சிறப்புக் கட்டுரைகள்

பங்குகளில் அன்னிய முதலீடு ரூ.13,309 கோடி + "||" + Foreign investment in equities stood at Rs 13,309 crore for the period from April 1 to 12

பங்குகளில் அன்னிய முதலீடு ரூ.13,309 கோடி

பங்குகளில் அன்னிய முதலீடு ரூ.13,309 கோடி
ஏப்ரல் 1 முதல் 12-ந் தேதி வரை பங்குகளில் அன்னிய முதலீடு ரூ.13,309 கோடி
ஏப்ரல் 1 முதல் 12-ந் தேதி வரையிலான காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் ரூ.13,309 கோடியை முதலீடு செய்துள்ளனர்.

புதிய பிரிவு

இந்தியாவில் பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகிறார்கள். அன்னிய நிதி நிறுவனங்கள், துணை கணக்குகள் மற்றும் தகுதி வாய்ந்த அன்னிய முதலீட்டாளர்களை ஒன்றாக இணைத்து வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எப்.பி.ஐ) என்னும் புதிய பிரிவை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அமைப்பு உருவாக்கி இருக்கிறது.

செபி அமைப்பில் பதிவு பெற்ற அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாகவும் உலக பெரும் பணக்காரர்கள், பாதுகாப்பு நிதியங்கள் இந்திய பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் முன்பேர வர்த்தக சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்.

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய மூலதன சந்தையில் இருந்து ரூ.5,264 கோடியை விலக்கினர். ஆனால் பிப்ரவரியில் ரூ.1,17,900 கோடியை முதலீடு செய்து இருந்தனர். மார்ச் மாதத்தில் ரூ.38,211 கோடி முதலீடு செய்தனர்.

இந்த நிலையில், நடப்பு ஏப்ரல் மாதத்தில் 1 முதல் 12-ந் தேதி வரையிலான காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் ரூ.13,309 கோடியை முதலீடு செய்துள்ளனர். இதே காலத்தில் கடன் சந்தையில் இருந்து அவர்கள் ரூ.2,212 கோடியை விலக்கி உள்ளனர். ஆக, இந்திய மூலதன சந்தையில் (பங்கு+கடன் சந்தைகள்) நிகர அடிப்படையில் ரூ.11,097 கோடி அளவிற்கு அன்னிய முதலீடு உள்ளது.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் இருந்து ரூ.1,629 கோடியை விலக்கி உள்ளனர். அந்த ஆண்டில் கடன் சந்தையில் இருந்து வெளியேறிய முதலீடு ரூ.42,951 கோடியாக இருக்கிறது. ஆக, மூலதன சந்தையில் நிகர அடிப்படையில் ரூ.44,580 கோடி அன்னிய முதலீடு வெளியேறி உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் (2017-18) அவர்கள் ரூ.1,44,669 கோடியை முதலீடு செய்து இருந்தனர்.

மத்திய அரசு அனுமதி

நம் நாட்டில் முதலீடு செய்ய அன்னிய நிதி நிறுவனங்களுக்கு 1992 நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. அப்போது முதல் ஏறக்குறைய 25 வருடங்களாக அந்த நிறுவனங்கள் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன. இந்திய பங்குச்சந்தைகளின் வளர்ச்சியில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.