மின்வாக்கு முறையே முறைகேடு நீங்கிய தேர்தல் முறை...!


மின்வாக்கு முறையே முறைகேடு நீங்கிய தேர்தல் முறை...!
x
தினத்தந்தி 20 April 2019 9:32 AM GMT (Updated: 20 April 2019 9:32 AM GMT)

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு சில அசம்பாவிதங்கள் தவிர பெரிய அளவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.

மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 72 சதவீதம் வாக்குகள் பதிவாயின. 2014 நாடாளுமன்ற தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

மத்திய சென்னை தொகுதியில் மட்டும் குறைவான வாக்குப்பதிவு இருந்தது. 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை இருந்ததே அதற்கு காரணம். பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்கள் இங்கே இல்லாததால் ஓட்டுப்போட முடியவில்லை.

சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் பூத் சிலிப் இல்லாததால் பலரும் ஓட்டுப்போட முடியவில்லை என்றும், அதனால் பலர் வாக்கு செலுத்தாமலேயே வீட்டுக்கு திரும்பி விட்டனர் என்றும் தகவல் வந்துள்ளது. ஓட்டுப்போடுவதற்கு ‘பூத்’ சிலிப் கட்டாயம் இல்லை. தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை காட்டி ஓட்டுப் போட்டுக்கொள்ளலாம். இருந்தாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஓட்டு சதவீதம் நன்றாக வந்துள்ளது.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் முயற்சியில் வருமான வரித்துறை அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு பல கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட கட்சியினரை மட்டும்தான் குறிவைத்து இந்த சோதனை நடந்தது என்று கூறுவது தவறு. பணம் வினியோகம் செய்வதாக தகவல் கிடைத்ததும் வருமான வரித்துறை அதிகாரியும், தேர்தல் பறக்கும் படையினரும் சென்று சோதனை செய்தனர். இவர்கள்தான் பணம் வைத்து உள்ளனர் என்று சுலபமாக கண்டுபிடிக்க முடியாது. பணம் வைத்து இருப்பவர்கள் ஒரே இடத்தில் வைத்திருக்கமாட்டார்கள். அதை வினியோகம் செய்துவிடுவார்கள்.

வாக்குப்பதிவின் போது ஓட்டுப்பதிவு எந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டதாகவும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே ஓட்டு விழுந்ததாகவும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் சின்னத்தின் பட்டன் மாயமாகி இருந்ததாகவும் புகார்கள் வந்துள்ளன.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். அப்போது வேட்பாளர்களின் பூத் ஏஜெண்டுகளும் உடன் இருப்பார்கள். அப்போதே எந்திரத்தில் தவறு ஏற்பட்டால் அதை கண்டுபிடித்து விட முடியும். தவறு இருக்கும் பட்சத்தில் அந்த எந்திரத்தை அகற்றிவிட்டு வேறு எந்திரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் கமிஷன் ஒரு கட்சியின் பாவையாக செயல்படுகிறது என்பது தவறு. இந்திய அரசியலமைப்பு சட்டம் 324-ன்படி தேர்தல் கமிஷனுக்கு ஒரு குறிப்பிட்ட அதிகாரம் உண்டு. அதை மீறி அவர்கள் செயல்பட முடியாது. அப்படி தேர்தல் கமிஷன் விதிகளை மீறி செயல்படுகிறது என்று யாராவது கருதினால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.

சில பிரச்சினைகளில் தேர்தல் கமிஷன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி கேட்டு உள்ளது. இதன் மூலம் தேர்தல் கமிஷன் சில துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவின்போது கடும் வெயில் காரணமாகவும், வயோதிகம் காரணமாகவும் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்கள் பலர் மரணம் அடைந்துள்ளனர். அவர்கள் வசதிக்காக மாலை நேரம் ஓட்டுப்பதிவின் நேரத்தை அதிகரிக்க சாத்தியம் இல்லை. முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் ஓட்டுப்போட வசதியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதியோர், உடல் ஊனமுற்றோர் தரிசனம் செய்வதற்கு தனியாக வழி உள்ளதை போன்று, வாக்குச்சாவடியிலும் தனி வழி ஏற்படுத்திக் கொடுக்கலாம். அதற்கு மற்றவர்கள் ஒத்துழைத்து உதவி செய்ய வேண்டும். முதியோர் ஓட்டுப்போட வசதியாக வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி வசதிகளையும் அதிகப்படுத்த வேண்டும்.

சில இடங்களில் எந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில மணி நேரம் தாமதப்பட்டாலும், ஓட்டுப்பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணி வரை, வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் ஓட்டுப்போட அனுமதி வழங்கப்படுகிறது.

மின்வாக்கு முறையில் நம்பகத்தன்மை இல்லை. வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பலர் கூறுகின்றனர்.

கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டில் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை, வாக்குச்சீட்டு முறைதான் அமலில் இருந்தது. மின்னணு வாக்குப்பதிவு முறை வெற்றிகரமாக செயல்பட்டதால் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது.

வாக்குச்சீட்டு முறை பயன்பாட்டில் இருந்தபோது அதிக அளவிலான பேப்பர் தேவைப்பட்டது. வாக்களித்த பின்னர் பேப்பரை மடிக்கும் போது பிரச்சினைகள் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. மேலும் ஓட்டுகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்படும்.உதாரணமாக பீகாரில் ஓட்டுகளை எண்ணி முடிக்க 2 நாட்களும், ஒரு இரவும் ஆனது. இதனால் ஓட்டு எண்ணுபவர்கள் மிகவும் சோர்வடைந்து விடுவர். மேலும் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும் போது தேர்தல் அதிகாரி, பூத் ஏஜெண்டுகளை செல்வாக்கு மிக்கவர்கள் மிரட்டி முறைகேடான வழியில் ஈடுபட செய்வர். இதனால் கள்ள ஓட்டுகள் அதிகம் போடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு செய்வது குறைவு. ஒரு பட்டனை பயன்படுத்திய பிறகு 4 நிமிடங்கள் கழித்து தான் அந்த பட்டனை மீண்டும் இயக்க முடியும். தேர்தல் வாக்குச்சீட்டு முறை நடைமுறைக்கு சாத்தியமாகாது. மின்வாக்கு முறையே முறைகேடு நீங்கிய முறையான தேர்தல் முறையாகும்.

வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட போதே அந்தப் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்று இருக்கிறதா? என்று சரிபார்த்து இருக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு சென்ற பின் தன் பெயர் இல்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல.

வருகிற மே 19-ந் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலுடன் சேர்த்து வேலூர் நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தல் நடத்தப்படுமா? என்பது குறித்து தேர்தல் கமிஷன் தான் முடிவெடுக்க வேண்டும்.

இந்த தேர்தலில் 18 வயது நிரம்பிய இளைஞர்கள் ஆர்வமுடன் முதல் முறையாக தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் சாதி, மத, மொழிகளை கடந்து கோடிக்கணக்கான வாக்காளர்கள் நாட்டுப்பற்றுடன் வாக்களித்து இருக்கிறார்கள். இது இந்திய ஜனநாயக தேர்தல் திருவிழா என்று சொன்னால் அது முற்றிலும் உண்மை.

- நரேஷ்குப்தா, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி

Next Story