கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் 11,500 கோடி டாலராக உயர்ந்து இருக்கும்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்


கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் 11,500 கோடி டாலராக உயர்ந்து இருக்கும்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
x
தினத்தந்தி 19 April 2019 12:24 PM GMT (Updated: 19 April 2019 12:24 PM GMT)

நம் நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், இதுவரை இல்லாத அளவிற்கு, 11,500 கோடி டாலராக உயர்ந்து இருக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எண்ணெய் பயன்பாடு

நாட்டில் கச்சா எண்ணெய் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே அதற்கான தேவையும் மிக அதிகமாக இருக்கிறது. எனவே நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. எனினும், 2022-ஆம் ஆண்டிற்குள் நமது மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கை 67 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நம் நாட்டில், ஜனவரி வரையிலான 10 மாதங்களில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தேவை 83.7 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இதனால் அடுத்த 3 ஆண்டுகளில் இறக்குமதி தேவையை 67 சதவீதமாக குறைக்க நினைப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், 2014-15-ஆம் ஆண்டில் இறக்குமதி எண்ணெய்க்கான தேவை 78.3 சதவீத அளவிற்கே இருந்தது. 2015-16-ஆம் ஆண்டில் அது 80.6 சதவீதமாக உயர்ந்தது. 2016-17-ல் 81.7 சதவீதமாக மேலும் அதிகரித்தது.

ரூபாயின் வெளிமதிப்பு

கடந்த நிதி ஆண்டில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பும் கடும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வந்தது. எனவே அந்த ஆண்டில் எண்ணெய் இறக்குமதி செலவினம் கடுமையாக உயர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் ஆய்வுப் பிரிவின் மதிப்பீடுகளின்படி (ஜனவரி-மார்ச்) ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் விலை உயர்ந்தால் நமது இறக்குமதி செலவினம் ரூ.3,029 கோடி அதிகரிக்கும். இதே போன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய் குறையும்போதும் இறக்குமதி செலவினம் ரூ.2,473 கோடி உயரும்.

2016-17-ஆம் நிதி ஆண்டில், நம் நாடு 7,020 கோடி டாலர் செலவில் (சுமார் ரூ.4.70 லட்சம் கோடி) 21.39 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் 8,800 கோடி டாலருக்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) இது 13,000 கோடி டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

30 சதவீதம் அதிகம்

இந்நிலையில், அந்த ஆண்டில் எண்ணெய் இறக்குமதி செலவினம், வரலாறு காணாத அளவிற்கு, 11,500 கோடி டாலரை எட்டி இருக்கும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 30 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

உற்பத்தி குறைந்தது

சென்ற நிதி ஆண்டில், பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில் நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தி 3.14 கோடி டன்னாக இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 4 சதவீதம் குறைவாகும். இதே காலத்தில் எண்ணெய் இறக்குமதி 2.6 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.


Next Story