அந்த காலத்து ஆனந்தம் அதுவே இப்போதும் பேரின்பம்


அந்த காலத்து ஆனந்தம் அதுவே இப்போதும் பேரின்பம்
x
தினத்தந்தி 14 April 2019 5:43 AM GMT (Updated: 14 April 2019 5:43 AM GMT)

அது ஒரு காலம்... தாத்தா, பாட்டி, ஆயா, ஆத்தா, அம்மாயி, மாமா, மாமி, அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா என்று மிகப்பெரிய உறவுக்கூட்டுக்குள் வாழ்ந்த காலம். சித்திரை மாதம் வருகிறது என்றாலே மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும்.

இந்த வருஷ பிறப்புக்கு யார் யார் கை நீட்டம் தருவார்கள். அதில் என்னென்ன வாங்கலாம். வருஷ பிறப்பு அன்னிக்கே ஒரு சேமியா குச்சு ஐஸ் வாங்கி குடிச்சிடணும். பக்கத்து வீட்டு பசங்க எல்லாம் போன வருடம் என்னல்லாம் பண்ணாங்களோ, அதெல்லாம் பண்ணணும் என்று மனசு கணக்கு போடும்.

சித்திரை முதல் நாளில் கை நீட்டம் வாங்குவதற்காகவே காலையில் சீக்கிரமாக எழும்பி குளித்து, இருப்பதில் நல்ல துணியாக எடுத்து உடுத்தி, பெரியவர்கள் ஒவ்வொரு வரிடமும் கை நீட்டம் தாங்க என்று கையேந்தும் அழகு...

சித்திரை பிறப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சிறுசுகளுக்கு எல்லாம் கை நீட்டம் கொடுக்க வேண்டும் என்று முந்தானையிலும், வேட்டி முடிப்பிலும் ஒற்றை ரூபாய் சில்லரை காசாக பார்த்து எடுத்து முடிந்து வைத்திருக்கும் தாத்தா, பாட்டிகள் எப்போது குழந்தைகள் நம்மைச்சுற்றி வட்டமிடும் என்று காத்திருக்கும் அழகு...

அந்த காலத்தில் ஒரு ரூபாயோ, காலணாவோ, அவரவர் வசதிக்கு ஏற்ப குழந்தைகளின் கையில் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்கும் நிகழ்வுதான் கை நீட்டம். பொதுவாக கடைகள் நடத்துபவர்கள் அன்றாடம் முதல் வியாபாரத்தை கைநீட்டம் என்று சொல்லித்தான் ஆரம்பிப்பார்கள். முதல் வியாபாரம் நன்றாக, பேரம் பேசாமல், ராசியான கையில் கிடைத்து விட்டால் அன்றைய வியாபாரம் முழுவதும் ராசியாக நல்ல முறையில் நடக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதுபோலத்தான் வருடம் முழுக்க நம்பிக்கையை ஏற்படுத்துவது இந்த கை நீட்டம்.

மனிதன் எத்தனை செல்வங்களை வைத்திருந்தாலும், பணம் என்கிற செல்வம்தான் உடனடி மகிழ்ச்சிப்படுத்துவதாக அமை கிறது. கற்றவர் ஒரு சிலரைத்தவிர கற்றலில் காமுறுவர் குறைவானவர்கள்தான். வீரத்தை வெளிக்காட்டுவதிலும் அவ்வாறே... ஆனால், எத்தனை சம்பாதித்தாலும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று பதுக்கி வைத்துக்கொள்வது பணம் என்னும் செல்வத்தைத்தான். எனவே, மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் காசினை அந்த காலத்திலேயே ஆண்டின் முதல் நாள் கொடுத்து மனமகிழ்ச்சி ஏற்படுத்தி பழக்கப்படுத்தி இருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குழந்தைகளுக்கு ஒற்றை ரூபாய் நோட்டு கொடுத்தால் இப்போது கையடக்க கணினி கொடுப்பதுபோன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஒற்றை ரூபாயில் எத்தனை குச்சு ஐஸ் வாங்க முடியும். எவ்வளவு ஒற்றை பைசா பிஸ்கெட் வாங்க முடியும். எத்தனை பல்லி மிட்டாய் வாங்க முடியும். அடடா...!

ஆனால் அன்றைய தினமே அந்த காசுகள் கடைக்கு செல்லாது. எல்லா பெற்றோரும், பெரியவர்களும் ‘ஏலே.. இந்த காச சேமித்து வைங்க... உண்டியலில் போட்டு பத்திரமாக வச்சிருக்கணும். அவ்வப்போது கிடைக்கும் காசு எல்லாம் சேர்த்து வச்சு, தீபாவளிக்கோ, கிறிஸ்துமஸ்சுக்கோ, பொங்கலுக்கோ புதிய துணி எடுக்கலாம்’ என்று அறிவுறுத்தி தான் கொடுப்பார்கள். எனவே சில்லரை காசுகள் அனைத்தும் அன்று உண்டியலுக்கு சென்று விடும். உண்டியலின் பெயரைச்சொல்லி இன்னும் கொஞ்சம் வசூல் செய்து உள்ளே போட்டு விடுவார்கள். 2 நாட்கள் உண்டியல் கையிலேயேதான் இருக்கும். அதுவும் அப்போதெல்லாம் மண் உண்டியல்தானே தவறி விழுந்தால் பட்டென உடைந்து விடும். 3-வது நாள்தான் உண்டியலை எங்காவது வைக்கத்தோன்றும். அதுவும் அவ்வப்போது வந்து குலுக்கி பார்ப்பதும், போட்ட காசு கிடக்கிறதா? என்று பார்ப்பதும்... கை நீட்டம் காசு படுத்தும் பாடு கொஞ்சமா...!

10 நாட்கள் போனால், கை குறு குறுக்கும். யாரும் இல்லாத நேரத்தில் உண்டியல் கீழே விழ சில்லரை காசுகள் தெறிக்க, அம்மா உண்டியல் உடைந்து விட்டது என்று காசுகளை அள்ளிக்கொண்டு தூரத்தில் இதற்கனவே பீ... பீ... என ஊதிக்கொண்டு இருக்கும் ஐஸ் வண்டியை நோக்கி கால்கள் வேகமெடுத்து ஓடும்.

கை நீட்டம் கொடுக்கும் பழக்கம் வெறும் காசு கொடுக்கும் பழக்கம் அல்ல. எதிர்காலத்தில் குழந்தைகள் நன்றாக படித்து சம்பாதித்து இதுபோல் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. உண்டியலில் பணத்தை போடச்சொல்லி சிறுசேமிப்பின் அவசியத்தை உணர்த்தியது. குழந்தையாக இருந்தபோது உண்டியல்கள் உடைபட்டாலும், சற்று வளர்ந்த பின்னர், கிடைக்கும் காசை எல்லாம் சேமிக்கும் பழக்கத்தை கை நீட்டம் உருவாக்கியது. இப்போது பணத்துக்கு மதிப்பு இல்லை. ஒற்றை ரூபாயை யாருக்காவது கொடுத்தால் கொடுப்பவர்களை மேலும் கீழும் பார்த்து திரும்ப கொடுக்கிற காலம். ஆனால் அப்போது வசதியானவர்கள் கூட, தங்கள் வீட்டு பெரியவர்களிடம் இருந்து சித்திரை கை நீட்டம் வாங்க ஆர்வமாக வந்து கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள். ஆண்டுக்கு ஒரு முறையாவது பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்ற முறையை அது வலியுறுத்தியது.

இப்படி எண்ணற்ற விஷயங்களை உள்ளடக்கிய சித்திரை தமிழ்ப்புத்தாண்டு மகிழ்ச்சியையும், எதிர்கால நம்பிக்கையையும், குடும்பத்தார், அண்டை அயலார் மீது அன்பையும், அரவணைப்பையும் மனநிறைவாய் வழங்கட்டும்.

Next Story