டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தன


டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தன
x
தினத்தந்தி 13 April 2019 7:31 AM GMT (Updated: 13 April 2019 7:31 AM GMT)

டைனோசர்கள், 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் பெரும் உயிரினமாக உலவிக்கொண்டிருந்த டைனோசர்கள், 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிறிய கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் விழுந்தபோது டைனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிவங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது பூமியைத் தாக்கிய சிறுகோளால் அழிந்த மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிவங்கள் வாயிலாக இது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, சிறியகோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அதன் மூலம் அறியப்பட்டிருக்கிறது.

வடக்கு டகோட்டா மாநிலத்தில் உள்ள டேனிஸ் என்ற பகுதியில், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பிட்ட சிறிய கோள் தாக்கிய பின்னர் சுமார் சில நிமிடங்கள் முதல் ஒரு சில மணிநேரங்களில் அப்பகுதியில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் குறித்த விவரங்களை இந்தப் புதைபடிவங்கள் வழங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 12 கிலோ மீட்டர் அகலம் கொண்ட அந்தச் சிறிய கோள், தற்போதைய மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் விழுந்தபோது சிதறிய பாறைகள் வானத்தை நோக்கி அனைத்துத் திசைகளிலும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு விழுந்தன. அப்போது, மீண்டும் பூமியின் நிலப்பரப்பில் வந்து விழுந்த பாகங்கள் டேனிஸ் பகுதியில் ஏற்படுத்திய சேதங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தற்போது இந்தக் கண்டுபிடிப்புக்கு வழிகோலியுள்ள மீன்களின் செவுள்களில், பூமியில் விழுந்த குப்பைகள் ஒட்டி இருந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும், அப்போது அந்தப் பகுதியில் இருந்த மரப் பிசின்களில் பூமியின் மீது மோதிய சிறு கோளின் துகள்கள் ஒட்டியுள்ளன.

அதுமட்டுமின்றி, அங்கு கிடைத்துள்ள துகள்களின் காலத்தை, மெக்சிகோ கடல் பரப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய தாக்கத்தோடு தொடர்புடைய காலத்துடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு ஏற்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ள 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான், உலகம் முழுவதும் இதைப் போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

டேனிஸ் பகுதியில் கிடைத்துள்ள புதை படிவங்களைப் பார்க்கும்போது, சிறு கோள் மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அந்தப் பகுதியை மிகப் பெரிய அளவில் தண்ணீர் சூழ்ந் திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதில் ஆச்சரியமூட்டும் விஷயம், முதலில் மெக்சிகோ வளைகுடா பகுதியைத் தாக்கிய இந்த சிறிய கோளால் அங்கு ஏற்பட்ட சுனாமியால் உருவான அலைகள், பல மணிநேரம் சுமார் மூவாயிரம் கி.மீ. தூரம் பயணித்து வடக்கு டகோட்டாவை அடைந்திருக்க வேண்டும்.

ஆனால், மெக்சிகோ வளைகுடா பகுதியில் சிறிய கோள் விழுந்தபோது அதை மையமாகக் கொண்டு ஏற்பட்ட 10 அல்லது 11 அளவுள்ள நிலநடுக்கத்தால், டேனிஸ் உள்ளிட்ட சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதற்கு முன்னதாகவே, அருகில் உள்ள பகுதிகளில் இருந்து நீரின் இடமாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

‘நீரின் இடப்பெயர்ச்சியின்போது மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகள், மரங்கள், முற்றிலும் அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அம்மோனைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு அடித்துச் செல்லப்பட்டன’ என்கின்றனர் அவர்கள்.

‘சிறிய கோள் தாக்கிய இடத்தில் இருந்து புதைபடிவங்கள் கிடைத்துள்ள இடத்தை சுனாமி அலைகள் அடைவதற்கு குறைந்தது 17 மணிநேரம் ஆகியிருக்கும். ஆனால், அதிர்வு அலைகள் மற்றும் தொடர் அசைவுகள் சம்பவ இடத்தை அடைவதற்கு பத்து நிமிடங்களே எடுத்துக்கொண்டிருக்கக் கூடும்’ என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆக, டைனோசர்கள் அழிந்த காலகட்டம், அவற்றின் அழிவுக்கான காரணம் குறித்து கடைசியில் ஒரு நம்பகமான தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story