சிறப்புக் கட்டுரைகள்

டோனா கங்குலியின் கலை உலகம் + "||" + Donna Ganguly's art world

டோனா கங்குலியின் கலை உலகம்

டோனா கங்குலியின் கலை உலகம்
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் பிரபலங்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் மனைவி என்ற போதும், தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி இருப்பவர், டோனா கங்குலி.
ந்தியாவின் முன்னணி கிரிக்கெட் பிரபலங்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் மனைவி என்ற போதும், தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி இருப்பவர், டோனா கங்குலி. புகழ்பெற்ற நடன மணியான டோனா, ஒரு டீன்ஏஜ் பெண்ணின் பொறுப்பான தாயாகவும், கங்குலியின் வளர்ச்சி்க்கு உதவுபவராகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார்.

அவரது பேட்டி:

கொல்கத்தாவை பூர்வீகமாகக்கொண்ட கங்குலி, தற்போது ஐ.பி.எல்.லில் டெல்லி அணிக்கு ஆலோசகர் ஆகிவிட்டார். இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு உங்கள் ஆதரவு தொடருமா அல்லது நீங்களும் டெல்லி அணிக்கு மாறிவிட்டீர்களா?

சவுரவ் டெல்லி அணியின் ஆலோசகராகிவிட்டதால், இயல்பாகவே நானும் என் மகள் சனாவும் டெல்லி அணிக்கு ஆதரவாக மாறிவிட்டோம். இது எங்கள் சொந்த விருப்பம். சவுரவ் எங்கிருந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்.

கங்குலியின் மனைவி என்பதைத் தாண்டி, கிரிக்கெட்டுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு குறித்து சொல்லுங்கள்?

ஆரம்பத்தில் எனக்கு கிரிக்கெட் அவ்வளவாகப் பிடிக்காது. ஆனால் சவுரவ்வின் அறிமுகத்துக்குப் பின், கிரிக்கெட்டில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன். அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கியது முதல் நான் இந்த விளையாட்டை பின்பற்றி வந்திருக்கிறேன். சவுரவ் இந்திய அணியின் கேப்டனானபோது, எனது உற்சாகம் மேலும் கூடியது. ஆனால் அவர் ஓய்வு பெற்றபிறகு நான் கிரிக்கெட் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. அவர் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தபோது பார்ப்பேன், அதே போல அவருக்காக புனே அணியின் ஆட்டங்களையும் பார்ப்பேன்.

உங்கள் மகளுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறதா?

அவள் கால்பந்து ரசிகை. ஆனால் அவ்வப்போது கிரிக்கெட்டும் பார்ப்பாள். அவளுக்கு அப்பாவைப் போல கிரிக்கெட்டிலோ, அம்மாவைப் போல நடனத்திலோ ஆர்வமில்லை. தனது தோழிகள், பள்ளி விழாக்கள் என்று அவளது வாழ்க்கை தனியானது. சமீபத்தில் அவள், பள்ளி அணிவகுப்பு அணித் தலைவியானாள். அது அவளுக்கு அதிக சந்தோஷத்தை தந்தது.

நடந்துகொண்டிருக்கும் ஐ.பி.எல்- நடைபெறப்போகும் உலகக் கோப்பை- இந்த இரண்டில் எது உங்களுக்கு அதிக உற்சாகம் தரும்?

இயல்பாகவே உலகக் கோப்பைதான் பெரிய போட்டி. நாங்கள் எல்லோரும் இந்திய அணிக்காக உற்சாகக் குரல் கொடுப்போம். இப்போது ஐ.பி.எல். போட்டிகளை நிறையப் பேர் ரசிக்கிறார்கள். ஆனால், அணிகளுக்காக என்பது இல்லாமல், குறிப்பிட்ட வீரர்களுக்காக என்று ஐ.பி.எல்.லை ரசிப்பவர்கள்தான் அதிகம்.

இந்த ஐ.பி.எல்.லில் உங்களின் ஆதரவு யாருக்கு?

நான் இந்தத் தொடரில் டெல்லி அணியின் ரிஷாப் பான்டுக்கு ஆதரவு அளிக்கிறேன். அவர் அருமையாக பேட்டிங் செய்கிறார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். பந்துவீச்சாளர் ரபாடாவுக்கும் நான் ஆதரவு அளிக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த பந்துவீச்சாளர். இவர்களைத் தவிர, வேறு சில அணிகளைச் சேர்ந்த ஒன்றிரண்டு வீரர்களுக்கும் எனது ஆதரவு உண்டு.

கங்குலியுடன் நீங்களும் சனாவும் ஐ.பி.எல். போட்டிகளை பார்க்க செல்வீர்களா?

சனா படிப்பில் பிசியாக இருக்கிறாள். நானும் அவளும் சவுரவ்வுடன் ஒன்றிரண்டு போட்டிகளுக்குப் போவோம். ஆனால் அதிக போட்டிகளை ஒன்றாகப் பார்க்க வாய்ப்பில்லை. கூடுதலாக சனா இந்த ஆண்டு போட்டித் தேர்வுகளுக்கும் தயாராக வேண்டியுள்ளது. தவிர, நாங்கள் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் இங்கிலாந்து சென்றுவிடுவோம். இந்த ஆண்டு அங்கு உலகக் கோப்பை போட்டியும் நடக்கப் போகிறது. அப்போது சனா விடுப்பு எடுக்கவேண்டியிருக்கும். பிளஸ் டூ படிக்கும் அவளால் அடிக்கடி லீவு போட முடியாது. பொதுவாகவே சனா, சவுரவ் அல்லது அவரது அணி கிரிக்கெட் ஆடும்போது கொஞ்சம் பதற்றமாகத்தான் இருப்பாள்.

ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரரின் மனைவி என்ற முறையில் நீங்கள் நிறைய நெருக்கடிகளைச் சந்தித்திருப்பீர்கள் இல்லையா?

ஆமாம். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது எனக்கும் பதற்றம் இருக்கும். ஆனால் நம்மால் முடிந்தது எல்லாம் பிரார்த்தனை செய்வதும், அன்றைய தினம் இந்திய அணிக்கு அதிர்ஷ்ட நாளாக இருக்கட்டும் என்று வாழ்த்து வதும்தான். அதற்கு மேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் அணி நன்றாக ஆட வேண்டும் என்று தவிப்போம்.

அந்த மாதிரியான நேரங்களில் நம்மை நாமே அமைதிப்படுத்திக்கொள்வது முக்கியம். பிற முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் ஆண்களின் மனைவியர் அனைவருக்கும் இதே நிலைதான். சவுரவ் கேப்டனாக இருந்தபோது, இந்தியா- பாகிஸ்தான் அணிகள் விளையாடுகையில் நான் மிகவும் கவலைப்படுவேன். இப்போதெல்லாம், இதுவும் ஒரு விளையாட்டு, அன்றைய தினம் யார் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்கள் வெல்வார்கள் என உணர்ந்திருக்கிறேன். நல்ல அணிக்கும் மோசமான நாள் அமையக்கூடும். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் நடத்தும் நடன பயிற்சி மையத்தை தொடர்ந்து எவ்வாறு நடத்திச்செல்ல விரும்புகிறீர்கள்?

நாங்கள் எங்கள் மையத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டே இருக்கிறோம். அது மிக சிறப்பாக இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். அப்போதுதான் அவை மக்களை ஈர்க்கும். நாம் எல்லாவற்றிலும் சிறந்ததைக் கொடுக்க வேண்டும். அதில் நான் எப்போதும் கவனமாக இருக்கிறேன்.

சனா எதிர்காலப் படிப்பு குறித்து முடிவெடுத்துவிட்டாரா?

அவளுக்கு இங்கிலாந்தில் பொருளாதாரம் படிக்க ஆசை. அவள் அதற்கென அபிமான கல்லூரிகளின் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கிறாள். ஒவ்வொரு கல்லூரிக்கும் வெவ்வேறு மாதங்களில் விண்ணப்பிக்க வேண்டும். அதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது. அவளே அதையெல்லாம் பார்த்துக்கொள்வாள்.