சிறப்புக் கட்டுரைகள்

சென்னையில் உருவான பெரும் பஞ்சம் + "||" + The famine occurred in the Madras Presidency.

சென்னையில் உருவான பெரும் பஞ்சம்

சென்னையில் உருவான பெரும் பஞ்சம்
சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சம்
உலகிலேயே மிகப்பெரிய பஞ்சம் என்று சொல்லப்படுவது 1876-ல் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சம்தான். இது 2 ஆண்டுகள் நீடித்தது. ஆரம்பத்தில் சென்னையில் உருவாகி பின் கொஞ்சம் கொஞ்சமாக மைசூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களையும், அதன்பின் வட இந்தியாவையும் தாக்கியது. இந்த பஞ்சத்தில் 5 கோடியே 80 லட்சம் மக்கள் உணவில்லாமல் வாடினார்கள். 55 லட்சம் மக்கள் உணவில்லாமல் பட்டினியில் இறந்தார்கள்.

இந்தப் பஞ்சத்திற்கு மழை பொய்த்துப்போனது ஒரு காரணம் என்றால், ஆங்கிலேய அரசின் மெத்தனமும் மறு காரணம். அதுவரை கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருந்த இந்தியா, சிப்பாய்க் கலகத்திற்குப்பின் பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் தராமல் பணப்பயிர்களுக்கு முக்கியத்துவம் தந்தது. தானியங்களுக்கு பதில் விவசாயிகள் பருத்தியையும் சணலையும் விளைவிக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள். இதனால் உணவு உற்பத்தி, வெகுவாக குறைந்தது. உற்பத்தியாகும் உணவையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

அதே சமயத்தில் மழையும் தன் பங்குக்கு பொய்த்துப்போக பட்டினி மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன. இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் கூட அன்றைய சென்னை மாகாண கவர்னராக இருந்த ரிச்சர்ட் க்ரென்வில் உல்லாசமாக அந்தமான் நிகோபார், பர்மா என்று பயணித்துக் கொண்டிருந்தார். பிரிட்டீஷ் அரசின் கீழ் வேலை பார்த்தவர்களுக்கு மட்டும் 450 கிராம் பருப்பும், ஒரு அணா காசும் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது. நிவாரணக் கூலி பெற்றவர்களை கடுமையாக வேலை வாங்கினார்கள்.

இந்தநிலையில் தான் பிரிட்டீஷ் ராணுவத்தின் குதிரைப்படையில் வேலை செய்த வில்லோபை வாலஸ் ஹூப்பர் என்பவர் பொழுது போக்காக புகைப்படம் எடுத்தார். இந்தப் பஞ்சத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றது இவர் எடுத்த புகைப்படங்கள் தான். இந்தியாவின் மக்கள் என்ற பெயரில் இவர் வெளியிட்ட புகைப்படத் தொகுப்பு ஒட்டு மொத்த உலகையும் இந்தியா பக்கம் திருப்பியது. ஆனால், இவர் மீதும் குற்றச்சாட்டு இல்லாமல் இல்லை.

மக்கள் ஒரு வேளை உணவுகூட இல்லாமல் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களை கட்டாயமாக தனது ஸ்டூடியோவிற்கு இழுத்து வந்து, அவர்களை வைத்து புகைப்படம் எடுத்துவிட்டு உணவுகூட கொடுக்காமல் திருப்பி அனுப்பினார். இப்படி படம் எடுத்து திரும்பிய பலர் பாதி வழியிலேயே மரணம் அடைந்தனர். சாகாவரம் கொண்ட புகைப்படங்களை ஹூப்பர் எடுத்திருந்தாலும் பலரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் என்ற விமர்சனம் அவர் மீது எப்போதுமே இருக்கிறது.