மரபைத் தாண்டிய புதுமை கண்டுபிடிப்புகள்


மரபைத் தாண்டிய புதுமை கண்டுபிடிப்புகள்
x
தினத்தந்தி 20 April 2019 12:15 PM GMT (Updated: 20 April 2019 12:15 PM GMT)

இன்றைய மாணவர்கள், பழகிய தடத்தில் இருந்து விலகிய வித்தியாசச் சிந்தனையால் பல அதிசயங்களைப் படைக்கிறார்கள்.

மரபைத் தாண்டிய புதுமை கண்டுபிடிப்புகளை சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தி இருக்கின்றனர்.

உப்புநீரில் இருந்து குடிநீரும் மின்சாரமும்

முதலில், உப்புநீரில் இருந்து ஒரே நேரத்தில் குடிநீரும் மின்சாரமும் தயாரிக்கும் கண்டுபிடிப்பைப் பற்றிப் பார்ப்போம்.

மின்னியல், மின்னணுவியல் பிரம்மாக்கள் சவும்யஜித், தீரஜ்குமார், பிரியா ஆகியோர் தங்களின் இக்கண்டுபிடிப்புப் பற்றிக் கூறியதாவது...

‘‘இன்றைக்கு மின்சாரம், குடிநீர் இரண்டும் அத்தியாவசியத் தேவையாக மாறியிருக்கின்றன. அவற்றை கடல்நீரில் இருந்து பெறும் விதத்தில்தான் நாங்கள் எங்கள் கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறோம்.

இதில் ஒரு தாமிரக் கலம், வளைவான பிரதிபலிப்புக் கண்ணாடி ஆகியவை முக்கிய பாகங்களாக இருக்கின்றன.

பிரதிபலிப்புக் கண்ணாடி, சூரியனின் உஷ்ணமான கதிர்களை தாமிரக் கலத்துக்குள் பிரதிபலிக்கிறது. அந்த தாமிரக் கலம் முழுவதும் கடல்நீரை நிரப்பியிருக்க வேண்டும். அப்போது நிகழும் வேதிவினையால், கடல்நீரில் இருந்து உப்பு பிரித்தெடுக்கப்படுவதுடன், குடிநீரையும் தருகிறது.

அது பற்றி விளக்குவது என்றால், சூரியக் கதிர்களின் சூட்டினால் உடனடியாக உஷ்ணமாகும் தாமிரக் கலம், கடல்நீரை மளமளவென்று கொதிக்க வைக்கிறது. அப்போது மூன்று விஷயங்கள் நடக்கின்றன.

அதாவது, கலத்தின் மேற்பரப்பு முழுவதும் உப்பு படிந்துவிடுகிறது. அதை கரண்டி மூலம் சுரண்டி எடுத்தால், சாப்பாட்டில் பயன்படுத்தத்தக்க உப்பு கிடைக்கும்.

கொதிக்கும் கடல்நீர், டர்பைன் எனப்படும் சுழலிக்கு அனுப்பப்படுகிறது. அப்போது அதனுடன் இணைக்கப்பட்ட ஜெனரேட்டர், மின்சாரத்தைத் தரும்.

உப்பெல்லாம் வெளியேறி தாமிரக் கலத்தில் மிஞ்சும் நீர், உப்பற்ற குடிநீராக மாறியிருக்கும்.

நாங்கள் சுமார் 8 மாத காலம் உழைத்து இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தினோம்.

இதற்கு, எங்கள் கல்லூரி இயக்குனர் சுப்பையா பாரதி, மின்னியல் துறைத் தலைவரும் கல்விப் பிரிவு துணை முதல்வருமான கே.என். ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் உதவியாக இருந்தனர்’’ என்றனர்.

ஸ்மார்ட் மின்சார பகிர்மானம்

‘எலக்ட்ரிசிட்டி’ போல ‘விட்ரிசிட்டி’ (Witricity) எனப்படும் புதுமையான மின் பகிர்மான முறையை இதே மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சார்ந்த விக்னேஷ், ஷியாம் ஆகியோர், மேலும் நால்வரின் உதவியுடன் உருவாக்கி இருக்கிறார்கள்.

அதுபற்றி அவர்கள் கூறியதாவது...

‘‘வயர் ஏதும் இல்லாமல் நடைபெறும் மின் பகிர்மானம்தான் விட்ரிசிட்டி. இது அதிக தொலைவுக்கு ஒத்துவராது. குறைந்த தூரங்களுக்கும், பெரிய அறை போன்ற இடங்களுக்குள்ளும் இது சாத்தியமாகும். இது ஒரு மரபு சாரா மின் பகிர்மான முறையாகும்.

இப்போதைக்கு, செல்போன் போன்ற எந்த மொபைல் உபகரணத்தையும் வயர் ஏதுமின்றி மிகச் சிறப்பாக இம்முறையில் சார்ஜ் செய்யலாம்.

இதில், மின் உபகரணங்களை சார்ஜ் செய்யும் சார்ஜர், அறையின் ஒரு மூலையில் இருக்கும். கண் மறைவாகவும் வைக்கலாம். மின் உபகரணங்களில் ஒரு மின்சார ரிசீவர் இருக்கும். சார்ஜர் வெளியிடும் மின் காந்த அலைகளை உள்வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட சாதனங்கள் மின்னூட்டம் பெறும்.

இதனால், அறை முழுவதும் அங்குமிங்கும் வயர்கள் தொங்கி அழகைக் குலைக்காது. முக்கியமான விஷயம், இதனால் கதிர்வீச்சு ஏதும் நேராது. மின்காந்த அலைகளின் பரிமாற்றம் மட்டுமே நடைபெறும்.

எங்கள் துறை மாணவர்களுக்கு மரபு சாரா எரிசக்திப் பிரிவில் கணினி உதவியுடன் பல திட்டச்செயல்களை முடிக்க மிகுந்த ஊக்கம் அளிக்கப்படுகிறது. அதனால்தான் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் சாத்தியமாகி இருக்கின்றன’’ என்றனர்.

மாணவர்களின் ‘மரபு சாரா’ சிந்தனை மதிப்புக்குரியது.

Next Story