மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் மின் தூண்டுதல்


மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் மின் தூண்டுதல்
x
தினத்தந்தி 15 April 2019 12:47 PM GMT (Updated: 15 April 2019 12:47 PM GMT)

முதுமையையும், முதியவர்களையும் போற்றும் பண்பாடு நம்முடையது. ‘மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தம்’, ‘பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி’ உள்ளிட்ட சில பழமொழிகளே அதற்குச் சான்று.

முதியவர்கள் தாம் கற்ற அனுபவக் கல்வி மூலமாக நமக்கு நல்வழி காட்டும் வல்லமை கொண்டவர்கள். அதற்கு, முதுமை அவர் களுக்கு கொடுக்கும் விவேகமும், ஞானமுமே காரணம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, முதுமை அதிகரிக்க அதிகரிக்க பெரும்பாலானவர்களுக்கு ஞாபகத்திறன் குறையத் தொடங்கும். தொடக்கத்தில் சாதாரணமான ஒரு சிக்கலாக இருக்கும் ஞாபகத் திறன் குறைபாடு ஒரு கட்டத்தில் ‘டிமென்ஷியா’, ‘அல்செய்மர்ஸ்’ மற்றும் ‘பார்கின்சன்ஸ்’ உள்ளிட்ட மூளைக் குறைபாடு களாக மாறிவிடும் ஆபத்து தற்போது மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இந்த ஆரோக்கியக் குறைபாட்டுக்கு ஒரு தீர்வுகாண உலகின் பல நரம்பியல் ஆய்வாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய ஒரு சமீபத்திய ஆய்வில், முதுமையின் விளைவாக ஏற்படும் ஞாபகத் திறன் குறைபாட்டை, சிறிது நேரம் மேற்கொள்ளப்படும் ஒரு மெல்லிய மின் தூண்டுதல் மூலமாக சரிசெய்ய முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி ராபர்ட் ரெய்ன்ஹார்ட் தலைமையிலான ஆய்வுக்குழுவினர்.

தற்போது சோதனை அளவில் மட்டுமே இருக்கக்கூடிய இந்த மின் தூண்டுதல் சிகிச்சையானது, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. இருந்தாலும், ஆரோக்கியமான மனிதர்கள், மற்றும் அல்செய்மர்ஸ், சில வகையான டிமென்ஷியா கோளாறுகள் கொண்டவர்கள் ஆகிய அனைவரின் புத்திக்கூர்மையையும் அதி கரிக்க விரைவில் உதவலாம் என்கிறார் ஆய்வாளர் ராபர்ட் ரெய்ன்ஹார்ட்.

முதுமை காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி குறையும், ‘செயல்படும் ஞாபகத் திறன் (working-memory)’ குறைவதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய உதவுவதோடு மட்டுமல்லாமல், முதுமை காரணமாக ஏற்படும் ஆபத்தான உடலியல் மாற்றங்கள் மாற்றத்துக்கு உட்படக்கூடியவை என்பதையும் இந்த ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன.

‘செயல்படும் ஞாபகத் திறன்’ என்பது நம் மூளையின் பயிற்சிக் கையேடு போன்றது என்று கூறப்படுகிறது. அதாவது, சில தகவல்களை சில நொடிகள் வரை நிலையான பயன்பாட்டில் வைக்க இந்த ‘செயல்படும் ஞாபகத் திறன்’ உதவுகிறது என்கிறார் ரெய்ன்ஹார்ட். இதன்மூலம், ஒரு மனக் கணக்கு போடுவதில் தொடங்கி வாசிப்பது அல்லது உரையாடுவது வரையிலான பல செயல்களை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘செயல்படும் ஞாபகத் திறன்’ என்பது நம் புத்திக்கூர்மையின் முக்கிய அங்கங்களில் ஒன்று என்றும் கூறுகிறார் ரெய்ன்ஹார்ட்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த செயல்படும் ஞாபகத் திறனானது வயதாக வயதாக குறையும் தன்மை கொண்டது. இந்த குறைவு திடீரென்று ஏற்படும் ஒரு உடலியல் நிகழ்வு அல்ல. மாறாக, செயல்படும் ஞாபகத் திறன் சார்ந்த சில சோதனைகளில் வயதானவர்களை இளைஞர்களை விட மோசமான மதிப்பெண் பெறும் அளவுக்கு தள்ளக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதுமையால் ஏற்படும் இந்த செயல்படும் ஞாபகத் திறன் குறைபாட்டுக்கு காரணம் என்ன என்பதைக் கண்டறிவதும், முடிந்தால் அதனை சரிசெய்ய முனைவதுமே இந்த ஆய்வின் நோக்கமாக இருந்தது என்கிறார் விஞ்ஞானி ரெய்ன்ஹார்ட்.

இந்த ஆய்வில் 20 முதல் 29 வயதான சுமார் 42 இளைஞர்களும், 60 முதல் 76 வயதான 42 முதியவர்களும் செயல்படும் ஞாபகத் திறன் சார்ந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

உதாரணமாக, ஒரே மாதிரியான இரண்டு புகைப்படங்கள் கொடுக்கப்பட்டு, பின்னர் முதலாவது படத்தில் இல்லாத ஆனால் இரண்டாவது படத்தில் இருக்கக்கூடிய வித்தியாசம் என்ன என்று கண்டு பிடிக்கும்படி அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். முக்கியமாக, இந்த ஞாபகத் திறன் விளையாட்டின்போது ஆய்வில் பங்குபெற்ற அனைவரின் மூளைச் செயல்பாடுகளும் ‘எலக்ட்ரோ என்செபாலோ கிராம்’ கருவி மூலமாக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஆய்வில் பங்குபெற்ற அனைவரும் ஆரோக்கியமாகவும் மற்றும் டிமென்சியா உள்ளிட்ட எந்தக் குறைபாடும் இல்லாதவர்களுமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் சில நிகழ்வுகளின் போது பங்கு பெற்றவர்களின் மூளையானது அறுவை சிகிச்சை இல்லாத மின் தூண்டுதலான ‘ட்ரான்ஸ்கிரேனியல் ஆல்டர்நேடிங் கரண்ட் ஸ்டிமுலேஷன்’ எனப்படும் ஒருவகையான மெல்லிய மின் தூண்டுதலுக்கு உட்படுத்தப்பட்டது.

முக்கியமாக, மண்டை ஓட்டின் மீது பொருத்தப்படும் மின் கம்பிகள் மூலமாக, ப்ரீபிராண்டல் மற்றும் டெம்போரல் மூளைப் பகுதிகளில் (prefrontal and temporal brain areas) சீரான ஒரு மின் தூண்டுதல் ஏற் படுத்தப்பட்டது. இதன் மூலமாக, ப்ரீபிராண்டல் மற்றும் டெம்போரல் மூளைப் பகுதி களுக்கு இடையில் ஏற்படும் தொடர்பானது செயல்படும் ஞாபகத் திறனுக்கு மிகவும் முக்கியம் என்று கருதப்படுகிறது.

இந்த ஆய்வானது டபுள் பிளைன்ட் (double-blind) எனும் வகையைச் சார்ந்தது. அதாவது, இந்த ஆய்வில் பங்குபெறும் மக்கள் எப்போது மூளைத் தூண்டுதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது பரிசோதனை செய்யும் விஞ்ஞானி களுக்கும் தெரியாது, பரிசோதனைக்கு உள்ளாகும் மக்களுக்கும் தெரியாது. இதுவே டபுள் பிளைன்ட் ஆய்வு முறை எனப்படுகிறது.

இந்த பரிசோதனைக்கு முன்னர் ஞாபகத் திறன் தேர்வுகளில் முதியவர்கள் எண்பது விழுக்காட்டுக்கும் குறைவான மதிப்பெண்ணும், இளைஞர்கள் 80 முதல் 100 சதவீத மதிப்பெண்ணும் பெற்றனர். ஆனால் மிகவும் ஆச்சரியப்படும் விதமாக, மின் தூண்டு தலுக்கு பின்னர் முதியவர்களும் இளைஞர்களுக்கு நிகராக 80 முதல் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று அசத்தினர்.

முக்கியமாக, மின் தூண்டுதல் மேற்கொள்ளப்பட்ட 12 நிமிடங்களில் ஏற்பட்ட இந்த மாற்றம், குறைவான செயல்படும் ஞாபகத் திறன் கொண்ட இளைஞர்கள் மீதான ஆய்விலும் மீண்டும் நிரூபிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த மின் தூண்டுதல் பலனளிப்பதற்கு காரணம், ஞாபகத்திறனுக்கு அடிப்படையான ப்ரீபிராண்டல் கார்டெக்ஸ் மற்றும் டெம்போரல் லோப் ஆகிய மூளைப் பகுதிகளுக்கு இடையில் ஒரு தொடர்பானது மின் தூண்டுதல் மூலமாக ஏற்படுத்தப்படுகிறது என்பதே என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி ரெய்ன்ஹார்ட்.

மின் தூண்டுதல் மூலமாக ப்ரீபிராண்டல் கார்டெக்ஸ் மற்றும் டெம்போரல் லோப் ஆகிய மூளைப் பகுதிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்றும், அதன் மூலமாக டிமென்ஷியா போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு ஞாபகத் திறனை வெகுவாக இழந்துபோகும் முதியவர்கள் மீண்டும் குணமடையலாம் என்றும் கூறுகிறார் ரெய்ன்ஹார்ட்.

இந்த மெல்லிய மின் தூண்டுதல் மூலமாக, ப்ரீபிராண்டல் கார்டெக்ஸ் மற்றும் டெம்போரல் லோப் ஆகிய மூளைப்பகுதி களுக்கு இடையில் ஏற்படும் அதீதமான தொடர்பு காரணமாக அதீதமான மூளைச்செயல்பாடு ஏற்பட்டு அதன் விளைவாக பார்கின்சன்ஸ் மற்றும் எபிலெப்சி உள்ளிட்ட மூளைக்குறைபாடுகளால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் கூறுகிறார் நரம்பியல் விஞ்ஞானி ராபர்ட் ரெய்ன்ஹார்ட்.

Next Story