கடந்த 2018-ஆம் ஆண்டில் துணிகர-தனியார் பங்கு முதலீடு 2,600 கோடி டாலர் வெளியேறியது


கடந்த 2018-ஆம் ஆண்டில் துணிகர-தனியார் பங்கு முதலீடு 2,600 கோடி டாலர் வெளியேறியது
x
தினத்தந்தி 20 April 2019 12:02 PM GMT (Updated: 20 April 2019 12:02 PM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

கடந்த 2018-ஆம் ஆண்டில் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு 2,600 கோடி டாலர் வெளியேறி இருக்கிறது.

அமோக வளர்ச்சி

தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. மேலும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆலோசனையும் வழங்குகின்றன. இந்த நிறுவனங்களின் முதலீட்டை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. தனியார் பங்கு முதலீட்டின் ஒரு பிரிவாக துணிகர முதலீடு இருக்கிறது. இந்த முதலீட்டாளர்கள் புதிய மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர்.

நம் நாட்டில், கடந்த 2018-ஆம் ஆண்டில் 3,580 கோடி டாலருக்கு துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் அது 2,610 கோடி டாலராக இருந்தது. ஆக, முதலீடு 37 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

இவ்வகை முதலீடுகளை ஈர்க்கும் நிறுவனங்கள் ஓரளவு வளர்ச்சி கண்ட பின் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. அப்போது அந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருக்கும் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் தமது பங்குகளை விற்று விட்டு நல்ல லாபத்துடன் வெளியேறுகின்றன.

இந்த வகையில் கடந்த ஆண்டில் 2,600 கோடி டாலர் அளவிற்கு துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு விலகி உள்ளது. முந்தைய ஆண்டில் இவ்வாறு வெளியேறிய தொகை 1,300 கோடி டாலராக இருந்தது. ஆக, இரண்டு மடங்கு தொகை வெளியேறி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதிய பங்கு வெளியீடுகள் குறைந்துள்ளது. எனவே ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்கள் தற்சமயம் வெளியேற முடியாத நிலை உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். தேர்தல் முடிவுகளுக்குப் பின் பங்கு வெளியீடுகள் அதிகரிக்கும் என்பதால் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடுகளும் அதிகம் வெளியேற வாய்ப்பு உள்ளது.

ஆட்சி மாற்றம் குறித்த ஐயப்பாடுகள் உள்ளதால் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கூறி வந்த நிலையில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) இவ்வகை முதலீடு 26 சதவீதம் அதிகரித்து 1,000 கோடி டாலராக உயர்ந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் வர்த்தகம்

துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தக துறையில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் துறையும் இந்த நிறுவனங்களின் முதலீட்டை அதிகம் ஈர்க்கிறது.

Next Story