சிறப்புக் கட்டுரைகள்

ஜனநாயக ‘பாட்டி’ + "||" + Democratic 'grandmother'

ஜனநாயக ‘பாட்டி’

ஜனநாயக ‘பாட்டி’
18 வயதை எட்டிய அனைவரும் தவறாமல் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
18வயதை எட்டிய அனைவரும் தவறாமல் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 1951-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலின்போதும் தவறாமல் வாக்களித்து வருகிறார், அஞ்சனா தாந்தி. 105 வயதாகும் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றி இருக்கிறார். அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் தற்போது வசித்து வருகிறார்.

‘‘தேர்தல் நடக்கும் அன்று வழக்கத்தை விட சீக்கிரமாகவே எழுந்துவிடுவேன். ஒரு கப் டீ பருகிவிட்டு 8 மணிக்கெல்லாம் வாக்குசாவடி மையத்திற்கு சென்றுவிடுவேன். எனக்கு முன்பாக யாருமே வாக்களித்திருக்க மாட்டார்கள். பழைய காலத்தில் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் வாக்கு பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. நான் பலமுறை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறேன். ஓட்டு போடுவதற்கான வாய்ப்பு கிடைப்பது பழைய காலத்தில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பெருமிதத்திற்குரிய விஷயமாக இருந்தது.

அஞ்சனா தனது முதுமையை காரணம் காட்ட ஓட்டு போடுவதை தவிர்த்ததில்லை. உற்சாகத்துடன் சென்று ஓட்டுப்போடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

‘‘மக்களவை, சட்டசபை, பஞ்சாயத்து தேர்தல்களின்போது எப்போதும் உற்சாகத்துடன் சென்று வாக்களிக்கிறேன். இந்திரா காந்தியையும், வாஜ்பாயையும் அவர்கள் பிரதம மந்திரியாக இருந்தபோது நேரில் சென்று சந்தித்திருக்கிறேன். ஜனநாயக வழியில் நின்று ஒவ்வொரு வரும் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது எப்போதும் என்னை கவரும் அம்சமாக இருக்கிறது. இப்போது பொதுமக்கள் அதிகமாகவே விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நிதிகளுக்கு முறையான கட்டுப்பாடுகள் அவசியமானது. சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். வாக்களிக்காமல் இருப்பது தீர்வாக அமையாது. இளைஞர்கள் தேர்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நான் ஜனநாயகத்தை மிகவும் நேசிக்கிறேன். ஏனெனில் ஜனநாயகத்தின் கைகளில்தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்’’ என்கிறார்.

அஞ்சனா வாக்களிப்பது பற்றி கிராம தலைவர் மிருதுல் தாந்தி கூறுகையில், ‘‘எங்கள் சிறு வயது பருவத்தில் இருந்தே அவரை பார்த்து வருகிறோம். அவர் எல்லா தேர்தல்களிலும் தனது வாக்கை பதிவு செய்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவரை போன்ற எங்கள் கிராமத்தைச் சேர்ந்த வயதானவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச்செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம்’’ என்கிறார்.