தேர்வு முடிவல்ல ஆரம்பம்...!


தேர்வு முடிவல்ல ஆரம்பம்...!
x
தினத்தந்தி 20 April 2019 9:55 AM GMT (Updated: 20 April 2019 9:55 AM GMT)

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவின் போது வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுவதையும், தோல்வியடைந்தவர்கள் மனச்சோர்வுடன் முடங்கிக்கிடப்பதையும் அக்கம் பக்கத்தில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

தேர்வு முடிவு வருகிறது என்றாலே மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவோமா? அதிக மதிப்பெண் கிடைக்குமா? நினைத்த உயர்கல்வி படிப்பில் சேர முடியுமா? என்று மாணவர்கள் எண்ணிக் கொண்டு இருப்பர். பெற்றோருக்கும் இதே தவிப்புதான் இருக்கும். வெற்றி பெற்றவர்கள் கொண்டாடட்டும் தவறில்லை. ஆனால் தோல்வியடைந்தவர்கள் முடங்கிக்கிடக்கத்தான் வேண்டுமா? ஒரு தோல்வி மனரீதியாக ஒருவனுக்கு ஏற்படுத்தும் அழுத்தத்தைவிட புறச்சூழலான பெற்றோர் மற்றும் நண்பர்களால் ஏற்படும் அழுத்தமே கூடுதல் சோர்வை அளிக்கிறது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.

சிறு குழந்தைகளையே எடுத்துக்கொள்ளுங்கள் அது கீழே விழுந்துவிட்டால் நாம் அதைக் காணாத மாதிரி இருந்துவிட்டால் அது தான் விழுந்தது குறித்து அலட்டிக் கொள்ளாமல் எழுந்து போய்க் கொண்டே இருக்கும். நாம் அதைப் பெரிதுபடுத்தி ஐயோ..செல்லம் விழுந்துட்டியா? என்று கொஞ்ச ஆரம்பித்தால் அது தனக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாய் நினைத்து வீறிட்டு அழத் தொடங்கும். சிறுகுழந்தை கொஞ்சும்போதே அழுகிறதென்றால், ஓரளவு உலகம் தெரிந்த மாணவனை அவனது தேர்வுத் தோல்விக்காக கடும் சொல் கூறினால், அவன் எந்த மாதிரி வருத்தமுறுவான்? தான் வாழத் தகுதியற்றவன் என்கிற விபரீத முடிவுகளுக்கும் அவன் செல்லக்கூடுமே. தேர்வில் தோல்வி தரும் வலியைவிட பெற்றோர்கள் திட்டுவது, குறை கூறுவது, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது ஆகியவையே இன்றைய பிள்ளைகளை பெரும் மனவருத்தம் கொள்ள வைக்கிறது.

தேர்வு முடிவு என்பது எந்த விதத்திலும் ஒரு மனிதனின் வெற்றி, தோல்வியை முடிவு செய்வது இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் வெற்றி பெற்ற பெரும்பான்மையான வெற்றியாளர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்தவர்கள்தான். தோல்வியை கூட அவர்களால் ஒரு புதிய வெற்றியாக மாற்ற முடிந்தது. அப்படி ஒரு புதிய வெற்றியை பெற்றவர்தான் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லூயிஸ் பிரெய்லி. ஐயோ கடவுளே, என்ற அலறல் சத்தம் கேட்டு செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தந்தை ஓடி வந்தார். மகன் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பதறினார், துடித்தார். சிறுவன் விளையாட்டாக செருப்பு தைத்த அந்த ஊசியால் கண்ணைக் குத்திக்கொண்டான்.

குத்துண்ட கண்ணுக்குச் சிகிச்சை மேற்கொண்ட போது துரதிருஷ்டவசமாக மறுக்கண்ணும் பாதிக்கப்பட்டு, இரு கண்ணுமே பார்வை இழந்தார் பரிதாபத்திற்குரிய அந்த சிறுவன். ஆனால் பிற்காலத்தில் பார்வையிழந்தோரின் கல்விக்கண் திறந்த கண்ணாளன் ஆனார். பார்வையிழந்த பலர் கைகளால் தடவிப் படிக்கும் பிரெய்லி முறையை கண்டுபிடித்தார். இந்த புதிய மொழியின் மூலம் பார்வையிழந்த பலர் பட்டதாரிகளாகி வேலைவாய்ப்புகளையும் பெற்றுள்ளார்கள். லூயிஸ் பிரெய்லி கண்களில் பார்வை போய்விட்டதே என்று துவண்டு போயிருந்தால் இப்படியொரு கண்டுபிடிப்பு நமக்கு கிடைத்திருக்குமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.

பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா? மனஉறுதியுடன் ஒரு சில வாரங்களில் வரும் சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். எத்தனையோ மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் சிறப்பு துணைத்தேர்வு எழுதி பொறியியல், கலை அறிவியல் மற்றும் இதர படிப்புகளில் சேர்ந்து உயர்கல்வியை சிறப்பாக படித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்கக்கூடிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அது போன்ற பெற்றோர் அமைந்துவிட்டால் எந்தத் தோல்விக்கும் மாணவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.

பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே தங்களது குழந்தைகளுக்கு தோல்வியை தாங்கும் சக்தியை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தோல்விக்கும் பிறகு ஒரு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்குள் வளர்க்க வேண்டும். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது, கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்” என்கிறார். அந்த நம்பிக்கை விதைகளை மாணவர்கள் தங்கள் மனதில் விதைத்துக் கொள்ள வேண்டும்.

21 வயது இளைஞர் ஒருவர் கல்லூரிக்கு செல்லும் போது ஷூ லேஸ் கட்டுவதற்கு சிரமப்பட்டார், அன்றாடம் செய்யக்கூடிய சாதாரண வேலைக்கு எல்லாம் தனது மகன் சிரமப்படுவதை கவனித்த அவரது தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு சொன்னார், உங்களது மகனுக்கு நரம்பு குறைபாடு தொடர்பான ஒரு கொடிய நோய் தாக்கி உள்ளது. உடல் தசைகளை பாதிக்கும் இந்த நோய் உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களையும் பாதிக்கும் இரண்டே வருடங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்தார்.

அப்போது அதை கேட்டு கொண்டிருந்த அந்த இளைஞர் சிறிதும் அச்சமின்றி இந்த நோய் எனது உடலை பாதிக்கும், ஆனால் என்னுடைய மூளையை பாதிக்குமா? என்று கேட்டார். அதற்கு மருத்துவர் மூளையை பாதிக்காது என்றார். உடனே அந்த இளைஞர் சொன்னார் என்னுடைய இயற்பியல் ஆராய்ச்சியை என் உடலா செய்யப்போகிறது, எனது மூளைதான் ஆராய்ச்சிக்கு உதவப்போகிறது என்றார் தன்னம்பிக்கையுடன். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்க வேண்டிய சூழல். கழுத்துக்கு கீழே அத்தனை உறுப்புகளும் செயலிழந்து இரண்டு விரல்கள் மட்டும் செயல்பட்டு கொண்டு இருந்தது. அப்போதும் தனது தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. இரண்டு விரல்கள் மூலமாக கணினி உதவியுடன் தனது கருத்துகளை பரிமாறிக் கொண்டார். தனது நவீன அறிவியல் பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுகளை சுவாரசியமான புத்தகங்களாக வெளியிட்டார். மக்களிடம் அவற்றுக்கு நல்ல வரவேற்பு.

இரண்டே வருடத்தில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட அந்த மனிதர் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் மரணத்தை பற்றி பயம் கொள்ளாமல் தனது மனஉறுதியின் மேல் நம்பிக்கை கொண்டிருந்ததே. அவர் தான் நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங்ஸ்.

காலத்தை வென்ற மாமனிதர் ஸ்டீபன் ஹக்கிங்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், வாழப்பழகு, போராடு, தோல்விகளை தூக்கி எறி, தொடர்ந்து முயற்சி செய், வெற்றியை நோக்கிப் புறப்படு என்பது தான்.

தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்களை சுற்றி உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய உற்சாகப்படுத்தக்கூடிய நேர்மறையாளர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதுமே எதிர்மறையாளர்களை தவிர்த்துவிடுங்கள்.

பெற்றோர்களே உங்கள் பிள்ளை மீது நீங்கள் நம்பிக்கை இழக்காதீர்கள். அவர்களது ஆர்வத்தையும் விருப்பத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு விருப்பப்பட்ட துறைகளில் அவர்களை ஈடுபட உதவுங்கள். தேர்வு தோல்விகள், குறைந்த மதிப்பெண்கள் என்பவை தற்காலிகம் தான். அவற்றை உளவியல் ரீதியாக உங்கள் பிள்ளைகள் கடந்து வர நீங்கள் உதவியாக இருங்கள். தேர்வு முடிவு ஒரு முடிவல்ல, அது ஒரு ஆரம்பமே என்பதை மட்டும் புரிந்து கொண்டால், அதற்கு பின்னான நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பானதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை. 

- முனைவர் அ.முகமது அப்துல்காதர், முதல்வர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரி, மதுராந்தகம்.

Next Story