இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு


இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு
x
தினத்தந்தி 22 April 2019 9:53 AM GMT (Updated: 22 April 2019 9:53 AM GMT)

முன்பேர வணிக கணக்கு முடிக்கப்படுவதால் இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு

மும்பை

முன்பேர வணிக கணக்கு முடிக்கப்படுவதால் இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் என சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

நிகர ஏற்றம்

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 373.17 புள்ளிகள் அதிகரித்து 39,140.28 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 109.35 புள்ளிகள் முன்னேறி 11,752.80 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். நடப்பு வாரத்தில் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், பங்கு முன்பேர வணிக கணக்கு முடிப்பு மற்றும் சர்வதேச நிலவரங்கள் பங்குச்சந்தைகளின் ஏற்ற, இறக்கங்களை தீர்மானிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதி வியாழக்கிழமை

மாதத்தின் இறுதி வியாழக்கிழமை என்பதால் வருகிற 25-ந் தேதி மார்ச் மாதத்திற்கான பங்கு முன்பேர வணிக கணக்கு முடிக்கப்படுகிறது. பொதுவாக இந்த நாளில் பங்கு வியாபாரம் சரிவை சந்திப்பது வழக்கம். இதன் தாக்கத்தை 24-ந் தேதி (புதன்கிழமை) அன்றே உணர முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. சென்ற வாரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, எச்.டீ.எப்.சி. வங்கி, ஆர்.பீ.எல். வங்கி, மைன்ட்ரீ, ஐசிஐசிஐ லோம்பார்டு இன்சூரன்ஸ் உள்பட பல நிறுவனங்கள் தமது நிதி நிலை முடிவுகளை வெளியிட்டன.

நடப்பு வாரத்தில் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா வருகிற 25-ந் தேதி நான்காவது காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகளை வெளியிட இருக்கிறது. மேலும், இந்த வாரத்தில் யெஸ் வங்கி, ஹீரோ மோட்டோகாார்ப், டாட்டா ஸ்டீல், பார்தி ஏர்டெல், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், ஏ.சி.சி., எஸ்.பீ.ஐ. லைப், எச்.டீ.எப்.சி. உள்பட பல பெரிய நிறுவனங்களும் வெளியிட உள்ளன. குறுகிய கால அடிப்படையில் மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் பங்குச்சந்தைகளில் தாக்கம் ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பாரத ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 12 வரையிலான இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் மற்றும் திரட்டிய டெபாசிட் பற்றிய புள்ளிவிவரங்களை 26-ந் தேதி வெளியிடும் என தெரிகிறது. இதுவும் பங்கு வியாபாரத்தை பாதிக்கும் காரணியாக இருக்கும் தெரிகிறது. மார்ச் 29 நிலவரப்படி வங்கிகள் ஏறக்குறைய ரூ.97.67 லட்சம் கோடி கடன் வழங்கி இருந்தன. மேலும், வங்கிகள் திரட்டிய டெபாசிட் 10.03 சதவீதம் உயர்ந்து ரூ.125.72 லட்சம் கோடியாக அதிகரித்தது.

புள்ளிவிவரங்கள்

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டு தொடர்பாக புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நடப்பு ஆண்டு மார்ச் மாதம் மற்றும் மார்ச் வரையிலான முதல் காலாண்டு தொடர்பான புள்ளிவிவரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதன்படியும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.

ரபி பருவம் (2018 அக்டோபர்-2019 மார்ச்) நிறைவடைந்துள்ள நிலையில் அது பற்றிய தகவல்களும் சந்தைகளின் வளர்ச்சியை தீர்மானிக்க வாய்ப்பு இருக்கிறது. உணவு தானியங்கள் உற்பத்தி பற்றிய மதிப்பீடுகளும் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்

நடப்பு வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் சர்வதேச நிலவரங்களும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்றவை இந்த வார வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



Next Story