குழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க என்ன காரணம்?


குழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க என்ன காரணம்?
x
தினத்தந்தி 7 April 2019 6:30 AM GMT (Updated: 6 April 2019 1:25 PM GMT)

அம்மா, அப்பா, தாத்தா, அத்தை போன்ற வார்த்தைகள் குழந்தைகளின் முதல் சொற்களாக வெளி வருகின்றன. ஆனால் அந்த பருவத்திலே அதையும் தாண்டி அறிவுத் திறனில் அசத்தும் அபூர்வ நினைவாற்றல் கொண்ட குழந்தைகளும் இருக்கின்றன.

கோவையை சேர்ந்த இரண்டேகால் வயது குழந்தை பலநாட்டு கொடிகளை அடையாளங்காட்டுகிறது. தலைவர்களின் பெயர்களையும், விலங்கினங்களின் பெயர்களையும் சொன்னால் அவைகளையும் சுட்டிக்காட்டுகிறது. அந்த குழந்தையின் பெயர் ஆரிக் மித்திரன். பெற்றோர்: டேவிட்- நந்தினி.

ஆரிக் மித்திரன் நினைவாற்றலில் சிறந்து விளங்குவதற்கான காரணத்தை, அதன் தாயார் நந்தினி (வயது 27) சொல்கிறார்:

“குழந்தைக்கு ஒரு வயதானபோது எங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை அறிமுகப்படுத்தி, அதன் பெயர்களை சொல்லிக்கொடுத்தோம். பின்பு அதன் பெயர்களை சொன்னதும் சுட்டிக்காட்டினான். காலப்போக்கில் அவை களின் பெயர்களை மழலை மொழியில் சொல்லத் தொடங்கினான். அவனது நினைவுத்திறனும், அறிவுத்திறனும் சிறப்பாக இருப்பதாக நாங்கள் கருதியதால் குழந்தையின் ஆற்றலை மேம்படுத்ததிட்டமிட்டோம்.

முதலில் இந்தியா, ஜப்பான், கொரியா, சீனா, அமெரிக்கா உள்பட 50 நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளம்காட்டி சொல்லிக் கொடுத்தோம். சொல்லிக் கொடுத்த மறுநாளே 20 நாட்டு கொடிகளை அடையாளம் காட்டினான். அடுத்தடுத்து வெவ்வேறு நாட்டு கொடிகளை புதிது புதிதாக அறிமுகம் செய்து கொண்டே இருந்தோம். அவனும் இரண்டொரு நாட்களில் மீண்டும் மீண்டும் சொல்வான். கொடிகளை மொத்தமாக வைத்து குறிப்பிட்ட நாட்டின் பெயரை சொன்னதும், அந்த நாட்டின் கொடியை எடுத்து காட்டி விடுவான். இதுபோன்று 20-க்கும் மேற்பட்ட விலங்கினங்கள், தேசிய தலைவர்கள் படங்களையும் அடையாளம் காட்டினான்.

2 வயதானபோது அம்மா, அப்பா, பஸ், ஆட்டோ, டி.வி, பைக் போன்றவைகளின் பெயர்களை எல்லாம் சொன்னான். இவை தவிர ‘உள்ளே வாங்க’, ‘எங்க இருக்கீங்க’ என்றெல்லாம் பேசினான்.

அவனது விளையாட்டுத்தனத்தை பாதிக்காத அளவுக்கு, அவன் விரும்பும்போது மட்டும் புதிய விஷயங்களை சொல்லிக்கொடுத்து வருகிறோம். 100 நாடுகளின் தேசிய கொடிகளை சொல்லிக்கொடுக்க முயற்சி எடுத்துள்ளோம். கால் நடைகளை பொறுத்தவரை ‘பசு என்றால் பால் தரும்’ என்றும் சொல்ல பழக்குகிறோம். நாய் என்றால் குரைக்கும் என்பதையும், பறவை பறக்கும், கோழி முட்டையிடும் என்பது உள்பட அவற்றின் குணநலன்களையும் சொல்லிக்கொடுத்து வருகிறோம். விரைவில் கின்னஸ் சாதனைக்கு ஏற்பாடு செய்ய உள்ளோம்.

இவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பான். அதிகம் டி.வி. பார்க்கமாட்டான். கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் உள்ளது. அதனால் அதற்குரிய உபகரணங்களை வாங்கிக்கொடுத்து அவனுடன் நாங்களும் விளையாடுகிறோம். சைவம், அசைவம் இருவித உணவு களையும் விரும்பி சாப்பிடுவான். நாங்கள் அவனுக்கு இயற்கை உணவுகளை மட்டுமே கொடுத்து பழக்கப்படுத்துகிறோம். கேழ்வரகு கூழ், காய்கறி, பழங்களை அதிகம் கொடுக்கிறோம். எந்த பொருளையும் வாங்கித்தரும்படி கேட்டு அடம்பிடிக்க மாட்டான்” என்று கூறும் நந்தினி, குழந்தைகளின் பொதுவான ‘அறிதல் திறன்’ பற்றியும் விளக்கு கிறார்.

“குழந்தைகளின் அறிதல் திறன் வளர்ச்சியை பொறுத்த வரையில், குழந்தை வளரும் குடும்பச்சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் மனப்பான்மையின் தாக்கமும் குழந்தையிடம் இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலைக்கும், குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும்கூட தொடர்பு இருக்கிறது.

உயர்ந்த பொருளாதார பின்னணியில் இருக்கும் பெற்றோர்கள் சிறு குழந்தைகளுக்கு பல வகையான வண்ணங்கள், வடிவங்கள், செயல்பாடுகள் கொண்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுக்கிறார்கள். அவைகள் எல்லாம் குழந்தைகளுக்கு அறிமுகமாகி, மூளையில் பதிகின்றன. அதனால் குழந்தைகளின் சொல்லாட்சித்திறன் மேம்படுகிறது. புதிய பொருட்களோடு விளையாடும்போது, குழந்தைகளின் சிந்தனைத்திறனும் வளர்கிறது. அதுவே ஏழைக்குடும்பத்தில் பிறந்த குழந்தையாக இருந்தால், அத்தகைய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த குழந்தைகளின் அறிதல் திறனும் சராசரியாகவே இருக்கும் நிலை உருவாகும். அதனால் பொருளாதார சூழ்நிலை சரியில்லாத பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளிஇடங்களுக்கு அழைத்துச்சென்று, வித்தியாசமான பொருட்களை காணும் வாய்ப்பினை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.

குழந்தைகளின் பெற்றோர் உயர் கல்வி பெற்றவராக இருந்தால், அவர்களது மொழியாற்றல், உரையாடல் திறன் போன்றவை சிறப்பாக இருக்கும். அவைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து, அறிதல் திறனை மேம்படுத்த பயன்படுத்தும்.

எல்லா குழந்தையும் நல்ல குழந்தைதான். பெற்றோரின் வளர்ப்பு முறையில்தான் அதன் அறிதல் திறன் வளரும். சில வீடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளை பூங்காக்கள், விளையாட்டு மைதானம், கடைத்தெரு, திருவிழாக்கள், திருமணங்கள், உறவினர் வீடுகள் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். இவ்வாறு வளரும் குழந்தைகள் பல்வேறுபட்ட காட்சிகளை காணும்போது அவர்களுக்குப் பரந்த அனுபவம் கிடைக்கும். அதனாலும் அவர்களது அறிவுத்திறன் வளரும். குழந்தைப் பருவம் விளையாட்டுத்தனமானது. அதன் இயல்பில் விளையாட அனுமதிக்க வேண்டும். அறிவுத்திறனை வெளிப்படுத்துவதாக கூறி குழந்தைகளை இயல்புக்கு மாறாக வதைக்கும் செயலை பெற்றோர் ஒரு போதும் செய்துவிடக்கூடாது” என்ற வேண்டுகோளையும் அவர் முன்வைக்கிறார்.

Next Story