சிறப்புக் கட்டுரைகள்

வேதனை கதையை நீக்கி சாதனை படைக்கும் பெண்கள்...! + "||" + Women who make the achievement of the record

வேதனை கதையை நீக்கி சாதனை படைக்கும் பெண்கள்...!

வேதனை கதையை நீக்கி சாதனை படைக்கும் பெண்கள்...!
‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்ற காலம் மாறி இன்று ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் நிலை வந்துவிட்டது.
இந்திய ராணுவத்தில் “காம்பட்” எனப்படும் போர்களத்தில் சண்டையிடும் பணிகளில் மகளிர் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக சேவை செய்கின்றனர். சி.ஆர்.பி. போன்ற துணை ராணுவ பிரிவுகளில் பெண்கள் பட்டாலியன் அணியில் முழுக்க பெண்களே பணி புரிகின்றனர். போர் விமான பிரிவிலும் பெண்கள் பைலட்டுகளாக பயிற்சி பெற்று வீர தீரத்தில் ஆண்களுக்கு நாங்களும் நிகர் என்று நிரூபித்துள்ளனர். காவல் துறையிலும் இதர அரசு பணிகளில் அதிகமாக பெண்கள் பங்குகொள்வது வரவேற்க வேண்டிய மாற்றம். அரசு பணிகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடு.

தேர்தல் பணியில் பெண் அதிகாரிகள் நடத்தும் வாகன சோதனையில் அதிகம் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. 2011-ம் ஆண்டு தேர்தலின் போது ஒரு பெண் வருவாய்த்துறை அதிகாரி நடத்திய சோதனையில் ஐந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது மறக்க முடியாது. இப்போதுள்ள இளம் சேலம் மாவட்ட கலெக்டர் துணிச்சலோடும், பொறுப்புணர்ச்சியோடும் செயல்பட்டு மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்பது உண்மையாகிறது. துணிச்சலோடு செயல்படுவதற்கு உறுதுணையாக இருப்பது கல்வி. அதிலும் பெண்களுக்கு கல்வி கொடுப்பது ஒரு குடும்பத்திற்கு விளக்கேற்றியது போல், அதன் பலனால் ஒரு தலைமுறை முன்னுக்கு வரும். குழந்தைகளை தாயுள்ளத்தோடு வழிநடத்தும் பல பெண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மயிலை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளியில் ஆசிரியைகள் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து மற்ற குழந்தைகளுக்கு இணையாக திறமையை வளர்த்து அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் காந்தாடு பஞ்சாயத்து யூனியன் அரசு தொடக்கப்பள்ளியின் ஆங்கில ஆசிரியை அபர்ணா மோஹன் தனது சொந்த பணம் செலவு செய்து பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தி குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேசவும், சரியாக உச்சரிக்க பயிற்சியும் அளித்துவருகிறார். மேலும் ரூ.7 லட்சம் கடன் பெற்று காணொலி மூலம் மாணவர்கள் பயில எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கியுள்ளார். இவரது தன்னலமற்ற சேவை செய்தியாக வந்து பலர் இவரது முயற்சியை பாராட்டி பள்ளிக்கு பொருளுதவி அளித்துள்ளனர். வீரர்களுக்கு விசேஷ பயிற்சி அளித்து அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் முத்திரை பதிக்க உதவி அளித்து வருகிறார். இத்தகைய கனவு ஆசிரியர்கள் உள்ளதால் தான் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் குறியீட்டில் 47 சதவீதம் எட்டி தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. அரசு பணி போட்டி தேர்வுகளில் பெண்கள் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறார்கள். பேனோ சபீன் என்ற பார்வை குறைவான மாற்றுத்திறனாளி தமிழ் பெண் அகில இந்திய அளவில் 2015-ம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ். போட்டி தேர்வில் வெற்றி பெற்று ஐ.எப்.எஸ். அதிகாரியாக பணிபுரிகிறார். இத்தகைய முன்னேற்றத்திற்கு நடுவே மனதை உறுத்தும் நடப்புகள் வேதனை அளிக்கின்றன. ஒரு வருடத்திற்கு சுமார் ஒரு கோடி பெண் சிசுக்கள் இந்தியாவில் கொல்லப்படுகின்றன. பெண் சிசு வதையால் முளைக்கும் பிரச்சினைகள் இவை. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு உண்மை நிகழ்வு. விவசாய குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவிக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பெண்ணுக்கு திருமணம் செய்ய சொத்து முழுவதும் விற்றால் கூட போதாது. அத்தகைய அவல நிலை. அந்த பெண் மூன்றாவது முறை கர்ப்பமுற்றாள். அடுத்தது பெண் குழந்தை என்றால் பிறந்த வீட்டிலிருந்து திரும்ப வேண்டாம் என்று கணவன் கறாராக கூறிவிட்டான். ஆனால் பிறந்தது பெண்குழந்தை. அபலை பெண் செய்வதறியாது தவித்தாள். அவளது சகோதரன் கணவனிடம் பேசி மனைவியை ஏற்றுக்கொள் மூன்றாவது குழந்தை இருக்காது என்ற உத்திரவாதம் அளித்தான், அப்படியாவது தங்கைக்கு வாழ்வு கிடைக்கும் என்ற ஆசையோடு! ஆனால் அவளுக்கோ உடன்பாடில்லை. வேண்டா வெறுப்பாக கணவன் வீட்டிற்கு சென்று மூன்றாவது கைக்குழந்தையை வெறும் உடம்போடு பனியில் உறையட்டும் என்று நெஞ்சை கல்லாக்கி வீட்டு வாசல் திறந்த வெளியில் போட்டுவிட்டு படுத்தாள். குழந்தை இறந்திருப்பாள் என்று நெஞ்சம் பதப்பதைக்க மறுநாள் எழுந்து பார்த்தால் குழந்தை உடம்பு பனியில் ஜில்லிட்டிருந்தது, ஆனால் மூச்சு நிற்கவில்லை. பச்சிளம் குழந்தைக்கு உயிரோடு போராடும் சக்தியும் வைராக்கியமும் இருக்கும்போது நான் ஏன் மனம் கலங்க வேண்டும் என்று அந்த தாய் மூன்று பெண் குழந்தைகளையும் போராட்டத்தின் நடுவே ஆளாக்கி வெற்றி கண்டாள். இத்தகைய வெற்றி போராட்டங்கள் வெறு சிலவே.

சோகங்கள் பல. தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை மற்றும் பெண் குழந்தைகள் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளால் வட மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் இங்கில்லை. பெண்கள் குரல் எங்கும் ஒலிக்க வேண்டும் என்பதை விட அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் கேட்கப்பட வேண்டும், தீர்க்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை கோரிக்கை. பெண்கள் பாதுகாப்பு பல மாநிலங்களில் நகரங்களில் சவாலாக உள்ளது. பாலியல் கொடுமைகள் குறையவில்லை. டெல்லி நிர்பயா மானபங்க கொடுமைக்கு பிறகு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய நீதியரசர் வர்மா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு நல்ல பல பரிந்துரைகள் பெண்களுக்கு எதிரான வழக்குகள் துரிதப்படுத்தவும் பாதுகாப்பு பலப்படுத்தவும் அளிக்கப்பட்டன. நடைமுறைபடுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம். சென்னை பாதுகாப்பான நகரம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முதலிடம் வகிக்கிறது என்பதில் பெருமை கொள்ளலாம்.

இணையதளத்தில் வரும் ஆபாச படங்கள் கைபேசி புகைப்படங்கள் விரசமான தகவல் பரிமாற்றங்கள் காவல்துறைக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கு ஒரு சவால். பாலியல் கொடுமைகள் நிகழ்வதற்கு இவை காரணமாகின்றன. இயற்கை அழகு நிறைந்த பொள்ளாச்சியிலா இத்தகைய பாலியல் கொடுமைகள் என்று பதற வைக்கிறது. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே: அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் பெற்றோர் வளர்ப்பினிலே என்பது உண்மையாகிறது. ஆண் பிள்ளைகளை வளர்ப்பதில் மெத்தன போக்கு இதற்கு காரணம். சுதந்திரம் கட்டுக்கடங்காமல் போகக்கூடாது. அதற்கு ஒரு வரையறை உண்டு. அதை தாண்டவிடக்கூடாது. பெண் விடுதலை பெற்றாயிற்று ஆனால் அவள் சுதந்திரம் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு.

- நடராஜ் ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா புதிய சாதனை
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி புதிய சாதனை படைத்துள்ளது.
2. 2 பெண்கள் தீக்குளிப்பு எதிரொலி; சுற்றுச்சுவரை அகற்றிய பொதுமக்கள்
2 பெண்கள் தீக்குளிப்பு எதிரொலி; சுற்றுச்சுவரை அகற்றிய பொதுமக்கள்.
3. பள்ளி இடத்தில் கோவில் கட்ட பூஜை: ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளை பெண்கள் முற்றுகை
கந்தர்வகோட்டை அருகே பள்ளி இடத்தில் கோவில் கட்ட கிராமமக்கள் பூஜை செய்தனர். இதையடுத்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. நாகர்கோவிலில் பரபரப்பு மதுக்கடை அமைக்க கடும் எதிர்ப்பு மதுபாட்டில்களுடன் வந்தவாகனத்தை பெண்கள் முற்றுகை
நாக்கோவிலில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுபாட்டில்களுடன் வந்த வாகனத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
5. பெண்களை சமையல் கற்க சொல்வதா? - வித்யா பாலன் எதிர்ப்பு
பெண்களை சமையல் கற்க சொல்வதற்கு நடிகை வித்யா பாலன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...