உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 7 April 2019 5:00 AM GMT (Updated: 6 April 2019 11:26 AM GMT)

வசதி படைத்தவர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, ஓரளவு செல்வாக்கு பெற்ற பெண்களே அதற்கான ‘நெட் ஒர்க்’குகளை உருவாக்கி இளம் பெண்களை தங்களோடு இணைத்து, அந்த தொழிலில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட செல்வாக்கு பெற்ற பெண் ஒருத்தியிடம் இருந்து, டீன்ஏஜ் பெண் ஒருவர் மீண்டு வந்திருக்கிறார். அவரது வாழ்க்கையில் நடந்தவை அதிர்ச்சிகரமானவை. அதை அந்த பெண்ணே சொல் கிறார்:

“என் அம்மா ஆசிரியையாக வேலைபார்த்துவந்தார். அவர் பணியாற்றிய பள்ளிக்கு அருகிலே எங்களுக்கு ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் நானும், என் அம்மாவும் வசித்தோம். அப்பா, தூரத்தில் உள்ள இன்னொரு நகரத்தில் தங்கி வேலைபார்த்துக்கொண்டிருந்தார். அவர் மாதத்திற்கு ஒருமுறை வந்து சில நாட்கள் தங்கிவிட்டு செல்வார். நாங்கள் வசித்த வீடு விலைமதிப்புடையது. அம்மாவின் வேலைக்கு முன்னுரிமை கொடுத்து, அம்மா வேலைபார்த்த பள்ளி அருகிலே அப்பா அந்த வீட்டை வாங்கிக் கொடுத்திருந்தார்.

எனது தந்தை வித்தியாசமானவர். அம்மாவிடமோ, என்னிடமோ அதிகம் பேசமாட்டார். உறவினர்களிடமும் அவர் அன்பு பாராட்டமாட்டார். அதனால் எந்த உறவினர்களும் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. நாங்களும் உறவினர்களை தேடிச் சென்றதில்லை. அப்பா இருக்கும்போதெல்லாம் எங்கள் வீட்டில் மயான அமைதிதான் நிலவும். அம்மாதான் எனக்கு எல்லாமுமாக இருந்தார்.

எனது பத்து வயதில் அம்மா இறந்துவிட்டார். பின்பு என்னை எனது மாமா என்று அறியப்பட்ட ஒருவர் வீட்டில் கொண்டுபோய் என் அப்பா விட்டுவிட்டு வழக்கம்போல் அவர் தங்கி வேலைபார்க்கும் நகரத்துக்கு போய்விட்டார். நான் அங்கேயே தங்கியிருந்து படித்தேன். அப்பா எப்போதாவது என்னிடம் பேசுவார். ஆறு மாதத்திற்கு ஒருமுறை வந்து என்னை பார்ப்பார். என்னை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக என் மாமாவுக்கு நிறைய பணம் அனுப்பிகொடுத்துக்கொண்டிருந்தார்.

எனக்கு 15 வயதானபோது, அப்பா என்னை தேடிவந்து ‘வா.. நமது வீ்ட்டிற்கு போகலாம்’ என்று கூறி அழைத்துச்சென்றார். அம்மாவுடன் நான் வசித்த வீடு இருக்கும் ஊருக்கு சென்றோம். அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இருந்தார். அவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்து, ‘இது உன் சித்தி. உன்னை கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நான் இவளை மறு மணம் செய்திருக்கிறேன்’ என்று சொன்னார். இரண்டு நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் அவரது பணி இடத்துக்கு அப்பா சென்றுவிட்டார்.

சித்தி என் மீது அன்புகாட்டத்தான் செய்தார். ஆனால் எந்தநேரமும் செல்போனிலும், லேப்டாப்பிலும் தொடர்பில் இருந்துகொண்டே இருப்பார். ‘சிலரை அங்குபோ.. இங்கு போ..’ என்று கூறி, போனிலே விலாசத்தை கூறி அனுப்பிக்கொண்டிருப்பார். ‘ஆன் லைன் பேங்க்கிங்’கில் தனது வங்கி கணக்கையும் சரிபார்த்துக்கொண்டே இருப்பார்.

எங்கள் வீட்டிற்கு சித்தி வந்து ஒரு மாதம்கூட ஆகியிருக்காத நிலையில், ஒரு நாள் ‘நான் இங்கு தங்கியிருப்பதால், சொந்த ஊரில் நான் செய்துகொண்டிருக்கும் தொழில் நசிந்துவிட்டது. நான் நம்பி வேலைக்கு வைத்திருப்பவர்களே நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள். அதனால் நான் அவ்வப்போது அங்கு சென்று தொழிலை கவனிக்கவேண்டியதிருக்கிறது. இனி தினமும் மாலையில் கிளம்பிச்சென்றால் மறுநாள் தான் வருவேன். நீ கவனமாக வீட்டில் இருந்துகொள். நான் இங்கே இல்லாதபோது, உன் அப்பா என்னை பற்றி கேட்டால் நீ விலாவாரியாக பதில் சொல்லவேண்டாம். என்னிடம் போனில் பேச சொல். நானே பதில் சொல்லிவிடுகிறேன்’ என்ற அவர், என் பாதுகாப்பிற்கு, நடுத்தர வயது பெண் ஒருத்தியை நியமித்தார். அந்த பெண், என் சித்தியின் ஊரை சேர்ந்தவள். அவள் எங்கள் வீட்டிற்கே எஜமானிபோல் நடந்துகொண்டாள்.

என் சித்தி பல நாட்கள் வீட்டிற்கே வருவதில்லை. இந்த நிலையில் என் தந்தை மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஆபரேஷன் நடந்ததாகவும் கேள்விப்பட்டேன். பின்பு அவர் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலே வந்து தங்கும் நிலை ஏற்பட்டது. அப்போது என் சித்தி எங்கும் செல்லாமல் அப்பாவை அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். ஆனால் ஒரு சில வாரங் களிலே திடீரென்று என் தந்தை இறந்துபோனார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீள்வதற்குள், எங்கள் வீட்டை என் சித்தி பெருந்தொகைக்கு விற்றுவிட்டு, என்னை அவரோடு அவரது ஊருக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவர் சொந்த பங்களா ஒன்றில் வசித்துவந்தார்.

அங்கு சென்ற பின்புதான் என் சித்தி தவறான தொழில் செய்து வரும் செல்வாக்கான பெண் என்பது தெரிந்தது. என் தந்தைக்கும்- அவருக்கும் வெகுகாலம் தொடர்பு இருந்திருக்கிறது. என் தந்தை கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளாகி, இதய நோய், சிறுநீரக நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதும் என் சித்திக்கு தெரிந்திருக்கிறது. திருமண நாடகமாடி நாங்கள் வசித்த வீட்டை திட்டமிட்டு முதலிலே எழுதிவாங்கிவிட்டு, அவர் சாகட்டும் என்று நினைத்து, அவருக்கு சரியான சிகிச்சைகள் கொடுக்காமல் இருந்துள்ளார். என் தந்தைபோல் வேறு சில ஆண்களும் என் சித்தியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

அடுத்து சித்தியின் பார்வை என் மீது விழுந்தது. நான் அழகாக இருப்பதால் எனக்கு சினிமா சான்ஸ் வாங்கித்தருவதாகவும், டெலிவிஷனில் சான்ஸ் வாங்கித்தருவதாகவும் ஆசைகாட்டினார். யார் யாரோ என்னை வந்து பார்த்தார்கள். நான் பயந்துபோய், என் பள்ளித்தோழியின் தந்தை உதவியோடு அங்கிருந்து தப்பிவந்திருக்கிறேன்” என்கிறார், அந்த பெண்.

உலகம் பலவிதம்! ஒவ்வொரு மனிதர்களும் ஒரு விதம்..!

- உஷாரு வரும்.

Next Story