சிறப்புக் கட்டுரைகள்

உஷாரய்யா உஷாரு.. + "||" + Usharayya Usharoo ..

உஷாரய்யா உஷாரு..

உஷாரய்யா உஷாரு..
கூலி வேலை செய்யும் அந்த பெற்றோருக்கு பிறந்த நான்கும் பெண் குழந்தைகள். பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்று கருதிய அவர்கள், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்கள்.
கூலி வேலை செய்யும் அந்த பெற்றோருக்கு பிறந்த நான்கும் பெண் குழந்தைகள். பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்று கருதிய அவர்கள், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்கள். அளவுக்கு அதிகமான உழைப்பும், போதுமான அளவு சத்துணவுகள் உண்ணாமையும் அவர்களது ஆரோக்கியத்தில் அடிக்கடி குறைபாட்டை ஏற்படுத்தியது. அவ்வப்போது நோய்வாய்ப்பட்டார்கள். அதனால் பெற்றோரின் பெருமளவு பாரத்தை மூத்த பெண் சுமக்கவேண்டிய நிலை உருவானது.

மூத்த பெண் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, தங்கைகளை பொறுப்பாக கவனிக்கத் தொடங்கினாள். அவர்களை ‘பிளஸ்-டூ’ வரையாவது படிக்கவைத்துவிடவேண்டும் என்பது அவளது எண்ணமாக இருந்தது. அவர்கள் மூவரும் படித்த அரசு பள்ளிக்கூடத்தின் அருகில் இருந்த பேன்சி ஸ்டோர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள். தினமும் தங்கைகளோடு இவளும் கிளம்பி கடைக்கு செல்வாள். மாலையில் தங்கைகள் பள்ளியில் இருந்து திரும்பும்போது, அவர்களோடு இவளும் கடையில் இருந்து திரும்பிவந்துவிடுவாள். பின்பு வீட்டு வேலைகளை செய்வாள். காலை முதல் மாலை வரை மட்டுமே கடையில் வேலை என்பதால், சம்பளம் குறைவாகவே கிடைத்துக்கொண்டிருந்தது.

அவர்கள் நால்வருமே அழகாக இருப்பார்கள். அதிலும் மூத்த பெண்ணான அவள் இளம் பருவத்தில் கூடுதல் அழகுடன் காட்சியளித்தாள். அதோடு அவள் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து பொறுப்போடும் நடந்துகொண்டதால், அவளை விரும்பி சில குடும்பத்தினர் பெண் கேட்டு வந்தார்கள். ஆனால் தான் திருமணமாகி சென்றுவிட்டால், மூன்று தங்கைகள் மற்றும் பெற்றோர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என நினைத்து அவள், திருமணமே வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டு, தங்கைகளின் எதிர்காலத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டாள்.

வருடங்கள் கடந்தன. தங்கைகள் மூவரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைகளில் சேர்ந்தார்கள். அவள் கடைக்கு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு, தையல் பயிற்சிக்கு சென்றாள். கற்றுவிட்டு, வீட்டில் இருந்தபடியே பெண்களுக்கு துணிகள் தைத்துக்கொடுக்கத் தொடங்கினாள். கடுமையாக உழைத்து பணத்தை சேமித்தாள். இந்த நிலையில் பெற்றோர் இருவரும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டனர்.

ஓரளவு பணம் சேர்ந்ததும், தங்கை களுக்கு திருமணம் செய்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். நாலைந்து வருடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மூவருக்கும் திருமணம் நடந்தது. வெவ்வேறு ஊர்களில் அவரவர் கணவரோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மூத்த பெண்ணான அவளுக்கு இப்போது வயது 42. முன்புபோல் தையல் தொழிலில் அவளால் ஈடுபடமுடிவதில்லை. தனிமை வாட்டும் நிலையில், குடும்பத்தின் ஒரே சொத்தாக இருக்கும் அந்த சிறிய வீட்டில் வசித்து வருகிறாள். ஊரில் பலரும் அவளை குடும்பத்திற்காக வாழ்ந்த தியாகி என்றும், சகோதரிகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுத்த புண்ணியவதி என்றும் புகழ்ந்து கொண்டிருக்க, அவளோ மனம் நொந்துபோய், உண்மை எதையும் வெளியே சொல்லமுடியாத நிலையில் துயரக் கடலில் ஆழ்ந்திருக்கிறாள்.

‘முன்பெல்லாம் ஒவ்வொரு சகோதரிகளும் அடிக்கடி வந்து என்னை பார்த்து செல்வார்கள். இப்போது போனில் பேசுவதையும் குறைத்துக்கொண்டார்கள். அவர்கள் வீடுகளில் போய் சில நாட்கள் தங்கிவிட்டு வரலாம் என்றால், ‘நீ கல்யாணம் ஆகாதவள். எங்க வீட்டுக்காரங்க ஒரு மாதிரியானவங்க.. அதனால ரொம்ப நாட்கள் இங்கே தங்கிவிடவேண்டாம்’ என்று துரத்துகிறார்கள்.

என் வயதுக்குதக்கபடி ஏதாவது ஒரு வரனை தேடிக்கண்டுபிடித்து கல்யாணம் செய்துவைத்து, ‘மீதி காலத்தையாவது மகிழ்ச்சியா ஓட்டு’ என்று சொல்வார்கள் என்று நான் நினைத்தேன். அதற்கு அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது ஒரு தங்கை, ‘நீ திருமணமாகி உன் கணவரோடு நம்ம குடும்ப வீட்டில் வசித்தால், அந்த வீட்டில் நாங்கள் பங்கு கேட்க முடியாமல் ஆகிவிடுமே!’ என்றாள். அவள் அப்படி சொன்னதும் என் தலையில் இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டது. இவர்களுக்காகவா என் அழகு, இளமை, உழைப்பு அனைத்தையும் தொலைத்துவிட்டு இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டேன் என்று கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறேன்!’ என்கிறாள்.

குடும்பத்திற்காக பெண்கள் செய்யும் தியாகங்களுக்கு பெரும்பாலும் மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது. ஒரு சிலரது வாழ்க்கையில் இப்படியும் நடந்துவிடுகிறது!

- உஷாரு வரும்.

தொடர்புடைய செய்திகள்

1. உஷாரய்யா உஷாரு.. மனைவியோடு வாழும் ஆண்களை தவறிழைக்க வைக்கும் ஒருசில பெண்கள்
வார இறுதி நாள். நள்ளிரவு நேரம். பிரபலமான ஓட்டல் ஒன்றில் நெருக்கமாக பல ஜோடிகள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு மூலையில் ஜோடியாக அமர்ந் திருந்த இருவருக்கும் முப்பது வயதிருக்கும்.
2. உஷாரய்யா உஷாரு : வீடியோ வெளியிட்டு மாட்டிக்கொண்ட மாணவன்
அவன் சிறிய நகரம் ஒன்றில் இயங்கிக் கொண்டிருக்கும் கல்லூரி ஒன்றில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன். வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவனது மாமா வாங்கிக் கொடுத்திருக்கும் செல்போனுடன் தான் எப்போதும் உலா வருவான்.
3. உஷாரய்யா உஷாரு..
அதிகாலை நேரத்திலே அந்த ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. ரெயிலில் ஏறுவதும், இறங்குவதுமாக எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ‘சைல்டு ஹெல்ப்லைன்’ குழுவை சேர்ந்த இரண்டு பெண்கள் அங்கும் இங்குமாக நின்றபடி கூட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
4. உஷாரய்யா உஷாரு..
அவள் அழகு நிறைந்தவள். கலைத்துறை ஈடுபாடும் இருந்ததால் காண்போரை வசீகரிக்கும் நேர்த்தியுடன் காட்சியளிப்பாள்.
5. உஷாரய்யா உஷாரு..
அவள் வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்தவள். இயல்பாகவே பிடிவாதம் பிடித்தவள். பிளஸ்-டூ முடித்ததும் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள்.

ஆசிரியரின் தேர்வுகள்...