முதல் நாளில் பங்கு விலை 0.26% ஏற்றம்


முதல் நாளில் பங்கு விலை 0.26% ஏற்றம்
x
தினத்தந்தி 12 April 2019 5:08 AM GMT (Updated: 12 April 2019 5:08 AM GMT)

பங்குச்சந்தை பட்டியலில் ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனம் முதல் நாளில் பங்கு விலை 0.26% ஏற்றம்

புதுடெல்லி

ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் (ஆர்.வி.என்.எல்) புதிய பங்குகள் நேற்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் இப்பங்கு விலை 0.26 சதவீதம் மட்டும் ஏற்றம் கண்டது.

மூன்றாவது நிறுவனம்

ரைட்ஸ், இர்கான் இண்டர்நேஷனல் ஆகிய ரெயில்வே துறை நிறுவனங்களின் பங்குகள் ஏற்கனவே மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்துறையில் மூன்றாவது நிறுவனமாக ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனம் பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. இந்த வெளியீடு கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி முடிந்தது. அதில் சுமார் 25.35 கோடி பங்குகள் (10 சதவீதம்) விற்பனை செய்யப்பட்டன. ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.17-19-ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

25.35 கோடி பங்குகள் சந்தைக்கு வந்த நிலையில் 44.94 கோடி பங்குகளுக்கு தேவைப்பாடு எழுந்தது. இது வெளியீட்டு அளவைக் காட்டிலும் 1.77 மடங்கு அதிகமாகும். எனவே வெளியீடு வெற்றி பெற்றது. அந்த நிலையில், பங்கின் அதிகபட்ச விலையில் (ரூ.19) மத்திய அரசு ரூ.482 கோடி திரட்டிக் கொண்டது.

பட்டியலிடப்பட்டன

ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் புதிய பங்குகள் நேற்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. மும்பை சந்தையில் பட்டியலிடப்பட்டபோது இப்பங்கு ரூ.19-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.19.75-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18.60-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.19.05 -ல் நிலைகொண்டது. இது, வெளியீட்டு விலையைக் காட்டிலும் (ரூ.19) 0.26 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தையில் தொடக்கத்தில் இந்தப் பங்கு ரூ.19-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.19.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18.65-க்கும் சென்றது. இறுதியில் 0.26 சதவீத ஏற்றத்துடன் ரூ.19.05-க்கு விலைபோனது.

உள்கட்டமைப்பு வசதிகள்

ரெயில் விகாஸ் நிறுவனம் அதிவிரைவு ரெயில்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. யெஸ் செக்யூரிட்டீஸ், எலாரா கேப்பிட்டல் (இந்தியா), ஐ.டீ.பீ.ஐ. கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் அண்டு செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் அதன் புதிய பங்கு வெளியீட்டை நிர்வகித்தன.


Next Story