்தத் தாவரம் புளி குடும்பத்தைச் சேர்ந்தது. யானை புளியமரம் என்றொரு மரம் இருக்கிறது. பெரிதாக இருப்பதால் யானை புளி என்று வைத்துவிட்டார்கள். தமிழ் மரபில், தாவரங்கள் சார்ந்து இப்படிக் குறிப்பிடத்தக்க விஷயங்கள் நிறைய உள்ளன. விஷயம் தெரிந்தவர்கள்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்.
இப்படி உள்நாட்டு தாவரங்கள் குறித்த அக்கறை அதிகரித்து வருவது ஆக்கப்பூர்வமான விஷயம், அதேநேரம் சீமை கருவேலம் அல்லது வேலிகாத்தான் என்றழைக்கப்படும் அயல் தாவரத்தை ஒழிப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதை வெறுமனே அயல் தாவரம் என்று புரிந்துகொள்ளாமல், அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். எத்தனையோ தரிசு நிலங்கள், காலி மனைகளில் இந்த தாவரம் வளர்ந்துள்ளது.
இயல் தாவரமோ, அயல் தாவரமோ முதலில் மண்ணரிப்பைத் தடுக்கிறது, விறகைத் தருகிறது. இன்றைக்கும் சாதாரண மக்கள் தாவர எரிபொருளையே சார்ந்திருக்கிறார்கள். இஸ்திரி செய்பவர்கள், டீக்கடைக்காரர்கள் சீமை கருவேலத்தின் மர கரியை நம்பித் தொழில் நடத்துகிறார்கள். தென் மாவட்டங்களில் சீமை கருவேல மரத்தில் இருந்து கரி தயாரிக்கும் தொழில் முக்கியமானது.
மரம் வெட்டுவதையும் நடுவதையும் முறைப்படுத்த தாவர ஆணையம் போன்ற அமைப்பு தமிழகத்தில் தேவை. ஓர் இடத்தில் உள்ள மரத்தை வெட்டலாமா, கூடாதா என்பது பற்றி முடிவெடுப்பது மட்டும் அல்லாமல், ஓரிடத்தில் எந்த மரத்தை நடுவது உகந்ததாக இருக்கும் என்று ஆலோசனை வழங்க அதற்கான நிபுணத்துவம் கொண்டவர்களை உள்ளடக்கி ஓர் குழுவை உருவாக்க வேண்டும்.
Related Tags :
Next Story






