டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள் ஆல்டோ முதலிடத்தில் நீடிப்பு


டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள் ஆல்டோ முதலிடத்தில் நீடிப்பு
x
தினத்தந்தி 23 April 2019 6:03 AM GMT (Updated: 23 April 2019 6:03 AM GMT)

சென்ற நிதி ஆண்டில் டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள் ஆல்டோ முதலிடத்தில் நீடிப்பு

சென்ற 2018-19-ஆம் நிதி ஆண்டில், விற்பனை அடிப்படையில் அமைந்த டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்களும், ஹூண்டாய் நிறுவனத்தின் 3 மாடல்களும் இடம் பெற்றுள்ளன. இதில் மாருதி ஆல்டோ முதலிடத்தில் நீடிக்கிறது.

சியாம் புள்ளிவிவரங்கள்

இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

கடந்த நிதி ஆண்டில் மாருதி நிறுவனம் 2.59 லட்சம் ஆல்டோ கார்களை விற்பனை செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது 2.58 லட்சமாக இருந்தது. இதன்படி டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. மாருதி செடன் டிசையர் கார்கள் விற்பனை (2.40 லட்சத்தில் இருந்து) 2.54 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. இது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மாருதி சுவிப்ட் கார்கள் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தக் கார் விற்பனை 2.24 லட்சமாக இருக்கிறது. முந்தைய ஆண்டில் இதன் விற்பனை 1.76 லட்சமாக இருந்தது.

மாருதி பேலினோ கார்கள் விற்பனை 2.12 லட்சமாக இருக்கிறது. இது மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. மாருதியின் விதாரா பிரெஸ்ஸா இரண்டு இடங்கள் முன்னேறி 5-வது இடத்திற்கு வந்துள்ளது. இந்தக் கார் விற்பனை (1.48 லட்சத்தில் இருந்து) 1.58 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார்கள் விற்பனை 1.40 லட்சமாக உள்ளது. டாப் 10 பட்டியலில் இந்தக் கார் 6-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இந்த கார்கள் விற்பனை 1.36 லட்சமாக இருந்தது. கிராண்டு ஐ10 கார் சென்ற நிதி ஆண்டில் 7-வது இடத்தில் இருக்கிறது. இந்த கார்கள் விற்பனை (1.51 லட்சத்தில் இருந்து) 1.26 லட்சம் கார்களாக குறைந்து இருக்கிறது.

வேகன் ஆர்

ஹூண்டாய் எஸ்.யூ.வி. கிரெட்டா விற்பனை 1.24 லட்சமாக உயர்ந்துள்ளது. இது எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் 9-வது இடத்தில் இருந்தது. மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை 1.20 லட்சமாக இருக்கிறது. இது ஐந்தாவது இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு சென்றுள்ளது. மாருதியின் செலரியோ கார்கள் விற்பனை (94,721-ல் இருந்து) 1.03 லட்சமாக அதிகரித்துள்ளது. டாப் 10 பட்டியலில் இந்தக் கார் 10-வது இடத்தில் நீடிக்கிறது.

இவ்வாறு சியாம் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story