தினம் ஒரு தகவல் : பவுன்சர்கள் வாழும் கிராமம்


தினம் ஒரு தகவல் : பவுன்சர்கள் வாழும் கிராமம்
x
தினத்தந்தி 9 April 2019 5:05 AM GMT (Updated: 9 April 2019 5:06 AM GMT)

இந்தியாவில் ராணுவ கிராமம் என்று நிறைய இருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் நாட்டுப்பற்று மிக்கவர்களாக இருப்பர்.

ஒரு குடும்பத்தில் ஒருவரோ, இருவரோ ராணுவத்தில் இருப்பார்கள். இதனை அந்த கிராமத்துக்கான பெருமையாகவே பார்ப்பார்கள். அதேபோல் இந்தியாவில் ஒரு கிராமம் பவுன்சர்களுக்கு பெயர் பெற்றதாக இருக்கிறது. தெற்கு டெல்லியின் இரட்டை கிராமமான அசோலாபதேபூர், பேரி ஆகியவை பவுன்சர்கள் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

பவுன்சர் என்றால் பார்கள், மால்கள், நைட் கிளப்புகள் போன்ற இடங்களில் கட்டுமஸ்தாக நின்றிருக்கும் பாதுகாவலர்களை குறிக்கிறது. 1990-களில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்தபின் மேற்கண்ட பொழுதுபோக்கு இடங்கள் நிறைய தோன்றின. அதற்கு வழக்கமாக காவலில் இருக்கும் சாதா காவலர்கள் ஒத்து வரமாட்டார்கள் என்று பவுன்சர்களை அறிமுகப்படுத்தின நிறுவனங்கள்.

இன்று பவுன்சர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. திருமணங்கள், சினிமா படப்பிடிப்புகள், பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் கூட அவர்களை நியமிக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு ரூ.1,500 சம்பளம் பெறும் பவுன்சர்களின் தகுதி கட்டுமஸ்தான உடல் மற்றும் குற்றப் பின்னணி இல்லாமல் இருப்பதுதான். ஒரு பவுன்சர் தினசரி உணவுக்கு மட்டும் ரூ.300 செலவு செய்கிறார். வேகவைத்த முழு கோழி, 10 முட்டைகள், ஒரு டஜன் வாழைப்பழம், 10 லிட்டர் பால் உட்கொள்கின்றனர்.

இவர்களுக்காக கிராமத்தில் 300 சதுர அடியில் ஓர் உடற்பயிற்சி கூடம் இருக்கிறது. அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்குகிறது. பவுன்சர்களுக்கு என்று நெறிமுறைகள் இருக்கின்றன. இவர்கள் யாருடனும் சண்டைக்குப் போவதில்லை. முறையற்ற முறையில் நடந்து கொண்டாலும் பதிலடி தருவதில்லை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறார்கள். உயிருக்கு ஆபத்து என்ற நிலை வந்தால் மட்டுமே சண்டை போடுகிறார்கள். உடல் பலம் மற்றும் ஆரோக்கியத்தை மையமாக கொண்ட இந்த வேலையில் வயது சற்று கூடியவுடன் மூத்த பவுன்சர்கள் ஏஜெண்டாக மாறிவிடுகிறார்கள்.

இந்தக் கிராமத்து இளைஞர்கள் இந்த வேலையை பெருமையாக கருதுகிறார்கள். பவுன்சர் வேலையில் இருப்பவர்கள் புகைப்பிடிப்பதில்லை, குடிப்பதில்லை, ஆபாச படங்களை பார்ப்பதில்லை. அதனால் டெல்லியிலே ஆரோக்கியமான கிராமமாக இந்த கிராமம் கருதப்படுகிறது. வர்த்தகம், தொழில் நடத்த தேவையான பாதுகாவலர்கள் என்று இவர்களை சொல்லலாம். ‘உங்களைவிட இரு மடங்கு பலசாலியாக இருக்கும் ஒரு நபரிடம் பேசுவதற்கு முன் இருமுறை யோசிப்பீர்கள். அதுதான் எங்கள் பலம், என்கிறார்கள் பவுன்சர்கள்.

தற்போது புதிதாக படித்து வரும் இளைஞர்கள் இந்த வேலையை பெருமையாக நினைக்கவில்லை. நின்று கொண்டிருப்பதற்கு காசு தருகின்றனர். இது மகிழ்ச்சியானதாக இல்லை என்றும் கூறுகிறார்கள். அடுத்த சில தலைமுறைகளில் இந்தக் கிராமம் பவுன்சர்கள் கிராமம் என்ற பெயரை இழக்கக்கூடும். அதேவேளையில் இந்த வேலைக்கான தேவை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது என்பதிலும் சந்தேகமில்லை.


Next Story