வாக்குகள் விற்பனைக்கல்ல...!


வாக்குகள் விற்பனைக்கல்ல...!
x
தினத்தந்தி 11 April 2019 10:16 AM IST (Updated: 11 April 2019 10:16 AM IST)
t-max-icont-min-icon

நன்றாக நினைவிருக்கிறது. எனது சிறுவயதில் அப்பாவும், அம்மாவும் வாக்குகளை விற்றது.

பணம் பெற்றுக்கொண்டு “நிச்சயமா உங்களுக்குத்தான் போடுவோம்ணே” என்று அப்பாவும், அம்மாவும் சொன்னதுண்டு. ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களின் சார்பாகக் குறிப்பிட்ட தொகை (உள்ளூர் பிரமுகர்களின் கையாடல் போக) வாக்கு நாளின் ஓரிரு முந்தைய நாளின் மாலை வேளைகளில் அப்பாவின் பாக்கெட்டிலும், அம்மாவின் அஞ்சறைப் பெட்டியிலும் குந்தியிருக்கும். எல்லோரும் வந்தார்கள், எல்லோரும் தந்தார்கள் எல்லோரிடமும் சொன்னதையே சொன்னார்கள் அப்படி எல்லோருக்கும் போடுவதாய் இருந்தால் “ஒரு ஓட்டின் எட்டில் ஒரு பங்கு” கூறு போட்டாலொழிய ஆகாது.

இதில் கொடுமை என்னவென்றால் அம்மாவுக்கு ஓட்டு போடக்கூடத் தெரியாது. வாக்குச்சாவடி, அதிகாரிகள், வாக்குச்சீட்டு(அன்று), வாக்கு எந்திரம் என அனைத்துமே புதுமை, குழப்பம் செல்லாத ஓட்டுகளின் பட்டியலைச் சோதித்துப் பார்த்தால் நிச்சயம் அம்மாவின் ஓட்டும் இருந்திருக்கும். மொத்தத்தில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பது அவர்களின் நோக்கமல்ல பணத்தை வாங்கிக்கிட்டோமா? ஓட்டு போட்டோமா? அவ்வளவுதான். யார் யாரை ஆட்சிப் பண்றது எல்லாம் நமக்கெதுக்கு? ஓட்டு போட்டு விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோமா? என்பது போன்ற மனநிலை எனது பெற்றோருக்கு மட்டுமல்ல ஊரின் ஒட்டுமொத்த அப்பாக்களுக்கும், அம்மாக்களுக்கும்தான். பணம் கொடுக்காமல் போன உள்ளூர் பிரமுகரின் வீட்டுக்குப் போய் சண்டையிட்டு பணம் பெற்ற பெற்றோர்களும் இருந்தனர், இருக்கின்றனர். இவ்வளவு அதிக பணம் கொடுத்தாங்களே? இவ்வளவு குறைவா பணம் கொடுத்தாங்களேனு பரிதாப ஓட்டும், பறிபோன ஓட்டும் ஊரில் எக்கச்சக்கம்.

இதையெல்லாம் பார்த்தபோது எனக்குத் தோன்றியதுண்டு. வாக்கு என்பது வெறுமனே பணத்தைப் பெற்றுக்கொண்டு பதிவிடுவது அல்லது வாக்கிடுவதற்கு குறைந்தபட்ச ஒருநாள் கூலிதான் பணத்தைப் பெற்றுக்கொள்வது. எப்படா 18 வயசு ஆகப்போகுது ஓட்டைக் காசாக்கப் போகிறோம் என எண்ணியதுண்டு. ஆனால் வாக்கை விற்பது ஜனநாயகப் படுகொலை என்பதைப் பின்னாளில் உணர்ந்த பிறகு பெற்றோருக்குப் புரியவைத்து பணத்தைப் பெறாமல் திருப்பி அனுப்பியது இம்மாபெரும் ஜனநாயகத்திற்கு நான் ஆற்றிய முதல் சேவை.

இன்றைய கால கட்டங்களில் இது போன்ற அறியாமை பிடித்த பல பெற்றோர்கள் தன்னிலை மறந்துபோய் இருக்கின்றனர். அவர்களின் அறியாமையைப் போக்குவது நிகழ்கால அரசியல் சூழலில் ஒவ்வொரு பிள்ளையின் கடமை. ஜனநாயகம் பற்றியும் தேர்தல் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு இல்லாத பெற்றோர்களின் அறியாமையை அறிவார்ந்த சிந்தனை பின்புலத்தில் நின்று அதனைப் போக்க வேண்டியதன் அவசியத்தை இச்சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு பிள்ளைகளும் உணர வேண்டும். தனிமனிதன் சீர்பெற்றால் குடும்பமும், குடும்பம் சீர்பெற்றால் சமுதாயமும், சமுதாயம் சீர்பெற்றால் ஜனநாயகமும், ஜனநாயகம் சீர்பெற்றால் நாடும் சீர்பெறும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். இன்றைய நிகழ்காலச் சூழலில் வாக்குகளை விற்பனை செய்து தேர்தலை வணிகமாக்கும் அறியாமை கொண்ட பெற்றோர்களையும், விழிப்புணர்வற்ற ஆண், பெண், நட்பினர் களையும் சீர்திருத்துவது மட்டுமல்ல அதனைக் கருத்தில் எடுத்துக்கொள்வதும் அவசியமானது.

வாக்குக்குப் பணம் கொடுப்பவர்களைக் குறை சொல்வதிலோ திருத்த முயல்வதிலோ பயன் இருப்பதாய் தெரியவில்லை. பணம் பெறுகிற வாக்காளர்களிடம் போதிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்பை இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும். அதுவே தற்காலத் தேவையுமாகும் “நானும் வாக்கை விற்க மாட்டேன். என்னைச் சார்ந்தோரையும், நான் சார்ந்திருப்போரையும் விற்கவிடவும் மாட்டேன்” என்பதைக் குறிக்கோளாக கொண்டு இயங்கும் இளைஞர்களால் மட்டுமே வாக்குகள் ரூபாய் காகிதங்களால் மதிப்பீடு செய்யப்படும் நிலை மாறும்.

சில தினங்களுக்கு முன் ரெயிலில் பயணித்த போது ஒருவர் மற்றொருவரிடம் “எங்க வீட்டுல மொத்தம் ஆறு ஓட்டு கட்சிக்கு குறைந்தபட்சம் ஆயிரம் கெடைச்சாக்கூட, அஞ்சாயிரம் வரைக்கும் சேர்ந்து வீட்டுக்கு வொய்ட் வாஷ் பண்ணனும்” என்றார். இதைக் கேட்டதும் திக்கித்துப் போனேன். இது மாதிரியான மனநிலையில் சாமானியன் வாழும் வரையில் ஜனநாயகம் வாழாது. வழங்குவது ஒரு குற்றச் செயல் என்றால் பெறுவது அதனினும் கொடிது. பெறுகிற கை நீண்டால் மட்டுமே கொடுக்கிற கையும் நீளும். ஒரு நாளின் நமது கடமைக்காக ஐந்தாண்டு ஜனநாயகத்தை அடகு வைக்க முனைய வேண்டாம் ஐந்து ரூபாய் வழங்குபவன் நாளை ஐந்நூறு ரூபாய் பறிக்க முயலலாம்.

பணத்திற்காக வாக்கை விற்க முயலும் நாம், அதே பணத்தில் தன்மானத்தையும் விற்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனிப்பட்ட குடும்பங்களின் தொகுப்பான இச்சமுதாயத்தின் பிரதிநிதியாக, சமுதாயத்தின் பாதுகாவலராகப், பிரச்சினைகளைத் தீர்ப்பவராக, தேவைகளை நிறைவேற்றுபவராக, குறைகளைக் களைபவராக, அக்கறைக்கொள்பவராக, தேவைப்படும் நேரத்தில் முன்நிற்பவராக, கோரிக்கைகளை ஏற்பவராக நாம் கருதும் ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பது நமது கடமை. அத்தகைய மனிதரைப் பணத்தின் வாசத்தில் மயங்கித் தேர்ந்தெடுக்கும் போது அடுத்த ஐந்தாண்டு காலம் ஜனநாயகம் மயங்கியே கிடக்குமேவொழிய தெளியாது.

படித்த இளைஞர்களிடையே தேர்தல் குறித்தும், வாக்களிப்பது குறித்தும், வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்பது குறித்தும் போதிய அளவு விழிப்புணர்வு இருக்கிறது என்றே சொல்லலாம். ஒவ்வொரு இளைஞனும் தனது குடும்பத்தைச் சீர்திருத்த முயன்றாலே போதும். வாக்கை அளிக்க வேண்டுமே ஒழிய விற்கக் கூடாது. வாக்களிப்பதென்பது ஒரு வேலை அல்ல கடமை, பொறுப்பு, தனிமனித ஒழுக்கம், சுய மரியாதை, கவுரவம் இன்னும் பல.

விற்ற ஓட்டு செல்லாத ஓட்டுக்குச் சமம். நாடு சுதந்திரம் பெற்று பல்லாண்டுகள் ஆகியும், வாக்கை விற்பதும், முழு வாக்கு சதவீதமும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஓரிரு நாள் சொகுசுக்காகப் பலநூறு நாட்கள் சுரண்டப்படாமல் இருக்க தயவுசெய்து வாக்குகளை விற்பனைக்கு ஆக்காதீர் மக்களே! வாக்களிப்பதோடு நமது கடமை முடிந்து போவதில்லை. ஐந்தாண்டு கால ஜனநாயகக் கோலமிட தேர்தல் நாள் முதல் புள்ளி. கோலம் கோலாகலமாகவும், கொள்ளைக் களமாகவும் மாற்றப்படுவது நமது கையிலே. ஜனநாயகம் செத்து பணநாயகம் வாழ்வது நமது முட்டாள்தனம். யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதைத் தீர்மானிப்பது பணமல்ல, மனம். சிந்திப்போம் மக்களே!

விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் இளைஞர்களே.

(கட்டுரை ஆசிரியர் பகவான் பள்ளிப்பட்டு பள்ளியில் பணிபுரிந்தபோது இடமாற்றம் செய்யப்பட்டார். அதை விரும்பாத மாணவர்களின் பாசப்போராட்டம் காரணமாக மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)

கோவிந்த் பகவான்,பள்ளி ஆசிரியர், திருவள்ளூர்.

1 More update

Next Story