சிறப்புக் கட்டுரைகள்

கருந்துளை படம்: பின்னணியில் செயல்பட்ட பெண்மணி + "||" + Woman in the background

கருந்துளை படம்: பின்னணியில் செயல்பட்ட பெண்மணி

கருந்துளை படம்: பின்னணியில் செயல்பட்ட பெண்மணி
வரலாற்று நிகழ்வாக கருதப்படும், கருந்துளையை முதல்முறையாகப் படம்பிடித்ததில் ஒரு பெண் முக்கியப் பங்காற்றி இருக்கிறார்.
கேட்டி பவுமேன் என்ற 29 வயதுப் பெண், இதற்கான கணினி செயல் நிரலியை உருவாக்க பிரதான உதவி செய்திருக்கிறார். அதற்கான அணிக்கு, கேட்டி தலைமை தாங்கியிருக்கிறார்.

பூமியில் இருந்து 500 மில்லியன் டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூசு மற்றும் வாயுவின் ஒளிவட்டத்தை காட்டும் வியக்கத்தக்க கருந்துளை புகைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஆனால் இது சாத்தியம் ஆகாது என்று முன்னர் நம்பப்பட்டதாக பவுமேன் கூறுகிறார்.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பயின்றபோது இதற்கான செயல் நிரலியை கேட்டி உருவாக்கத் தொடங்கினார்.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அறிவியல் பிரிவைச் சேர்ந்த குழுவினர், செயற்கை நுண்ணறிவு ஆய்வகம், ஹார்வர்டு -ஸ்மித்கோசியன் வானியற்பியல் மையம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய ஹேஸ்டாக் வான் கண்காணிப்பு நிலையம் போன்ற பலரின் உதவியோடு இந்தச் செயல்திட்டத்தை கேட்டி மேற்கொண்டார்.

அவரது அணி உருவாக்கிய செயல் நிரலியால் ஒன்றோடு ஒன்று தொடர்பு ஏற்படுத்தப்பட்ட ஈவன்ட் ஹாரிசான் தொலைநோக்கியால் கருந்துளை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகழ்மிக்க புகைப்படம் வெளியான சில மணிநேரங்களில், டுவிட்டரில் பெயர் டிரெண்ட் ஆனதால் டாக்டர் கேட்டி பவுமேன் சர்வதேச அளவில் பேசப்படும் நபர் ஆனார்.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஸ்மித்கோசியன் வானியற்பியல் மையத்தாலும் கேட்டி பாராட்டப்படுகிறார்.

‘மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டதாரி மாணவி கேட்டி பவுமேன் கருந்துளையின் முதலாவது புகைப்படத்தை உருவாக்குவதற்கான புதிய செயல் நிரலியை உருவாக்குவதற்குத் தலைமை தாங்கினார். இன்று, இந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது’ என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் அதன் செயற்கை நுண்ணறிவு ஆய்வகமும் தெரிவித்துள்ளன.

இதற்கு உதவிய குழுவினருக்கும் இதற்கான பெருமையில் பங்கு இருக்கிறது என்று கலிபோர்னிய தொழில்நுட்ப நிறுவனத்தின் கணக்கீடு மற்றும் கணிதவியல் துணைப் பேராசிரியராக தற்போது பணியாற்றிவரும் கேட்டி சொல்கிறார்.

அண்டார்டிக்கா முதல் சிலி நாடு வரை வேறுபட்ட இடங்களில் இருக்கும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை உருவாக்குவதில் 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

நாங்கள் யாரும் தனியாக இதைச் செய்திருக்க முடியாது என்று கூறும் கேட்டி, பல்வேறுபட்ட பின்னணிகளில் இருந்து வந்த வித்தியாசமான விஞ்ஞானிகள் பலரால் இது சாத்தியமாகி உள்ளது என்கிறார்.

கருந்துளையை நமது கண்களால் நேரடியாகப் பார்க்க முடியாது. பூமியைவிட முப்பது லட்சம் மடங்கு பெரிதான கருந்துளை, 4 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மேஸ்சியர் 87 கேலக்சியில் 10 நாட்களாக இது ‘ஸ்கேன்’ செய்யப்பட்டுள்ளது.

‘ஒட்டுமொத்த சூரிய அமைப்பைவிடப் பெரியது’ என்று இந்தப் பரிசோதனையை முன்மொழிந்த நெதர்லாந்தின் ராட்பவுட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெய்னோ பால்கே கூறுகிறார்.

கேட்டி பவுமேனும் மற்றவர்களும் உருவாக்கிய கணினி நிரல் தொடர்கள் (அல்காரிதம்) தொலைநோக்கித் தரவுகளை உருமாற்றி, உலக ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்ட வரலாற்று புகழ்மிக்க புகைப்படத்தை உருவாக்கி உள்ளன.

கணிதவியல் மற்றும் கணினி அறிவியலில், அல்காரிதம் என்பது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் பயன்படும் ஒரு செயல்முறை அல்லது விதிகளின் தொகுப்பு ஆகும்.

ஒரு தொலைநோக்கியால் மட்டும் தனியாக கருந்துளையைப் படம்பிடித்துவிட முடியாது. எனவே, எட்டு தொலைநோக்கிகளின் வலையமைப்பு உருவாக்கப்பட்டது.

அவை வழங்கிய தரவுகள் நூற்றுக்கணக்கான ஹார்டு டிரைவ்களில் சேமிக்கப்பட்டு, அமெரிக்காவின் பாஸ்டன், ஜெர்மனியின் பான் ஆகிய இடங்களில் இருக்கும் மத்திய செயல்முறை மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்தத் தரவுகளை செயல்முறைப்படுத்த கேட்டி உருவாக்கிய அல்காரித முறை உதவியதால் கருந்துளையின் புகைப்படம் நமக்குக் கிடைத்துள்ளது.

இத்தரவுகளில் இருந்து புகைப்படத்தைப் பெறுவதற்காக, வேறுபட்ட அனுமானங்களோடு உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு அல்காரிதம்களுடன் செய்யப்பட்ட பரிசோதனை முயற்சிக்கு கேட்டி தலைமை தாங்கினார்.

இந்த அல்காரிதம்களால் கிடைத்த முடிவுகளை நான்கு தனிப்பட்ட குழுக்கள் பகுப்பாய்வு செய்து அவர்களின் கண்டுப்பிடிப்பின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தினர்.

‘‘வானியலாளர்கள், இயற்பியலாளர்கள், கணிதமேதைகள், பொறியாளர்களை ஒன்றாக உருக்கிய கொள்கலன்தான் நாங்கள். அதனால்தான், முடியாதது என்று முன்னர் நம்பப்பட்டதை சாதிக்க முடிந்தது’’ என்று கேட்டி பவுமேன் பெருமையோடு கூறியிருக்கிறார்.