சிறப்புக் கட்டுரைகள்

மனிதர்களை காப்பாற்ற வரும் மரபணு கொசு + "||" + Genetic mosquito that will save humans

மனிதர்களை காப்பாற்ற வரும் மரபணு கொசு

மனிதர்களை காப்பாற்ற வரும் மரபணு கொசு
கொசு கடிப்பதால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் நோய் பரவி மரணம் தழுவுகிறார்கள். ஆனால் கொசுக்களிடம் இருந்து மனிதர்களை காப்பாற்ற மரபணு மாற்ற கொசுக்களை உருவாக்கி உள்ளனர் விஞ்ஞானிகள்.
கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு, மலேரியா, மஞ்சள் காய்ச்சல், ஜிகா போன்ற நோய்களை கட்டுப்படுத்த உலகமுழு வதும் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சி நடக்கிறது. அமெரிக்க ஆய்வாளர்களும் பல வழிகளிலும் முயற்சித்து வருகிறார்கள். அதன் ஒரு படியாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் மூலம், கொசு இனத்தையும், அவற்றின் மூலம் பரவும் நோய் களையும் கட்டுப்படுத்த வழி கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பெண் கொசுக்கள்தான் மனிதர்களை கடிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவை மனிதனை அடையாளம் காண பிரத்தியேக வாசனையையும், அதை அறியும் உணர் உறுப்பையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நமது உடல் வெப்பம், வியர்வை போன்றவற்றின் மூலம் நாம் இருக்கும் இடத்தை 10 மீட்டர் தொலைவில் இருந்தே கொசுக்களால் அடையாளம் காண முடியும்.

புளோரிடா இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் மேத்யூ டிஜெனரோ மற்றும் குழுவினர் இது பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோது வியர்வை மூலம்தான் கொசுக்கள் மனிதர்களை அடையாளம் காணுகிறது என்பதை உறுதி செய்தனர். கொசுக்களின் உணர்கொம்புகளில் உள்ள ஐ.ஆர்.8ஏ என்ற மரபணுக்கள்தான் வியர்வை வாசனையை அறிந்துகொள்ள அவற்றுக்கு உதவுகிறது என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

நவீன மரபணு மாற்று நுட்பமான கிரிஸ்பர் கேஸ்9 மூலம் மரபணு மாற்றம் செய்த விஞ்ஞானிகள், கொசுக்களின் இந்த வியர்வை வாசனை மரபணுக்களை சிதைத்தனர். இதன் மூலம் ஏடிஸ் எகிப்தி இனத்தை சேர்ந்த பெண் கொசுக்களால் மனிதனை இனம் காண முடியாமல் போனது. அதனால் அவற்றுக்கு மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதில் ஆர்வம் குறைந்ததையும் கண்டறிந்தனர். இந்த மரபணுக்களை நீக்குவதால் கொசுக்களின் 50 சதவீத அளவுக்கு அதன் வாசனை சக்தி குறைந்துவிடுவது தெரியவந்தது. கொசு நோய்களை கட்டுப்படுத்துவதில் இந்த வெற்றியானது குறிப்பிட்ட மைல்கல் சாதனையாக கருதுகிறார்கள் இந்த விஞ்ஞானிகள் குழுவினர்.

ஏடிஸ் கொசுக்கள்தான் உலகில் சரிபாதி மக்களுக்கு நோய் பரப்ப காரணமாக இருக்கிறது. மேலும் பல லட்சம் பேர் சாகவும் காரணமாக இருக்கிறது. மரபணு மாற்ற முறையில் இவற்றுடன் போர் புரிவது கோடிக்கணக்கானவர்களின் உயிரை காப்பாற்றும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்தகட்டமாக அனைத்து கொசு இனங்களுக்கும் எப்படி மரபணு மாற்றத்தை பரப்புவது, அதன்மூலம் நோய் எதிர்ப்புக்காக போராடுவது என்பது பற்றிய ஆய்வைத் தொடர உள்ளது ஆய்வுக்குழு.