கார்களைக் கண்டறிய உதவும் டெலிமேடிக் தொழில்நுட்பம்


கார்களைக் கண்டறிய உதவும் டெலிமேடிக் தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 17 April 2019 11:51 AM GMT (Updated: 17 April 2019 11:51 AM GMT)

கார்கள் மட்டுமின்றி சரக்கு லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பம்தான் டெலிமேடிக். அதாவது டெலிகம்யூனிகேஷன் மற்றும் இன்பர்மேடிக்ஸ் இரண்டும் இணைந்த தொழில்நுட்பம்தான் டெலிமேடிக்ஸ்.

தொலைத் தொடர்புத் துறையான வை-பை, ஜி.பி.எஸ். மூலம் வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறிய உதவுகிறது.

அதேபோல வாகன செயல்பாடு, என்ஜின் இயக்கம், எவ்வளவு வேகத்தில் செல்கிறது, பேட்டரியின் ஆயுள், டிரைவர் எவ்விதம் வாகனத்தை இயக்குகிறார் என்பதை தகவலாக பதிவு செய்வதே இன்பர்மேடிக்ஸ். இப்போது இந்த தொழில்நுட்பம் மிகவும் அவசியமானதாகிறது.

வெளிநாடுகளில் இந்த நுட்பம் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அங்குள்ள காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்துடன் இந்த டெலிமேடிக் கருவியையும் அளிக்கிறது. இதை காரில் பொருத்தி செயல்படுத்த வேண்டும்.

இதன் மூலம் வாடிக்கையாளரின் வாகனம் திருடு போனால் அது எங்கிருக்கிறது என்பதை காப்பீட்டு நிறுவனங்களே அதில் உள்ள ஜி.பி.எஸ். டிராக்கிங் கருவி மூலம் கண்டுபிடித்துவிடும். அது எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதையும் துல்லியமாக கணிக்க இந்த டெலிமேடிக் கருவி உதவுகிறது. என்ஜின் இயக்கத்திலிருந்து அதை நிறுத்துவது வரை அதன் இருப்பிடத்தை கண்டறிய இது உதவும்.

1960-ம் ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் இத்தகைய டெலிமேடிக் கருவிகளை தனது ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியது. 1980-களில் இது சிவிலியன் பயன்பாடுகளுக்கு அறிமுகமானது. சாலை பாதுகாப்பு, வாகன செயல்பாடு உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்தபிறகு வாகனங்களில் இவற்றை பயன்படுத்துவது 2000-ம் ஆண்டுகளில் அதிகரித்தது. 2010-ம் ஆண்டுகளில் ஸ்மார்ட்போனுடன் இணைந்த செயலிகள் (ஆப்) வந்த பிறகு அவற்றுடன் இணைத்து செயல்படுத்துவது அதிகரித்தது.

டெலிமேடிக்ஸ் கருவி என்பது உங்கள் காரில் மிகவும் நுட்பம் வாய்ந்த கம்ப்யூட்டர் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கார் நியூட்டரில் இருப்பதையும், வேகமாக செல்வதையும், திடீரென பிரேக் போடுவதையும் பதிவு செய்யும். அதேபோல என்ஜினின் செயல்பாடு, கார் டயரின் காற்றழுத்தம் உள்ளிட்டவற்றையும் அலசி ஆராய்ந்துவிடும். எப்பகுதியில் பழுது உள்ளது என்ற விவரத்தையும் தெரிவிக்கும்.

இதனால் வாகனத்தின் செயல்திறன் மேம்படும். டிரைவர் வாகனத்தை இயக்கும் நிலையில் மேம்பாடு கிடைக்கும். எரிபொருள் மிச்சமாகும். வாகனத்தின் நிர்வாக செலவும் குறையும். திருடு போனாலும் கண்டுபிடிக்க முடியும்.

டெலிமேடிக் கருவியுடன் இணைக்கப்படும் பாகங்கள்: ஜி.பி.எஸ். ரிசீவர், என்ஜினின் செயல்பாடு, சிம் கார்டு, ஆக்ஸிலரோமீட்டர், பஸ்ஸர் உள்ளிட்டவை இணைக்கப்படுகின்றன.

பெருமளவிலான தகவல்கள் டெமிமேடிக் கருவிக்கு வரும். இதில் மறுமுனையில் உள்ள ஹார்டுவேர் அதாவது சென்சார் அனைத்தையும் தகவல் பதிவுகளாக மாற்றி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அளிக்கும்.

கூரியர் நிறுவனங்கள், அதிக அளவில் விற்பனையாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், உணவுப் பொருள் டெலிவரி செய்யும் நிறுவனங்கள், எண்ணெய், எரிபொருள் எடுத்துச் செல்லும் நிறுவனங்கள், போலீஸ் மற்றும் அவசரகால வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த கருவி மிகவும் உபயோகமானதாயிருக்கும்.

Next Story