மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிக முதலீடு செய்த பங்குகள்


மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிக முதலீடு செய்த பங்குகள்
x
தினத்தந்தி 20 April 2019 11:53 AM GMT (Updated: 20 April 2019 11:53 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிக முதலீடு செய்த பங்குகள் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.

நிர்வகிக்கும் சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, பங்கு மார்க்கெட், நிதிச்சந்தை, அரசு மற்றும் தனியார் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

பரஸ்பர நிதி துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் இத்துறையின் சொத்து மதிப்பு குறைகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்துறையினர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.23.16 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.89 சதவீத சரிவாகும். எனினும் மார்ச் மாதத்தில் சொத்து மதிப்பு 3 சதவீதம் அதிகரித்து ரூ.23.79 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது.

இந்நிலையில், மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிகம் வாங்கிய மற்றும் விற்ற 10 நிறுவனப் பங்குகள் பற்றி தெரிய வந்துள்ளது. என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப், இந்தியன் ஆயில், எஸ்.பீ.ஐ. லைப் இன்சூரன்ஸ், லார்சன் அண்டு டூப்ரோ, பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன் மற்றும் மாருதி சுசுகி ஆகிய 10 நிறுவனப் பங்குகளை இத்துறையினர் அதிக அளவு வாங்கி உள்ளனர்.

அதே சமயம் ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், பாரத் பெட்ரோலியம், எய்ஷர் மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ், ஐடிசி, பார்தி ஏர்டெல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் மற்றும் டைட்டான் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிகம் விற்பனை செய்துள்ளன.

ஓரளவு பாதுகாப்பானது

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.


Next Story