அலுவலகம் செல்லும் பெண்கள்... அடுக்கடுக்கான பிரச்சினைகள்...


அலுவலகம் செல்லும் பெண்கள்... அடுக்கடுக்கான பிரச்சினைகள்...
x
தினத்தந்தி 14 April 2019 6:46 AM GMT (Updated: 14 April 2019 6:46 AM GMT)

பெண்கள் இப்போது படித்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். கைநிறைய சம்பாதிக்கிறார்கள். மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றெல்லாம் பேசுவது ஒருபுறம் இருந்தாலும், நிஜம் அவ்வளவு மகிழ்ச்சிதருவதாக இல்லை.

பெண்கள் இப்போது படித்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். கைநிறைய சம்பாதிக்கிறார்கள். மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றெல்லாம் பேசுவது ஒருபுறம் இருந்தாலும், நிஜம் அவ்வளவு மகிழ்ச்சிதருவதாக இல்லை. அவர்கள் அலுவலகம் செல்லும் சூழலும், அலுவலகத்தில் சந்திக்கும் நெருக்கடிகளும் பெரும்பாலும் அவர்கள் மனம் மட்டுமே அறிந்த உண்மை... அதுபற்றி மனம் திறக்கிறார்கள் சில திருமணமாகாத பெண்களும், இல்லத்தரசிகளும்...

கர்ப்பகாலத்தால் கவலை வந்தது

வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மும்பை பெண் தனிஷா:

“அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட, நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றில் நான் வேலைபார்க்கிறேன். நாங்கள் ஆண்டுதோறும் அதிக அளவிலான வியாபார இலக்கை அடைவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி உழைத்துக்கொண்டிருக்கும் சூழலில் நான் கர்ப்பம் தரித்தேன். பிரசவ சமயத்தில் விடுமுறை எடுத்தேன். 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தேன்.

எனது கர்ப்பகால விடுமுறை முடிந்து திரும்பியபோது, எனது அலுவலகம் ரொம்பவே மாறி இருந்தது. நான் அலுவலகத்தின் எதிர்பார்ப்புக்கேற்ப என்னை மாற்றிக் கொள்ள ரொம்ப போராடினேன். அந்த இடைவேளையில் எனக்கு கீழ் பணிபுரிந்த உதவியாளர் பதவி உயர்வு பெற்று மேலே சென்றுவிட்டார். இன்று நான் அவரிடம் ரிப்போர்ட் வழங்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. எனது முன்னுரிமை இப்போது மாறிவிட்டது. நான் வித்தியாசமாக உணர்கிறேன். அலுவலக நிர்வாகம், முழுநேரமும் பணியில் பக்தியாக இருப்பவர்களையே நாடுகிறது. நமது குடும்பசூழலை அவர்கள் கவனத்தில்கொள்ளவே மாட்டார்கள். பெண்கள்தான் வேலையையும், வாழ்க்கையையும் அனுசரித்து பேலன்ஸ் செய்ய வேண்டி இருக்கிறது. நான் என் வேலைக்கு விசுவாசமாக இல்லாவிட்டால், புறக்கணிக்கப்பட்டுவிடுவேன். இந்த நிலையில் இரண்டாவது குழந்தையைப் பற்றி சிந்திக்கவே பயமாக இருக்கிறது”

புத்திசாலித்தனத்தைக்காட்ட வழியில்லை

பெங்களூருவில் பணியாற்றும் சாய்ரா மோகன்:

“நான் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவில் பணி செய்கிறேன். ஆரம்ப காலத்தில் இருந்து இது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் வேலை. பெண்கள் இந்தப் பிரிவில் வேலைசெய்ய நீண்டகாலம் கலாசார தடையும், பெண்களை புறக் கணிக்கும் எண்ணமும் இருந்துவந்தது. ஆண்களின் மனோபாவம் இங்கு கவலைதருகிறது. அலுவலக சந்திப்பில் தொழில்நுட்பம் பற்றி பெண்கள் பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை. நாம் அவர்கள் பக்கமாக சாய்ந்து அனுசரித்துச் செல்ல வேண்டும். நான் கோபித்துக் கொண்டால், எனது சகிப்புத்தன்மையை இழந்தால், அலுவலகத்தில் உள்ள எனது குழுவினராலும், தலைவராலும் வெறுக்கப் படுவேன். நான் இதை அறிந்து கொண்ட பின்பு எனது புத்திசாலித்தனங்களை எளிதில் வெளிப்படுத்துவதில்லை. பணி நெறிமுறைக்கு உட்பட்டே செயல்பட ஆரம்பித்தேன். என்னால் முடியும் என்றாலும், எல்லோரும் முடியாது என்றால், நானும் அவர்களோடு சேர்ந்து, ‘ஆமாம்.. முடியாது’ என்று கூறிவிடுவேன். இதுதான் இப்போதைக்கு எனது புத்திசாலித்தனமாக இருக்கிறது”

பெண்களுக்கு என்ன தேவை?

அலுவலகம் செல்லும் பெண்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை சொல்கிறார்கள்:

அலுவலகத்தில் பெண்களின் எண்ணிக்கையையும், அவர்களுக்கான பாதுகாப்பையும் அதிகப்படுத்த வேண்டும்.

வழிகாட்டிகள், ஆலோசகர்கள், கண்காணிப்பாளர்கள் பணி களுக்கு பெண்களை நியமிக்க வேண்டும்.

தலைமைப் பொறுப்புகளிலும் பெண்களை நியமித்தால் வளர்ச்சிக்காக அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஆதிக்கமனப்பான்மையுடன் பெண்களுக்கு உயர் பொறுப்புகளை வழங்க தடைபோடக்கூடாது.

தாய்மார்களின் பணி மற்றும் கடமைகளை புரிந்து கொள்ள ஆண்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வேண்டும்.

கர்ப்பகாலத்தில் போதிய ஓய்வும், இடைவேளையும், பொருந்தக்கூடிய பணியும் வேண்டும்.

பெண்கள் அமைதியாக இருந்து பணியை செய்யும் சூழலை அலுவலகங்களில் உருவாக்கவேண்டும்.

அவர்களது திறமைக்கு முழுமையான அங்கீகாரமும் தேவை.

ஆண்களால் அலட்சியம்

டெல்லியை சேர்ந்த நிஷா:

“வேலைக்கு வரும் பெண்களை சக ஆண்கள் பார்க்கும் பார்வை வித்தியாசமானது. அவர்கள் வேறுமாதிரியான தொந்தரவுகளை தராதபோதும், பெரும்பாலான வேலைகளை பெண்களின் தலையிலே கட்டப்பார்ப்பார்கள். அதனால் பெண்கள் அதிக வேலைப்பளுவை தாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதை நாம் ஏற்றுக்கொள்ளாதபோது ஒன்றும் தெரியாதவள் என்று முத்திரைகுத்தப்படுவோம் அல்லது ஆண்களால் அலட்சியப்படுத்தப்படுவோம். அது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தும். அதை தாக்குப்பிடிக்க முடியாத பெண்கள் வேலையைவிட்டு வெளியேறும் சூழ்நிலைகூட உருவாகும்”

சிக்கல்கள் பலவிதம்...

உலக பொருளாதார மன்றம், பணிஇடத்தில் உள்ள உலக அளவிலான பாலின விகிதாச்சார அறிக்கையை 2017-ல் வெளியிட்டது. அதில் இந்தியாவில்தான் உலகிலேயே மிக குறைவான பெண் பணியாளர்கள் இருப்பது தெரியவந்தது. 28.5 சதவீதம் பெண்களே பணியில் உள்ளார்களாம். இதிலும் மூன்றில் 2 பங்கு பெண்கள் பொருளாதார சிக்கலால், கட்டாயத்தின் காரணமாக பணிக்கு வருபவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. இந்திய நிறுவனங்கள் இப்போதுதான் பெண்களை பணிக்கு அமர்த்த பழகி வருகின்றன என்கிறது அந்த புள்ளி விவரம்.

வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும், அலுவலக வேலையையும் இரட்டைச்சவாரிபோல் தொடரவேண்டியதிருக்கும். அலுவலக வேலைகள் ஒருபுறம் நெருக்கடியை கொடுக்க, அங்கு ஆண்கள் பெண்கள் மீது திணிக்கும் வேலைச்சுமையும், அழுத்தங்களும் வேறுவகையில் இருக்கும்.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை, அதற்குரிய பராமரிப்பு மையங்களில் விட்டுச்செல்கிறார்கள். குழந்தைகளை பராமரிக்கும் “டே-கேர்” மையங்களுக்கு இந்தியாவில் உறுதியான விதிமுறைகள் எதுவும் கிடையாது. அதனால் குழந்தை நலன் சார்ந்த பிரச்சினைகளையும் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்தால், குழந்தை பராமரிப்பு மையங்கள் தரும் தொந்தரவுகளையும் தாங்கவேண்டியதிருக்கிறது. அதனால் தாயாகிவிட்ட பெண்கள் பகுதி நேர வேலைகளையே பெரிதும் விரும்புகிறார்கள்.

தங்கள் திறமைகளாலும், அரசு விதிமுறைகளாலும், சமீபகாலமாக நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண் களின் எண்ணிக்கை அதி கரித்துக்கொண்டிருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் சமயோசிதமாக நடந்துகொள்ளும் முறையும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஒரு வேலையை இழந்தாலும், புதிய பணியில் சேருவது, அடுத்தவேலையை உருவாக்கிக் கொள்வது பற்றிய விழிப்புணர்வும் அவர்களிடம் அதிகரித்துள்ளது.

Next Story