முதல் நாளில் பங்கு விலை 9% உயர்வு


முதல் நாளில் பங்கு விலை 9% உயர்வு
x
தினத்தந்தி 16 April 2019 5:07 AM GMT (Updated: 16 April 2019 5:07 AM GMT)

பங்குச்சந்தை பட்டியலில் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் முதல் நாளில் பங்கு விலை 9% உயர்வு

மும்பை

மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் புதிய பங்குகள் நேற்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் இப்பங்கு விலை 9 சதவீதம் உயர்ந்தது.

விரிவாக்க நடவடிக்கை

மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டும் வகையில் பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. இந்த வெளியீடு இம்மாதம் 3-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது.

ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.877-880-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. நிறுவனப் பணியாளர்களுக்காக 3 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டன. இறுதி நாளான 5-ந் தேதி அன்று இந்நிறுவனத்தின் 89,98,678 பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது. அதே சமயம் 76,61,802 பங்குகள் மட்டுமே சந்தைக்கு வந்தன. எனவே அந்த வெளியீடு வெற்றி பெற்றது. அந்த நிலையில் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனம் பங்கின் அதிகபட்ச விலையில் (ரூ.880) ரூ.1,204 திரட்டிக் கொண்டது.

இந்நிறுவனத்தின் புதிய பங்குகள் நேற்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. மும்பை சந்தையில் பட்டியலிடப்பட்டபோது இப்பங்கு ரூ.960-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.981.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.934.80-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.959.55-ல் நிலைகொண்டது. இது, வெளியீட்டு விலையைக் காட்டிலும் (ரூ.880) 9.03 சதவீதம் ஏற்றமாகும்.

தேசிய பங்குச்சந்தையில் தொடக்கத்தில் இந்தப் பங்கு ரூ.958-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.982.70-க்கும், குறைந்தபட்சமாக ரூ.935-க்கும் சென்றது. இறுதியில் ரூ.955.20-க்கு விலைபோனது. இது, வெளியீட்டு விலையை விட 8.55 சதவீதம் அதிகமாகும்.

செயல்பாட்டு வருவாய்

மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 2015-16-ஆம் நிதி ஆண்டில் இருந்து 16 சதவீத சராசரி வளர்ச்சி கண்டு 2017-18-ஆம் நிதி ஆண்டில் ரூ.645 கோடியை எட்டி உள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் லாபம் சராசரியாக 16 சதவீதம் உயர்ந்து ரூ.110 கோடியாக அதிகரித்து இருக்கிறது.


Next Story