சிறப்புக் கட்டுரைகள்

சித்திரை முழு நிலா-தமிழ்ச் சங்கத்தில் நூல் அரங்கேறும் நாள்...! + "||" + The Pandiyas who have grown up with three Tamil cigarettes (Tamil Sangam) are from Chandrakulam,

சித்திரை முழு நிலா-தமிழ்ச் சங்கத்தில் நூல் அரங்கேறும் நாள்...!

சித்திரை முழு நிலா-தமிழ்ச் சங்கத்தில் நூல் அரங்கேறும் நாள்...!
மூன்று தமிழ்க்கழகம் (தமிழ்ச்சங்கம்) வைத்து முத்தமிழ் வளர்த்த பாண்டியர்கள் நிலவுக் குடி மரபை அதாவது சந்திர குலத்தைச் சார்ந்தவர்கள்
முழு நிலா நாளில்தான் பழந்தமிழர்கள் விழா கொண்டாடுவார்கள், கதிர் அறுவடையும் முழுநிலா நாளில்தான் நடைபெறும். இளவேனில் சித்திரை முழு நிலா நாளில் தமிழ்ச் சங்கம் கூடுவது வழக்கம், பொன்னேர் கட்டுவதும் அந்நாளில்தான், கூடல் என்னும் மதுரையில் புலவர்கள் ஒன்று கூடி பாடல்களையும், நூல்களையும் அரங்கேற்றுவார்கள். அதனைக் கலித் தொகைப் பாடல் குறிப்பிடுகிறது.

“நிலன்நாவில் திரிதரும் நீள்மாடக்கூடலார்
புலன்நாவில் பிறந்தசொல் புதிது உண்ணும்
பருவத்து” என்பனவே அந்த வரிகள், மாடக் கூடல் என்னும் மதுரை உலகில் எல்லோருக்கும் தெரிந்த ஊர்ப் பெயர், அங்கு தமிழ்ச்

சங்கத்தில் புதிதாக அரங்கேறிய பாடல்களையும், நூல்களையும் பாணர்கள் வழியாக மக்கள் கேட்டு மகிழ்ந்தார்கள் என்பதே இப்பாடல் வரிகளின் பொருள், பாணர்கள் யானைகளில் ஏறி இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்றார்கள். ஒடிசாவில் இன்றும் பாணர் குடியினர் வாழ்கின்றனர். சிந்துவெளி முத்திரையிலும் பெரும்பாணன் என்னும் சொல் காணப்படுகிறது.

இறையனார் களவியல் என்னும் நூல் தமிழ்ப் புலவர்கள் மட்டும் அல்லாமல். தமிழ் மன்னர்களும் கவியரங்கு ஏறினால்தான் அவர்களுடைய புலமை ஒப்புக் கொள்ளப்படும். மன்னன் எழுதிய பாடலே என்றாலும் அது தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற வேண்டும். ஒவ்வொரு தமிழ்ச் சங்க காலத்திலும் வாழ்ந்த மன்னர் எண்ணிக்கையும், அவர்களுள் கவியரங்கு ஏறியோர் எண்ணிக்கையும் அந்நூலில் கூறப்பட்டு உள்ளது. தமிழ்ச் சங்கத்தில் ஒரு நூல் அரங்கேற வேண்டுமானால் பின் வரும் 10 குற்றங்களில் ஒன்று கூட அந்த நூலில் இருத்தல் ஆகாது, பத்து குற்றங்களாவன:

1. குன்றக் கூறல் 2. மிகை படக் கூறல் 3. கூறியது கூறல் 4. மாறுபடக் கூறல் 5. வெற்றெனத் தொடுத்தல் 6. மற்றொன்று விரித்தல் 7. வழூஉச் சொல் (பிழை) புணர்த்தல் 8. மயங்க வைத்தல் 9. சென்று தேய்ந்து இறுதல் 10. நின்று பயனின்மை இன்றைய தமிழில் நூல் எழுதுவோரும். தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்ற வேண்டும் என்னும் நிலையை அரசு உருவாக்க வேண்டும். முழு நிலா நாள் ஒன்று கூடும் வாய்ப்புகளை உருவாக்கியது.

தமிழரின் ஒற்றுமையை வளர்த்தது. பகலில் தமிழ்ச் சங்கம் கூடினால். இரவில் ஆடலும் பாடலுமாக இசைத் தமிழும் நாடகத் தமிழும் வளர்க்கப் பட்டன. இன்றும் நாட்டுப் புறங்களில் பகலில் பாரதக் கதை படித்தால் அன்று இரவே அது தெருக் கூத்தாக நடித்துக் காட்டப்படும், முழுநிலா நாள் என்பது முத்தமிழ் வளர்க்கும் நாள். ஊர் மன்றங்கள் முழு நிலா நாளில்தான் கூடும். மகரமீன் கிழக்கில் தோன்றும் தை முதல் நாள் தமிழரின் ஆண்டு தொடக்கமாக இருந்தது. பொன்னேர் கட்டும் சித்திரை முழு நாள் தமிழ் வளர்ச்சிக்கும் உழவுத் தொழில் மாட்சிக்கும் தொடக்க நாளாக இருந்தது. தமிழுக்கு தனிப்பெருமை சேர்த்த இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொல்காப்பியரால் எழுதப்பட்டது. தொல்காப்பியர் பிறந்த நாள் சித்திரை முழு நிலா நாள் என்று தமிழ்ச் சங்கங்கள் தீர்மானித்தன. அதன்படி ஏப்ரல் 19-ம் நாள். கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோட்டை சார்ந்த காப்பிக்காடு என்னும் ஊரில் இந்திய தமிழ்ச் சங்கங்கள் ஒன்று கூடி. தொல்காப்பியர் பிறந்த நாளை கொண்டாடுவதாக இனிய செய்தி வெளிவந்துள்ளது.

தொல்காப்பியர் பிறந்த ஆண்டு கி.மு. 865 என்று தொல்காப்பியர் காலம் என்னும் நூல் கூறுகிறது. எனவே உலகத் தமிழர்கள் சித்திரை முழு நிலா நாளை தொல்காப்பியர் பிறந்த நாளாக கொண்டாட வேண்டும். பழந்தமிழரின் ஆண்டுக் கணக்கு சந்திரமானம் என்னும் நிலா ஆண்டாக இருந்தது. முதல் தமிழ்ச் சங்க காலத்திலிருந்தே. இது வழக்கத்தில் இருந்ததால். பாபிலோனியா போன்ற மேனாடுகளுக்கும் இது பரவியது. சூரிய மானம் என்னும் சூரிய ஆண்டு கணக்கு தோன்றிய பிறகு ஒரு ஆண்டுக்கு 365¼ நாள் என கணக்கிடப் பட்டது. ஆனால். நிலா ஆண்டுக் கணக்கில் ஓராண்டு என்பது சரியாக 360 நாள் கொண்டதாக இருந்தது. சூரிய ஆண்டில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் கொண்டது. ஆனால் நிலா ஆண்டுக் கணக்கின்படி ஒரு நாள் என்பது 24 மணி 21 நிமிடம் கொண்டது, ஏனென்றால். நிலா பூமியைச் சுற்றிவர ஒரு நாளில் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது, நிலா ஆண்டில் ஒரு மாதத்துக்கு 30 நாள். ஒரு வாரத்துக்கு 6 நாள். ஒரு மாதம் 5 வாரம் கொண்டது.

நிலா மாதக்கணக்கில் சனிக்கிழமை இல்லவே இல்லை. ஒவ்வொரு மாதமும் முழு நிலா வெள்ளிக்கிழமையில்தான் வரும். அதனால் வெள்ளிக்கிழமை பழந்தமிழர் வாழ்வில் மிகவும் சிறப்புப் பெற்ற நாளாக மாறி விட்டது. ஊர்தோறும் ஓதாளர் இருந்தனர், ஓதாளர் என்போர் தான் கற்ற அரிய நூல்களிலிருந்து சிறந்தவற்றை ஊர் மன்றத்தில் சொற்பொழிவு ஆற்றுவார்கள். ஒருவன் இறக்கும் வரையில் கல்வி கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கேள்வி அறிவு பெருகிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு முழு நிலா ஊர்மன்றங்கள் உதவின. மிக அதிகமாகப் படித்தவர்களை மக்கள் பெரிதும் விரும்பினர். பாண்டியன் தலையாலங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் தன் அரசவையில் ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதனாரைத் தலைமைப் புலவராக வைத்திருந்தான். எனவே பழந்தமிழரின் கல்வி வளர்ச்சிக்கும், மொழி வளர்ச்சிக்கும் வித்திட்ட சித்திரை முழு நிலா நாளை தமிழ் வளர்ச்சிக்கு அடையாள நாள் என்றும், ஒப்பற்ற இலக்கணம் தந்த தொல்காப்பியர் பிறந்த நாள் - தமிழ் மொழி சிறந்த நாள் என்றும் பெருமை கொள்ளலாம்.

பேராசிரியர் இரா.மதிவாணன், சிந்துவெளி எழுத்தாய்வு மையம்.