‘தமிழன் என்று சொல்லடா...’- கவிஞர் ராமலிங்கம்பிள்ளை


கவிஞர் ராமலிங்கம்பிள்ளை
x
கவிஞர் ராமலிங்கம்பிள்ளை
தினத்தந்தி 14 April 2019 8:47 AM GMT (Updated: 14 April 2019 8:47 AM GMT)

நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி அம்மணியம்மாள். இந்த தம்பதிக்கு 1888-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி 8-வது குழந்தையாக பிறந்தவர் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை.

நாமக்கல் கவிஞர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த இவர், நாமக்கல் நம்மாழ்வார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பின்னர் காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, 1930-ல் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ராஜாஜியுடன் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை நடைபயணமாக சென்றார்.

அப்போது இவர் பாடிய ‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற பாடல் வழிநடை பாடலாக அமைந்தது. மேலும் ‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற கவிஞரின் வரிகள் தமிழில் நாட்டுப்பற்றையும், தமிழ் உணர்வையும் மக்களிடையே வளர்த்தது. இதற்கு பின்னர் இவர் நாடறிந்த கவிஞர் ஆனார்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிச்சிறப்பு பெற்ற இவர் ஓவியராக, பேச்சாளராக, விடுதலை போராட்ட வீரராக பல்வேறு பரிமாணங் களில் சிறந்து விளங்கினார். இவருக்கு 1971-ம் ஆண்டு பத்மபூஷன் விருது கிடைத்தது. தமிழனை தலைநிமிர வைத்த நாமக்கல் கவிஞர் 24.8.1972-ல் காலமானார். தமிழக அரசின் சார்பில் 1989-ம் ஆண்டு கவிஞரின் நூற்றாண்டு விழாவில், அஞ்சல் தலை வெளியிட்டு, சிறப்பு சேர்க்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள 10 அடுக்குமாடி கட்டிடத்திற்கு ‘நாமக்கல் கவிஞர் மாளிகை’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் இவர் வாழ்ந்து வந்த வீடு உள்ளது. இந்த நினைவு இல்லம் 29.1.1998-ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டு, 21.1.2000-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. பின்னர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் 400 சதுரஅடி பரப்பளவில் பொது நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தில் சுமார் 7 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.


Next Story