35 நிறுவனங்களை முழுமையாக தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு


35 நிறுவனங்களை முழுமையாக தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு
x
தினத்தந்தி 22 April 2019 8:57 AM GMT (Updated: 22 April 2019 9:18 AM GMT)

35 நிறுவனங்களை முழுமையாக தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு

பொதுத்துறையில் 35 நிறுவனங்களை முழுமையாக தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

விற்பனை இலக்கு

சென்ற நிதி ஆண்டில் (2018-19) பொதுத்துறை பங்குகள் விற்பனை வாயிலாக ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் பங்குகள் விற்பனை அந்த இலக்கைத் தாண்டி ஏறக்குறைய ரூ.85 ஆயிரம் கோடியை எட்டியது.

நடப்பு 2019-20-ஆம் ஆண்டில் அரசுப் பங்குகள் விற்பனை இலக்கு ரூ.90 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டிற்கான முதல் இலக்கை விட (ரூ.80,000 கோடி) இது 12.5 சதவீதம் அதிகமாகும்.

பொதுத்துறையில், லாபகரமாக செயல்பட்டு வரும் துணை நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிட மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பட்டியல் ஒன்று தயாராகி வருகிறது. நிலக்கரி, மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய 3 முக்கிய துறைகளில்தான் பொதுத்துறை நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் லாபம் ஈட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 35 பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாக உரிமையை கைவிடும் வகையில் முழுமையாக தனியார்மயமாக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஏர் இந்தியா, பவான் ஹான்ஸ், பீ.இ.எம்.எல்., ஸ்கூட்டர்ஸ் இந்தியா, பாரத் பம்ப்ஸ் கம்ப்ரசர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் செயில் நிறுவனத்தின் பத்ராவதி, சேலம் மற்றும் துர்காபூர் உருக்காலைகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும் இந்துஸ்தான் புளோரோகார்பன், இந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட், எச்.எல்.எல். லைப் கேர், சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ், பிரிட்ஜ் அண்டு ரூப் இந்தியா, என்.எம்.டீ.சி.யின் நாகர்னர் உருக்காலை மற்றும் சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஐ.டி.டீ.சி. ஆகிய நிறுவனங்களின் சில பிரிவுகளையும் முழுமையாக விற்று விட மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஏர் இந்தியா

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா தொடர் இழப்பு கண்டு நலிவடைந்து இருக்கிறது. ஏராளமான கடன் சுமையும் உள்ளது. எனவே நிர்வாக உரிமையை கைவிடும் வகையில் இந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏ.ஏ.எஸ்.எல்., எச்.சி.ஐ., ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் மற்றும் ஏர் இந்தியா இன்ஜினீயரிங் சர்வீஸ் ஆகிய ஏர் இந்தியாவின் 4 துணை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட உள்ளது. இதில் முதலாவதாக ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் நிறுவனம் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story