சிறப்புக் கட்டுரைகள்

காண்பது கனி... நிறைவது ஐஸ்வர்யம்... + "||" + See fruit ...To be fulfilled Prosperity ...

காண்பது கனி... நிறைவது ஐஸ்வர்யம்...

காண்பது கனி... நிறைவது ஐஸ்வர்யம்...
தமிழகத்தில் கொண்டாடப்படும் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் பல்வேறு பாரம்பரியங்களையும், ஐதீகங்களையும் கொண்டது.
தமிழ்ப் புத்தாண்டான சித்திரை திருநாள் ஆண்டின் முதல் நாளாக கொண்டாடப்பட்டாலும், குமரி மாவட்டத்தில் இவ்விழா சற்று வித்தியாசமாக அமைந்திருக்கிறது. அதற்கு தற்போதைய குமரி மாவட்டம் முன்பு திருவிதாங்கூர்- கொச்சி சமஸ்தானத்தோடு (கேரள மாநிலம்) இணைந்திருந்ததும், மலையாள மொழி பேசும் மக்கள் இம்மாவட்டத்தில் காணப்படுவதும் ஒரு காரணம் என்றே கூறலாம்.

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை களில் விஷூ பண்டிகையும் ஒன்று. மலையாள மாதமான மேடம் மாதம் பிறக்கும் நாளைத்தான் அங்கு விஷூ பண்டிகையாக மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்திய ஜோதிட கணக்குப்படி இந்நாளில் சூரியன் மேஷ ராசிக்குள் நுழைவதாக கருதப்படுகிறது. இம்மாதத்தின் பிறப்பு வசந்தகாலத்தின் தொடக்கமாக அங்குள்ள மக் களால் கருதப்படுகிறது. இந்த விஷூ பண்டிகையில்தான் தமிழ்ப் புத்தாண்டான சித்திரை மாதமும் பிறக்கிறது.

கேரளாவின் மிக அருகாமையில் குமரி மாவட்டம் அமைந்திருப்பதாலும், நில எல்லை அளவில் தமிழகமும், கேரளாவும் இருவேறு மாநிலங்களாக பிரிந்திருந்தாலும் இன்னமும் கேரளாவுடன் நீண்ட, நெடிய தொடர்புகளையும், உறவுகளையும் கொண்டிருப்பதாலும் குமரி மாவட்ட மக்கள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை அதாவது சித்திரை முதல்நாளை சித்திரை விஷூ என்றே அழைத்து வரு கிறார்கள். அழைப்பதோடு மட்டுமின்றி கேரள மக்கள் விஷூ பண்டிகை கொண்டாடுவதைப்போல குமரி மாவட்ட மக்களும் சித்திரை விஷூவை பல்லாண்டு காலமாக சீரும், சிறப்புமாக கொண்டாடவும் செய்கின்றனர்.

சித்திரை மாத பிறப்புக்கு முந்தைய நாள் இரவு வீட்டில் உள்ள பெரியோர்கள் பூஜை அறையில் பெரிய கண்ணாடி களை வைத்து அவற்றின் முன்பு மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகளையும், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளையும் படைப்பார்கள். பழங்கள் மற்றும் காய்கறி குவியலுக்கு இடையே அவரவர் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி காசுகள், நகைகள், பணம் மற்றும் சில்லரை காசுகளும், கொன்றைப் பூக்கள், வெற்றிலை-பாக்கு, குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களும், அரிசி உள்ளிட்ட தானியங்களும் வைக்கப்பட்டு இருக்கும்.

இந்த பிரத்யேக ஏற்பாட்டை செய்தவுடன், வீட்டில் உள்ள அனைவரும் தூங்கச் சென்று விடுவார்கள். மறுநாள், அதாவது சித்திரை விஷூ அன்று விழித்து, சூரியோதயத்துக்கு முன்பு வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்களை மூடியவாறே பூஜையறைக்குச் சென்று, குவித்து வைக்கப்பட்டுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் முன் நின்று கண் திறப்பார்கள். கண் குளிர இந்த படையல்களை தரிசனம் செய்த பிறகு, வீட்டில் உள்ள மற்றவர்கள் ஒவ்வொருவராக படுக்கையில் இருந்து எழுந்து கண்களை மூடியபடி வந்து பழக்குவியல்களை காணச் செய்வார்கள். இந்த கண்கொள்ளா காட்சியைத் தான் கனி காணும் நிகழ்ச்சி என்று அழைக் கிறார்கள். சித்திரை முதல் நாள் அன்று கனி காண்பதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

வீடுகளில் மட்டுமின்றி குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களிலும் சித்திரை விஷூ அன்று சிறப்பு பூஜைகள், கனி காணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேநேரத்தில் கேரள ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும்.

தங்களது இல்லங்களில் கனி காணும் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் நீராடி, புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய செல்வார்கள். அங்கும் கனி காணல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக கோவில் பூசாரிகள் காய்-கனிகள், காசு-பணம் ஆகியவற்றை வழங்குவார்கள்.