விளையாட்டு- வேளாண் துறையில் சாதிக்க உதவும் ‘டர்ப் மேனேஜ்மென்ட்’


விளையாட்டு- வேளாண் துறையில் சாதிக்க உதவும் ‘டர்ப் மேனேஜ்மென்ட்’
x
தினத்தந்தி 8 April 2019 7:53 AM GMT (Updated: 8 April 2019 7:53 AM GMT)

இன்று கிரிக்கெட் மற்றும் விளையாட்டுத் துறையில் ஏராளமான இளைஞர்கள் நாட்டம் கொண்டுள்ளனர்.

முன்னணி வகிக்கும் சில வீரர்கள் தவிர, பெரும்பாலான வீரர்கள் அந்த துறையில் சாதிப்பதற்கான வாய்ப்புகளுக்காக ஏங்கிய வண்ணம் காத்திருப்பது உண்டு. பலர் விரக்தியுடன், வேறுதுறை பணியில் சேர்ந்துவிட்டு, விளையாட்டுக்கு முழுக்கு போட்டுவிடுவதும் உண்டு.

போட்டி அதிகமாகும்போது கூடுதல் திறமை பெற்றவர்களாக உயர்ந்து நிற்க வேண்டும். அதற்கு, அந்த துறை சார்ந்த பல்வேறு துணைப் படிப்புகளையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங் களையே நாமும் தேர்வு செய்வது போட்டியை அதிகமாக்குவதுடன் நமக்கான வாய்ப்புகள் நழுவவும் காரணமாக அமைந்துவிடுகிறது. விளையாட்டுத் துறையை தேர்வு செய்தவர்கள், போட்டிகளில் பங்கேற்பது தவிர, அந்த துறை சார்ந்த பிற விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அதே துறையில் தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள பெரிதும் உதவும்.

உதாரணமாக கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் ஒருவர், பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் இரண்டில்தான் பயிற்சி பெறவும் சாதிக்கவும் முடியும் என்பதல்ல. விளையாட்டு பயிற்சியாளர், உடற்கல்வியாளர், மைதான பராமரிப்பாளர், புள்ளிவிவர நிபுணர், விளையாட்டு இதழாளர், வர்ணனையாளர், விளையாட்டு எழுத்தாளர், விமர்சகர் என பலமுகங்களில் சாதிக்க முடியும்.

குறிப்பாக விளையாட்டுத் துறையை தேர்வு செய்தவர்களுக்கு படித்து முடித்தவுடன் வேலையில் அமர்வதற்கும், படித்த படிப்பைக் கொண்டு சொந்தமாக தொழில் தொடங்குவதற்கும் பல படிப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் டர்ப் மேனேஜ்மென்ட். புல் தரையை மேலாண்மை செய்வது பற்றிய படிப்பான இது, ஆடுகளத்தின் தன்மையை நன்கு உணர கற்றுத் தருகிறது. ஆடுகளத்தின் தன்மை விளையாட்டின் போக்கை தீர்மானிக்கக்கூடியது. ஆடு களத்தின் தன்மை அறிந்து வீரர்களை பயன்படுத்தும் அணி வெற்றியை எளிதில் வசமாக்கிக்கொள்ளும். விளையாட்டு வீரர், டர்ப்மேனேஜ்மென்ட் பற்றி அறிந்திருப்பது விளையாட்டில் சாதிக்க உதவுவதுடன், அந்த துறையில் வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும்.

டர்ப் மேனேஜ்மென்ட் கல்வியும், அது உருவாக்கித் தரும் வாய்ப்புகளையும் இங்கே அறிவோம்...

கிரிக்கெட், ஆக்கி, கால்பந்து என பல்வேறு விளையாட்டு மைதானங்களும் பச்சை பசேல் என இருப்பதைக் காணலாம். அந்த பச்சை பசேல் புல்வெளியை உருவாக்க கற்று தரும் கல்வி தான் டர்ப் மேனேஜ்மென்ட். இந்த பச்சை பசேல் புல் வெளிகள் விளையாட்டு மைதானம் மட்டுமல்லாமல் அலுவலக வளாகங்கள், பூங்காக்கள் என பல இடங்களிலும் தற்போது அழகிற்காக வளர்க்கப் படுகிறது. இதனால் இந்த துறையில் வேலைவாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன.

நம் நாட்டில் வேளாண்மை துறை சார்ந்த பல படிப்புகள் உள்ளன. ஆனால் அதன் கீழ் புல்தரை மேலாண்மை அறிவியல் படிப்பு கொண்டுவரப்படவில்லை. அதுபோல விளையாட்டுத் துறையின் கீழும் இதுபற்றிய படிப்புகள் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் டர்ப் கிராஸ் சயின்ஸ் மற்றும் டர்ப் கிராஸ் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் பட்டப்படிப்புகளும், டிப்ளமோ படிப்பு களும் வழங்கப்படுகின்றன. ஏராளமான பல் கலைக்கழகங்களில் வகுப்பறை கல்வியாக இருக்கும் இந்தப் படிப்புகள், காலத்தின் தேவையாக இப்போது இணையக் கல்வியாகவும் கற்றுத்தரப் படுகிறது.

இந்த படிப்பில் புல் விதைப்பு, மேல்புறம் விரித்தல், நீர்ப்பாசனம், பூச்சி மற்றும் பூச்சி கட்டுப்பாடு, கருத்தரித்தல், அறுவடை, புல் நிறுவுதல் / சீரமைப்பு, புல்தொட்டி மற்றும் புல்கோபுரம் பராமரிப்பு என பல பாடங்கள் போதிக்கப்படுகிறது. இதனை கற்றறிவதன் மூலம் நமக்கு பல வேலை வாய்ப்புகள் உள்ளன. அல்லது சுயமாகவும் புல்வெளி அமைப்பாளராக பணியாற்றலாம்.

புல்தரை மேலாண்மை படித்தவர்கள் தோட்டக்கலை மேலாளர் பணியில் சேர முடியும். இதில் அவர்களுக்கு தோட்டக்கலை திட்ட மேலாளர், அமைப்பாளர், பசுமை இல்லம் மற்றும் நாற்றுப் பணி, மரங்கள், மூலிகைச் செடிகள், பூக்கள் மற்றும் தாவரங்களை வளர்க்கும் - சந்தைப்படுத்தும் தொழிலாளர்களை நிர்வகிப்பது, இயக்குவது போன்ற பணிகள் இருக்கும்.

இயற்கை நிலக் காட்சி மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்ப நிபுணர் பணியில், இயற்கை நிலக் காட்சிகளை அளவிடுவது மற்றும் மதிப்பிடுவது, வரைபடங்கள் தயாரிப்பது, நிலக் காட்சி கட்டுமான மாதிரிகளை வடிவமைப்பது, தோட்டங்கள், பூங்காக்கள், மைதானங்களைக் கட்டமைப்பது, பராமரிப்பது போன்ற வேலைகள் இருக்கும்.

விளையாட்டுத் துறை, கட்டுமானத் துறை, ெபாதுநிறுவனங்கள், பண்ணை பராமரிப்பு, ரியல் எஸ்டேட் துறை, பத்திரப்பதிவுத் துறை என பல்வேறு துறைகளிலும் இவர்களுக்கான பணி வாய்ப்புகள் கிடைக்கும். பணிக்கும், பதவிக்கும் அனுபவத்திற்க்கும் நல்ல ஊதியம் பெறலாம். ஆண்டிற்கு அதிகபட்சமாக சுமார் 50 லட்சம் வரை ஊதியம் பெறலாம். சுயதொழிலாக செய்பவர்கள், தங்கள் கலைவண்ணத்திற்கேற்ப கைநிறைய சம்பாதிக்கலாம்.

அமெரிக்காவின் "தொழிலாளர் புள்ளியியல் அமைப்பு' தகவல்படி கடந்த 2014-ல் மட்டும் 12.82 லட்சம் பேர் தரை பராமரிப்பு ஊழியர்களாக பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், இந்தத் துறையில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 2014-2024-ல் 8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

டர்ப் மேனேஜ்மென்ட் வெளிநாடுகளில் முழுநேர கல்வி, பகுதி நேர கல்வி, இணைய வழிக் கல்வி என பல வகைகளில் வழங்கப்படுகின்றன. நம் நாட்டில் முழுமையான டர்ப் மேனேஜ்மென்ட் கல்வி இதுவரை இல்லை. ஆனால் டெல்லியில் விளையாட்டுப் பயிற்சி நிலையங்களில் மைதான அமைப்போடு சேர்த்து புல்வெளி அமைப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது. எனவே இந்த படிப்பை தேர்வு செய்ய இருப்பவர்கள், வெளிநாடு சென்றால் சிறந்த பயிற்சியுடன் நாடுதிரும்பி நல்ல வாய்ப்புகளை பெறலாம். அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் இணையதளம் வழியாகவும் இந்த கல்வியை பயில முடியும்.

புல் அறிவியலில் புற்கள் மற்றும் மண் வகைகள், தாவர நோயியல், பூச்சியியல், களை அறிவியல், சுற்றுச்சூழல் வளங்கள், பண்ணை மேலாண்மை, தோட்டக்கலை, சர்வதேச வேளாண்மை குறித்த பாடங்கள் இருக்கும். இவை சார்ந்த சமூக அறிவியல், வணிகம் சார்ந்த தகவல்களும் பாடத்தில் இடம் பெறும்.

புல் மேலாண்மைப் பாடத்தை கல்லூரியில் சேர்ந்து படிப்பவர்களாக இருந்தாலும், இணைய வழியில் படிப்பவர்களாக இருந்தாலும் களப் பயிற்சி, கள அனுபவம் அவசியமாக்கப்பட்டுள்ளது. புல் அறிவியல் பட்டங்கள் பெறுவதன் மூலம், நாம் பெறும் பட்டங்கள், பட்டயங்களுக்கு ஏற்ப, கோல்ப் மைதான கண்காணிப்பாளர், தடகள மைதான மேலாளர், புல்வெளி நிபுணர், இயற்கை நிலக்காட்சி பராமரிப்பு நிபுணர், தரை புல் தயாரிப்பு, தளவாடப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை பிரதிநிதி, தாவர மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆர்வலர், கல்லறை பராமரிப்பு மேலாளர், ஆராய்ச்சி உதவியாளர், சர்வதேச தரை புல் நிபுணர், தரைப் புல் விஞ்ஞானி என உலக அளவில் சுமார் 200 வகையான பணிகள் உள்ளன.

விளையாட்டுத்துறை மற்றும் வேளாண்துறையில் உள்ளவர்கள் தரை புல் மேலாண்மை கோர்ஸ் பயில்வதன் மூலம் பணியில் தகுதி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களைப் பெறலாம்.

புதியதாக கற்று வாழ்வில் சாதிக்க எண்ணுபவர்களும், ஏற்கனவே படித்து மனநிறைவற்ற வேலையில் இருப்பவர்களும் டர்ப் மேனேஜ்மென்ட் கற்று உலக அளவில் உள்ள வேலைவாய்ப்புகளை பெற்று உயரலாம்.


Next Story