சிறப்புக் கட்டுரைகள்

வேலை வாய்ப்புகளைக் கொண்ட “நீர் அறிவியல்” படிப்புகள் + "||" + Water science courses

வேலை வாய்ப்புகளைக் கொண்ட “நீர் அறிவியல்” படிப்புகள்

வேலை வாய்ப்புகளைக் கொண்ட “நீர் அறிவியல்” படிப்புகள்
நீரின்றி அமையாது உலகு என்ற பொய்யாப்புலவரின் வாக்கு, நீர் தொடர்பான கல்விக்கும், வேலைவாய்ப்பு உலகிற்கும் பொருந்தும்.
தண்ணீர் தேவை உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உள்நாட்டிலும் மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தீராப் பிரச்சினைகளாக இருக்கின்றன. தேர்தல் முழக்கங்களிலும் நீராதாரங்களை பெருக்கவும், அதற்கான திட்டங்கள், நதிகளை ஒருங்கிணைத்தல் பற்றி பேசப்படுவதை கவனிக்கலாம். எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினைகள் இன்னும் பூதாகரமாகலாம், உலக நாடுகள் இடையே தண்ணீருக்கு ஏற்படும் போட்டியால் அடுத்த உலகப்போர் மூளலாம் என்று ஆருடம் சொல்லப்படுகிறது.

தண்ணீர் உலக உயிர்களுக்கான ஆதார வளமாக இருப்பதால், அவை பற்றிய மேலாண்மை படிப்புகள், சட்ட திட்ட கல்வியை படிப்பது எதிர்காலத்திற்கு ஏற்றதாகும். நீர் மேலாண்மை பற்றி பல்வேறு அறிவியல் படிப்புகள் உள்ளன. வாட்டர் ரிசோர்ஸ்- மேனேஜ்மென்ட், வாட்டர் சயின்ஸ் பாலிசி, வாட்டர் என்ஜினீயரிங் போன்றவை குறிப்படத்தக்கவை.

இன்றைய நிலையில் உலக வாழ்க்கைக்கும், சுற்றுச்சூழல் நலத்திற்கும் மிக அடிப்படைத் தேவையாக தண்ணீர் விளங்குகிறது. பருவநிலை மாறுதல்களால் சர்வதேச அளவில் தண்ணீர் சுழற்சி தடைபடுகிறது. தீவிரமான விவசாயம், அதிவேகமாக நகர்மயமாதல், தொழில்களின் பெருக்கம் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான அத்தியாவசிய தேவைகளாலும் தண்ணீரின் பயன்பாடு அதிகரிக்கிறது. உலக நாடுகளின் நீர்நிலைகள் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளன. பல நீர்நிலைகள் வற்றி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.

எல்லா நாடுகளுக்குமே நீர் அடிப்படைத் தேவையென்றால், இந்தியா, சீனா போன்ற ஜனத் தொகை அதிகம் கொண்ட நாடுகளுக்கு நீரின் தேவை வாழ்வுக்கு மட்டுமல்லாமல் வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்குகிறது.

ஐக்கிய நாடுகள் சபை, 2018-ல் வெளியிட்ட உலக தண்ணீர் அறிக்கையின்படி உலகின் தண்ணீர் தேவை ஆண்டுக்கு 1 சதவீதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தில் இது மேலும் உயரும். அச்சுறுத்தும் தண்ணீர் பற்றாக்குறை உலகநாடுகளுக்கு மிகப்பெரும்சவாலாக இருக்கிறது. இதில் இந்தியாவின் நிலையும் சிக்கலானதே. அண்மையில் சமீபத்திய நாசா ஆய்வின்படி, வட இந்தியாவில் தூய்மையான நீரின் அளவு மிக அபாயகரமான அளவில் குறைந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் ஆண்டுகளில் பல மாநிலங்களில் வறட்சி ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

2030-ம் ஆண்டில் ஒருநாடு வளர்ந்த நாடாகவும், நீடித்த வளர்ச்சியுள்ள நாடாகவும் விளங்க வேண்டுமானால், அது நீர்மேலாண்மையை உறுதிப்படுத்துவதில்தான் உள்ளது என்று ஐ.நா. அறிக்கை வரையறுக்கிறது. உலகெங்கிலும் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் மத்தியில் சுகாதார கேடு பெருகுவதை கணக்கில் கொண்டுதான் இது கூறப்படுகிறது. உலகில் சுமார் 200 கோடி பேருக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்கவில்லை என்பது ஐ.நா. அறிக்கை சொல்லும் தகவல்.

தண்ணீர் தொடர்பான பிரச்சினைகள் உலகளாவிய விவகாரமாக உருவெடுக்கும் இன்றைய காலத்தில் இந்திய அரசின் நீர்வளத்துறையில் மாற்றங்களை உருவாக்க நீர்வள நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். எதிர்காலத்தில் இவர்களின் தேவை இன்னும் பல மடங்காகும்.

வாட்டர் சயின்ஸ் பாலிசி

மக்கள், மாநிலங்கள், நாடுகளின் நீர்த்தேவை, நீர்வளங்களை அறிந்து நீர்ப்பிடிப்புகளை பராமரிப்பது, புதிய நீர்ப்பிடிப்புகளை உருவாக்குவது, மழைநீரை சேமிப்பது, நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவது, மாநிலங்கள் மற்றும் நாடுகள் இடையே நீர் பங்கீட்டை முறைப்படுத்துவது, எதிர் காலத்திற்கு திட்டமிடுவது போன்றவை நீர் மேலாண்மையின் முக்கிய அம்சமாகும். நீராதார கொள்கை மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான முக்கியமான படிப்புகளில் ஒன்று வாட்டர் பாலிசி.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் இந்த படிப்பை வழங்குகின்றன. சில தனியார் கல்வி நிறுவனங்களிலும் இந்த படிப்பு வழங்கப்படுகிறது. தண்ணீர் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு தீர்ப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவது நீர்வள நிபுணரின் பணியாகும். நிலையான நீர்ப்பாதைகள், சிக்கலில்லா நீர்க்கொள்கையை வகுப்பது அவர்களின் ஆளுமை களின் வெளிப்பாடாக அமையும். இந்த கொள்கைகள், திட்டங்கள் வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் பல்வேறு படிநிலைகள் உள்ளன. சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிவரும். புள்ளிவிவரங்கள் சேகரிக்க வேண்டி இருக்கும். இவற்றைப் பற்றிய அடிப்படைகளை பாடங்களாக படிக்கலாம். சட்டவிதிமுறைகள், நீர்நிலைகள் மற்றும் தேவைகளுக்கேற்ப திட்டமிட வேண்டி இருக்கும்.

வாட்டர் பாலிசி படித்தவர்களுக்கு பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. மத்திய தண்ணீர் வாரியம், மத்திய மண் மற்றும் தாதுவள ஆராய்ச்சி மையம், மத்திய நிலத்தடி நீர்வாரியம், வெள்ள கட்டுப்பாட்டு அமைப்பு, ஆறுகள் வாரியம், தேசிய கட்டுமான கழகம், சுற்றுச்சூழல்துறை, மத்திய-மாநில விவசாயத் துறைகள், பொதுப்பணித்துறை, நிதிஆயோக், கிராமப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை போன்ற துறைகளிலும், தனியார் பண்ணை நிறுவனங்கள், ரியல்எஸ்டேட் துறை நிறுவனங்களிலும் வேலைகள் கிடைக்கும். தனிப்பட்ட ஆய்வாளர்களாகவும் பணியாற்றலாம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறையில் ஆய்வாளராகவும், திட்ட வடிவமைப்பாளராகவும் பணியாற்றலாம். சமூக ஆர்வலராகவும் திட்டம் வகுத்து சேவையாற்றலாம். கல்லூரிகளிலும் பணியாற்றலாம்.

வாட்டர் சயின்ஸ் அண்ட் பாலிசி போலவே, வாட்டர் சயின்ஸ் அண்ட் கவர்னன்ஸ் மற்றும் வாட்டர் ரிசோர்ஸ் என்ஜினீயரிங், வாட்டர் என்ஜினீயரிங் அண்ட் மேனேஜ்மென்ட், வாட்டர் ரிசோர்ஸ் டெவலப்மென்ட்-மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளும் தண்ணீர் அறிவியல் சார்ந்த முக்கிய படிப்பு களாகும்.

இயற்பியல், சுற்றுச்சூழல் அறிவியல், புள்ளியியல், வேதியியல் மண்ணியியல், அட்மாஸ்பியரிக் சயின்ஸ், பொருளாதாரம், புவியியல், விலங்கியல், தாவரவியல் பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி, பி.ஏ. படித்தவர்கள் மற்றும் பி.இ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுநிலை படிப்புகளாகவும், ஆராய்ச்சி படிப்புகளாகவும் இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிலையம், காரக்பூர் ஐ.ஐ.டி., ரூர்கேலா ஐ.ஐ.டி. கல்வி மையங்களிலும், சில தனியார் பல் கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறு வனங்களிலும் இதுபற்றிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. எதிர் காலத்திற்கேற்ற படிப்புகளில் ஒன்றுதான் வாட்டர் சயின்ஸ். விருப்பமுள்ளவர்கள் இந்த கல்வியைக் கற்று சாதிக்கலாம்.