லாபம் ஈட்டும் துணை நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிட திட்டம்


லாபம் ஈட்டும் துணை நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிட திட்டம்
x
தினத்தந்தி 4 April 2019 3:42 AM GMT (Updated: 4 April 2019 3:42 AM GMT)

மத்திய அரசு, பொதுத்துறையில் லாபம் ஈட்டும் துணை நிறுவனங்களின் பங்கு

புதுடெல்லி

பங்குச்சந்தை நிலவரங்கள் சரியில்லாதபோது தொடர் பங்கு வெளியீட்டை மேற்கொள்வது சிரமமாக இருப்பதால், 25 சதவீத பொதுப் பங்கு மூலதன விதிமுறையை நிறைவு செய்ய வசதியாக ஏலமுறை பங்கு விற்பனையை மேற்கொள்ள செபி அனுமதி அளித்துள்ளது...

பொதுத்துறையில் லாபம் ஈட்டும் துணை நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விற்பனை இலக்கு

நிதிப்பற்றாக்குறையை எதிர்கொள்ள மத்திய அரசு கையாளும் முக்கிய வழிமுறைகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையும் ஒன்றாகும். மத்திய அரசு, 2017-18-ஆம் நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை இலக்கை ரூ.72,500 கோடியாக முதலில் நிர்ணயித்து இருந்தது. எனினும், அந்த ஆண்டில் இந்த வழிமுறையில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் திரட்டப்பட்டது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) பொதுத்துறை பங்குகள் விற்பனை வாயிலாக ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் பங்குகள் விற்பனை அந்த இலக்கைத் தாண்டி ஏறக்குறைய ரூ.85 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது.

நடப்பு 2019-20-ஆம் ஆண்டில் அரசுப் பங்குகள் விற்பனை இலக்கு ரூ.90 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டிற்கான முதல் இலக்கை விட (ரூ.80,000 கோடி) இது 12.5 சதவீதம் அதிகமாகும்.

புதிய பங்கு வெளியீடுகள்

எம்.எஸ்.டி.சி., மிஷ்ரா டட்டூ நிகாம், ரைட்ஸ், இர்கான் மற்றும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள், பாரத் 22 ஈ.டி.எப். திட்டம் (இரண்டு மற்றும் மூன்றாவது வெளியீடுகள்), கோல் இந்தியாவின் ஏலமுறை பங்கு விற்பனை, சி.பி.எஸ்.இ. ஈ.டி.எப். திட்டத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது வெளியீடுகள், பொதுத்துறை நிறுவனமான எஸ்.யூ.யூ.டி.ஐ. வாயிலாக ஆக்சிஸ் வங்கியில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளில் குறிப்பிட்ட அளவு விற்பனை, ஆர்.இ.சி. பங்குகள் விற்பனை, பங்குகளை திரும்ப பெறுதல் ஆகியவற்றின் மூலம் இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் வங்கிப் பங்குகள் விற்பனை மூலம் ரூ.5,379 கோடி திரட்டப்பட்டது. ஏலமுறை பங்கு விற்பனையில் கோல் இந்தியா நிறுவனம் ரூ.5,218 கோடி திரட்டிக் கொடுத்தது. ஈ.டி.எப். திட்டங்கள் வாயிலாக ரூ.45,729 கோடியும், 52.63 சதவீத ஆர்.இ.சி. பங்குகளை பவர் பைனான்ஸ் நிறுவனத்திற்கு விற்றதன் மூலம் ரூ.14,500 கோடியும் திரட்டப்பட்டது. 5 நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் மூலம் ரூ.1,929 கோடி திரட்டப்பட்டு இருக்கிறது. பங்குகளை திரும்பப் பெறும் வழிமுறையில் பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.10,600 கோடி வழங்கி உள்ளன.

பங்குச்சந்தை நிலவரங்கள் சரியில்லாதபோது தொடர் பங்கு வெளியீட்டை மேற்கொள்வது சிரமமாக இருப்பதால், 25 சதவீத பொதுப் பங்கு மூலதன விதிமுறையை நிறைவு செய்ய வசதியாக ஏலமுறை பங்கு விற்பனையை மேற்கொள்ள செபி அனுமதி அளித்துள்ளது. இந்த வழிமுறையில்தான் கோல் இந்தியா நிறுவனம் ரூ.5,218 கோடி திரட்டிக் கொடுத்தது.

துணை நிறுவனங்கள்

இந்நிலையில், பொதுத்துறையில், லாபகரமாக செயல்பட்டு வரும் துணை நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிட மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பட்டியல் ஒன்று தயாராகி வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குறைந்தபட்சம் ரூ.500 கோடி நிகர சொத்து மதிப்பு உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தற்போது பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.

2017-18-ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 257 மத்திய அரசு நிறுவனங்கள் செயல்பாட்டில் இருந்தன. அவற்றுள் 184 நிறுவனங்கள் லாபகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தன.

3 முக்கிய துறைகள்

நிலக்கரி, மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய 3 முக்கிய துறைகளில்தான் பொதுத்துறை நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் லாபம் ஈட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story