வாக்காளர்களிடம் மனமாற்றம் தேவை...!


வாக்காளர்களிடம் மனமாற்றம் தேவை...!
x
தினத்தந்தி 16 April 2019 4:38 AM GMT (Updated: 16 April 2019 4:38 AM GMT)

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நாம் வாக்களிக்கும் தினம் ஏப்ரல் 18-ந் தேதி மிக அருகில் வந்து விட்டது.

வாக்களிக்கும் தினம் ஏப்ரல் 18-ந் தேதி மிக அருகில் வந்து விட்டது. இது ஒரு விழிப்புணர்வு நாள். நாம் பல உரிமைகளை பெறுவதற்கு மணிக்கணக்கில், நாள் கணக்கில் காத்திருக்கிறோம். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், நிலப்பட்டா போன்ற பலவற்றை பெறுவதற்கு நடையாய் நடக்கிறோம். ஆனால் நம்மை அடுத்த 5 வருடங்களுக்கு ஆளப்போகும் அரசை தேர்ந்தெடுப்பதற்கு மிகவும் சுணக்கம் காட்டுகிறோம். ஓட்டுரிமை பெற்ற அனைவருக்கும் தங்களை ஆளப்போகும் அரசை பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும்.

ஜனநாயகத்தில் நேரடியாக ஓட்டு போட்டு ஆளப்போகும் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை நம் கையில் இருக்கிறது. தேர்தல் களத்தில் போட்டிபோடும் கட்சிகளை பற்றி நாம் அறிவோம். ஆனால் வேட்பாளர்கள் பற்றிய அறிமுகம் வாக்காளர்கள் பலருக்கு இல்லாமல் இருக்கலாம். போட்டியிடும் வேட்பாளர் தங்களை நேரடியாகவோ அல்லது பொது கூட்டங்கள் மூலமாகவோ அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். இதுபோக, பத்திரிகைகள் பலவும் தேர்தல் கள நிலைமையை போட்டி போட்டுக்கொண்டு மக்கள் முன் வைக்கிறார்கள். எனவே வாக்காளர்கள்தான் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றிய விவரங்களை சேகரித்து தங்களுக்கு விருப்பம் உள்ள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்கள் களம் சூடு பிடித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அனைத்து வாக்காளர்களும் சுறுசுறுப்பாக தேர்தல் நாளை எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்களா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. சில வாக்காளர்கள் பணி நிமித்தமாக வேறு ஊரில் வேறு மாநிலத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பயணம் மேற்கொண்டு தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் தேர்தலில் பங்கேற்ற மன நிறைவு ஏற்படும். இல்லையென்றால் மற்ற வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களையும் அரசையும்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது, தான் சம்பாதிக்காமல் மற்றவர்கள் உழைப்பில் வாழ்வதற்கு ஒப்பானது.

இரண்டாவது, யார் ஆண்டால் எனக்கென்ன என்ற வகை வேட்பாளர்கள். இவர்கள் மன வெறுப்பு ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை சார்ந்தே இருக்கும். சாலை வசதி செய்யவில்லை, குடிநீர் வசதி செய்யவில்லை அல்லது அரசே சரியில்லை போன்ற வாதங்களை முன் வைப்பார்கள்.

வாக்குரிமையை தவற விடுவது, பஸ், ரெயில் இவற்றை தவறவிட்டு முக்கியமான விழாக்கள், நிகழ்வுகள், வேலை வாய்ப்பு நேர்காணல் போன்றவற்றை தவறவிட்டு பின்னாளில் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படும் செயலுக்கு ஒப்பாகும். இந்த வாக்காளர்கள்தான் தங்கள் மன நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இதுதான் தருணம். குறைகளை தீர்ப்பதற்கு நான் முடிவு செய்கிறேன் என் வேட்பாளரை என்று வாக்குச்சாவடிக்கு விரைய வேண்டும். ஜனநாயகத்தில் உங்கள் முடிவு ஒரு மைல்கல்லாக அமையும்.

மூன்றாவது வகை வாக்காளர்கள் வினோதமானவர்கள். இவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வார்கள். களத்தில் உள்ள வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்று நோட்டா என்ற யாருக்கும் இல்லாத ஒரு வாக்கை போட்டுவிட்டு மனநிறைவுடன் வருவார்கள். நோட்டாவுக்கு ஓட்டு போட்டால் ஆளப்போகும் அரசாங்கத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளாக அமரப்போகும் வேட்பாளர்களையும் தேர்ந்தெடுக்கவில்லை. நாம் கோவிலுக்கோ, தேவாலயத்துக்கோ அல்லது மசூதிக்கோ செல்லும் போது சென்ற நோக்கத்தை முழுவதுமாக நிறைவேற்றுகிறோம். உள்ளே சென்று இறைவனிடம் மனக்குறையை சொல்லி வேண்டுகிறோம். எனக்கு எந்த கடவுளையும் பிடிக்கவில்லை என்று அங்கு உள்ள வேறு பொருட்களிடம் முறையிடுகிறோமா? கடமையை செய்யும் போது நிறைவாக செய்ய வேண்டும். இந்த வகை வாக்காளர்கள் தங்கள் மன நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வாக்களிக்கும் உரிமையை முறையாக பயன்படுத்துங்கள். களத்தில் இருக்கும் வேட்பாளர்களில் ஒருவர் தான் வெற்றி பெற போகிறார். வெற்றி பெற்றவர் நீங்கள் வாக்களித்த வேட்பாளராக இருக்கும் போது உங்களுக்கும் ஒரு மன நிறைவு ஏற்படும். அப்படி இல்லாத பட்சத்தில், நீங்கள் வாக்களித்த வேட்பாளர் தோற்று போனால், அடுத்த முறை அவருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். எனவே உங்கள் வாக்கை வீணாக்காதீர்கள்.

வாக்காளர்களை மேல்தட்டு, நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு மக்கள் என்று வகைப்படுத்தினால், நடந்த பல தேர்தல்களின் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் வாக்களிக்கும் விதம் புரியும். இங்கு நான் கட்சி சார்ந்த தொண்டர்களை குறிப்பிடவில்லை. மேல்தட்டு மக்கள் தங்கள் ஓட்டு போடும் கட்சியையும், வேட்பாளரையும் பற்றி முடிவு செய்து வைத்திருப்பார்கள். தங்கள் முடிவில் மாற மாட்டார்கள். ஏழை மக்களும் நிச்சயமாக தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு ஓட்டு போடுவார்கள். ஆனால் இவர்களின் நிலைப்பாடு கள நிலமையைப் பொறுத்து மாறும். இந்த இரண்டுக்கும் இடையே மனதை அலைய விடுபவர்கள் நடுத்தர வர்க்க மக்களே. மேலே சொன்ன மூன்று வகையான மன நிலையை கொண்டவர்கள் இந்த நடுத்தர மக்களே. இந்த மன நிலைமையை புரிந்து கொண்ட வேட்பாளர்களும் பெரிதும் கவனத்தில் கொள்வது அடித்தட்டு மக்களின் வாக்குகளையே. எனவே வேட்பாளர்கள் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தவறாமல் செல்வார்கள், மக்களை சந்திப்பார்கள். பணக்காரர்கள் பற்றிய அவர்களது மன நிலையை அறிந்து வைத்திருப்பார்கள். நடுத்தர மக்களை பெரும்பாலும் பொதுக்கூட்டம் அல்லது வாகனங்களில் நின்று பரப்புரை மூலமாகவே சந்திப்பார்கள். பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் எந்த வேட்பாளரையும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் வாக்குச்சாவடிக்கு செல்வார்கள். இவர்களுக்கு வேட்பாளர்கள் பற்றிய அறிமுகம் எல்லாம் பத்திரிக்கை, தொலைக்காட்சி வாயிலாகத்தான் நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல் 11-ந் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்த 91 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் திரிபுராவில் 81.8 சதவீதம் வாக்குகளும் மேற்கு வங்காளத்தில் 81 சதவீதம் வாக்குகளும் பதிவானது நமக்கு மன நிறைவை தருகிறது. தமிழ்நாடு அந்த அளவை விட வாக்குப்பதிவை அதிகப்படுத்திக்காட்ட வேண்டும். அங்கு சாத்தியம் என்றால் இங்கும் சாத்தியமே.

நாம் அனைவரும் ஏப்ரல் 18-ந் தேதி வாக்குச்சாவடிக்கு செல்வோம். நமக்கு பிடித்த ஒரு வேட்பாளருக்கு ஓட்டளிப்போம். ஜனநாயக கடமையை நிறைவேற்றிய பெருமை அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை நம் மனதில் இருக்கும். வாக்குரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற மனமாற்றம் அனைத்து வாக்காளர்களிடையே வர வேண்டும். அதன் தொடக்கம் இந்த தேர்தலாக இருக்கட்டும்.

எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி


Next Story