சிறப்புக் கட்டுரைகள்

எண்ணெய் தேய்த்து குளித்தல்: உடலுக்கு என்ன பலன் கிடைக்கும்? + "||" + Rubbing oil and bathing: What is the effect of the body?

எண்ணெய் தேய்த்து குளித்தல்: உடலுக்கு என்ன பலன் கிடைக்கும்?

எண்ணெய் தேய்த்து குளித்தல்: உடலுக்கு என்ன பலன் கிடைக்கும்?
நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கண்டு பிடித்த எண்ணற்ற இயற்கை வழிகளில் எண்ணெய் குளியலும் ஒன்று. நாம் வாழும் தென்னிந்திய பகுதி அதிக வெப்பம் நிறைந்தது.
மது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கண்டு பிடித்த எண்ணற்ற இயற்கை வழிகளில் எண்ணெய் குளியலும் ஒன்று. நாம் வாழும் தென்னிந்திய பகுதி அதிக வெப்பம் நிறைந்தது. அதனால் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் நலத்திற்கு ஏற்றது. நம் முன்னோர்கள் பல தலைமுறைகளாக கடைப்பிடித்து வந்த இந்த பழக்கம் பின்பு வழக்கத்தில் இருந்து மறைந்திருந்தாலும்,  தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு சனிநீராடலுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. ஆனாலும் எண்ணெய் தேய்த்துக் குளிப் பதைப் பற்றி பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன.

- எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் என்ன பயன்?

- எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பொழுது எண்ணெய் தோல் அடுக்கு களுக்கு உள் செல்லுமா?

- உடல் சூடு குறையுமா?

- சருமத்திற்கு பளபளப்பு கிடைக்குமா?

என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கான விடையை ஒவ்வொரு வரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எதற்காக?

சருமம், நம் உடலுக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகின்றது. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு, மாறி வரும் பருவ காலங்களுக்கு ஏற்ப தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவைகளால் சருமம் பாதிக்கப்படுகிறது.

நமது சருமத்தில் படியும் எல்லாவிதமான அழுக்குகளும் நீரில் கரையும் தன்மை வாய்ந்தவை இல்லை, சில வகை அழுக்குகள் கொழுப்பில்தான் கரையும். அப்படிப்பட்ட அழுக்குகள் எண்ணெய் தேய்க்கும்போது அகற்றப்பட்டு விடும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கண், காது, மூக்கு, சருமம் போன்ற புலன் உறுப்புகள் சிறப்பாக செயல்படும்.

எண்ணெய்யை உடலில் தேய்க்கும்போது ரத்த ஓட்டம் தூண்டப்படும். தசைகள் நெகிழ்ந்து நன்றாக செயல்படும். இதனால் உடலுக்குள் பத்து முதல் பதினைந்து சதவீதம் பிராணவாயு கூடுதல் செல்வதாக ஆராய்ச்சி மூலம் தெரியவந்திருக்கிறது. இது உடலில் புத்துணர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

தசைகளில் தேங்கியுள்ள கழிவு, நிணநீர் மூலம் ரத்த ஓட்டத்தில் கலந்து சுத்தி கரிக்கப்பட்டு கழிவாய் வெளியேற்றப் படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

உட்கார்ந்தபடியே கம்ப்யூட்டரை இயக்கி வேலை செய்பவர்கள் பலருக்கு கழுத்து, தோள்பட்டை, முதுகு பகுதிகளில் தசை பிடிப்பு ஏற்படும். அது ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி வலியை உருவாக்கும். எலும்பு தேய்மானமும் ஏற்படும். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். எலும்புகள் பலம் பெறும். கை, கால், மூட்டுகளிலும் எலும்பு தேய்மானம், எலும்பு சிதைவு போன்றவை ஏற்படாது. தலை முடியும் உதிராது.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறை

50 மி.லி. நல்லெண்ணெய்யில் 1/2 தேக்கரண்டி சீரகம் மற்றும் சிறிதளவு மிளகு இட்டு சூடு செய்து, ஆறவைத்து தலைமுதல் பாதம் வரை கீழ் நோக்கி தேய்க்க வேண்டும்.

தலையின் மயிர்கால்களில் நன்கு தேய்க்க வேண்டும். காது மற்றும் மூக்கில் இரண்டு சொட்டு இட்டு அழுக்குகளை நீக்க வேண்டும். கழுத்து தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் அழுத்தி தேய்த்து தசைப்பிடிப்புகளை போக்க வேண்டும்.

அக்குள், தொடையிடுக்கு பகுதியில் வியர்வை உண்டாவதால் பூஞ்சைத் தொற்று ஏற்படும். அந்த இடங்களில் எண்ணெய் தேய்ப்பதால் சருமம் ஆரோக்கியமாகும்.

பாதங்களில் சிறப்பு கவனம்கொடுத்து தேய்க்க வேண்டும். சிலருக்கு கால் மரத்து போகுதல், ஊசி குத்துவது போன்ற உணர்வு ஆகியவை நரம்பு இழைகள் பாதிப்பால் உண்டாகும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நரம்புகள் தூண்டப்பட்டு நன்கு செயல்படும்.

பாதத்தின் பின்புறம் சிலருக்கு வெடிப்பு ஏற்பட்டு குதிகால் வலியுண்டாகும். அங்கு எண்ணெய் தேய்க்கும்போது பாதம் மிருதுவாகும். வெடிப்புகள் மறையும். விரல் இடுக்குகளிலும், விரல் நகக்கண்களிலும் எண்ணெய் தேய்ப்பதன் மூலம் அங்கு ஏற்படும் பூஞ்சை தொற்றுக்களை தவிர்க்கலாம்.

வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல்சூடு நீங்கும். கண் எரிச்சல் தீரும். நல்லெண்ணெய் தேய்க்கும் பொழுது அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தோல் அடுக்குகளை தாண்டி எலும்பு மஜ்ஜை வரை செல்வதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது சிகைக்காய், பூவந்திக்கொட்டை, அரப்புதூள், உதிலப்பொடி போன்றவற்றை கொண்டு தலை மற்றும் உடலை சுத்தம் செய்வது சிறந்தது. கோடை காலத்தை தவிர மற்ற காலங்களில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. சூரியன் உதித்த இரண்டு மணிநேரத்திற்குள் எண்ணெய் தேய்த்துக்கொண்டு இளம் வெயிலில் உடல்படுமாறு இருந்து, பத்து முதல் இருபது நிமிடம் கழித்து குளிப்பது சிறந்தது.

உணவு உண்ட பின் குளிப்பது தவறானது. அப்படி குளித்தால் அது ரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அஜீரணத்தை உண்டாக்கும்.

சிலருக்கு சைனஸ், தலைவலி, மூக்கடைப்பு போன்ற தொந்தரவு இருக்கும். அவர்கள் சுக்குத் தைலம், பீனிச தைலம், நொச்சித் தைலம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி குளிக்கலாம். உடல் சூடு இருந்தால் சந்தனாதி தைலம் பயன்படுத்தலாம். பொடுகு இருப்பவர்கள் பொடுதலை தைலம் பயன்படுத்தலாம். தேவைப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது நல்லது.

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும். இளநீர், சில்லென்ற பானங்கள் பருகுவதை தவிர்த்து விட வேண்டும். அன்று மட்டும் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து உடல் ஓய்வை நாடும். எனவே அன்று கடினமான வேலைகளை செய்வதையும், வெயிலில் அலைவதையும் தவிர்க்கலாம். அன்று பகலில் உறங்க கூடாது. உடலுறவு கூடாது. வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது. இயலாதவர்கள் வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை ஏற் படுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இளமையையும், அழகையும் பாதுகாக்கலாம்.

(தொடரும்)

கட்டுரை: டாக்டர். இரா.பத்மபிரியா, சித்த மருத்துவர், சென்னை.