வெப்பநிலை அதிகரிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு...!

பூமிக்கு மேல் உள்ள வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிப்பதை பூமி வெப்பமாதல் என்கிறோம்.
பொதுவாக வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கார்பன்-டை ஆக்சைடு வாயு ஓசோனில் ஏற்படும் துளை, காடுகள் அழிக்கப்படுதல், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளால் வெளிப்படும் சிஎச்-4 மற்றும் என்ஓ-2 போன்ற வாயுக்கள் அதிகரித்தல் புராதன பொருட்களை அதிகமாக எரித்தல் மேலும் சுரங்கங்களின் நடவடிக்கைகள் போன்ற காரணங்களாலும் வெப்பநிலை அதிகரிக்கலாம். ஆனாலும் வெப்ப நிலை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம் வளிமண்டலத்தில் அதிகம் காணப்படும் பசுமை வீடு வாயு எனப்படும் வாயுக்களே ஆகும். சூரியனிடம் இருந்து வரும் வெப்ப கதிர்கள் பூமியை வெப்பப்படுத்துகின்றன. தான் பெறும் வெப்பத்தின் ஏறக்குறைய பாதியளவை உட்கிரகித்துக்கொண்டு மீதியான வெப்பத்தினை பூமி வளிமண்டலத்திற்கு திருப்பி அனுப்பி விடுகின்றது. வளி மண்டலத்தின் வெப்ப நிலை மைனஸ் 15 டிகிரி செல்சியஸ்தான் இருக்கவேண்டும். ஆனால் வளிமண்டலத்தில் பரந்து காணப்படும் பசுமை வீடு வாயுக்கள் பூமி அனுப்புகின்ற வெப்பத்தின் ஒரு பகுதியை கிரகித்துக்கொண்டு மீதி வெப்பத்தினை திரும்பவும் பூமிக்கே திருப்பி அனுப்பி விடுகின்றன. இதையே ‘கிரீன் ஹவுஸ் எபக்ட்’ என்றும் இந்த வாயுக்களை கிரீன் ஹவுஸ் வாயுக்கள் என்றும் அழைக்கிறோம்.
இவ்வாறு சூரியனிடம் இருந்து நேரடியாக வரும் வெப்பம் மற்றும் வளிமண்டல வாயுக்கள் திருப்பி அனுப்பும் வெப்பம் ஆகிய இருவகைகளில் பூமி வெப்பமடைகிறது. இதனாலேயே பூமி அதிகம் வெப்பமடைந்து வளிமண்டலத்தின் வெப்ப நிலை மைனஸ் 15 டிகிரி செல்சியசில் இருந்து பிளஸ் 18 டிகிரி செல்சியஸ் ஆக அதாவது 33 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்து காணப்படுகிறது. இதைத்தான் பூமி வெப்பமாதல் (குளோபல் வாமிங்) என்கிறோம்.
பூமி வெப்பமாதலுக்கு முக்கிய காரணம் அதிக பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வாயு, கரியமில வாயு எனப்படும் கார்பன்-டை ஆக்சைடு ஆகும். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கார்பன்-டை ஆக்சைடின் அளவை குறைப்பதற்கே கடும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றன. சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் வருடங்களுக்கு முன் 2 பி.பி.எம். மில்லியன் என்ற அளவில் இருந்த கார்பனின் அளவு தற்போது 400 பி.பி.எம். ஆக உள்ளதென்றால் இதன் அளவை குறைக்காவிட்டால் பூமி வெப்பமாதலால் மனிதகுலம் வாழ்வதற்கு பூமியே தகுதியற்றதாகிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பூமியின் வெப்பம் அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகுதல், ஓசோன் மண்டலத்தில் துளை ஏற்படுதல், சுற்றுச்சூழல் நச்சு வாயுக்களால் பாதிக்கப்படுதல், பருவம் மாறி மழை பொழிதல், சூறாவளி காற்று, புயல், பஞ்சம், மலேரியா, டெங்கு, புற்றுநோய் மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் பரவுதல், அரிய வகை பறவையினங்கள் மற்றும் விலங்குகள் அழிந்து போதல், அதனால் ஏற்படும் சூழ்நிலை மாற்றம்,மலைகளின் மேல் பரந்து காணப்படும் பனிக்கட்டிகள் உருகுதல், பாலைவனங்கள் விரிவடைதல் மற்றும் காடுகள் சுருங்குதல் போன்ற எண்ணற்ற தீய விளைவுகள் ஏற்படுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் காரணம் மனித செயல்பாடுகளே ஆகும்.
ஆனாலும் ஓரிடத்தில் ஏற்படும் வெப்ப நிலை அதிகரித்தல், கடல் மட்டம் உயருதல், பருவம் மாறி மழை பொழிதல் மற்றும் சூழல் மண்டலத்தில் ஏற்படும் சமநிலை மாற்றம் போன்றவை மிகவும் மோசமான பின் விளைவுகள் ஆகும். பூமி வெப்பமாதலால் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் 1.5 டிகிரி செல்சியசில் இருந்து 6.2 டிகிரி செல்சியஸ் வரை ஏற்படும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு சில ஆராய்ச்சியாளர்களோ 9 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்கின்றனர்.
1960-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2000-வது ஆண்டில் பூமி வெப்பமாதலின் 90 சதவீதம் வெப்பத்தை கடல்நீர் உட்கிரகிப்பதால், கடல் நீரின் வெப்ப நிலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதை காண்கிறோம். ஈரான் நாட்டில் லூட் பாலைவனத்தில் ஏற்பட்ட 159 டிகிரி பாரன் ஹீட் தான் இந்த ஆண்டின் மிக அதிக வெப்பநிலையாகும்.
பனிப்பாறைகள் உருகுதல் மலைகளில் உள்ள பனிக்கட்டுகள் உருகுதல், வெப்பத்தினால் கடல்நீரின் கனஅளவு அதிகரித்தல் போன்ற காரணங்களினால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே போகின்றது. ஒரு வருடத்திற்கு 0.4 மி.மீ அல்லது ஒரு நூற்றாண்டுக்கு 2 அங்குலம் அளவிற்கு நீர்மட்டம் உயருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் 4 முதல் 8 அங்குலம் வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இவ்வாறு மனித குலத்தையே அழிக்க வல்ல பூமி வெப்பமாதலை குறைப்பதற்கான ஒரே வழி, கரியமில வாயு மற்றும் பிற கிரீன் ஹவுஸ் வாயுக்களின் அளவை வளிமண்டலத்தில் வெகுவாய் குறைப்பதே ஆகும். இதற்கு கரியமில வாயுவை வெளியிடக்கூடிய புராதன எரிபொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் மாசுக்களை குறைக்கவேண்டும். மேலும் சூரிய ஒளி ஆற்றல், அணுக்கரு ஆற்றல் அல்லது காற்றின் ஆற்றல், நீர்மின் ஆற்றல் போன்ற கார்பன் பயன்படுத்தப்படாத ஆற்றல் மூலங்களை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தினாலே பூமி வெப்பமாதலை குறைக்க முடியும்.
பூமி வெப்பமாதலை குறைப்பதற்கு மரங்கள் வெகுவாக பயன்படுகின்றன. மக்கள் வசிக்க கூடிய இடங்களில் காணப்படும் மரங்கள் அதிகமான கரியமில வாயுவை உட்கிரகித்து பூமி வெப்பமாதலை குறைப்பதோடு மக்கள் மற்றும் விலங்கினங்களுக்கு குளுமையான நிழலையும் தருகின்றன. எனவே மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பதோடு அதிக அளவில் அவை வளர்க்கப்படவேண்டும். எனவே பூமியையும் அதன் சுற்றுச்சூழலையும் காப்பாற்றுவதற்கு நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும். தெருக்கள் தோறும், சாலைகள் தோறும் அதிக அளவில் மரங்களை நடவேண்டும். இது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமல்லாது சாதாரண மனிதர்களுக்கும் இந்த அக்கறை அவசியமாகும். இயற்கையை அழிப்பதே மனிதகுலத்திற்கு நாம் செய்யும் பெரிய தீங்கு ஆகும். நமது வாழ்க்கை முறை இயற்கையை சார்ந்ததாகவே இருக்குமானால் பெரிய பேரழிவுகளை நாம் தவிர்க்க முடியும். சுற்றுச்சூழலை நாம் பாதுகாப்போமேயானால் பூமி வெப்பமாதலை நாம் வெகுவாக குறைக்க முடியும்.
இயற்பியல் பேராசிரியர் பி.எஸ்.ஜோசப், திருச்சி.
Related Tags :
Next Story






